அரசு நிர்வாகத்துறை சீர்திருத்தத்தை மேற்கொண்டு சாதனை படைப்பாரா பிரதமர் மன்மோகன் சிங்!
, புதன், 16 ஜனவரி 2008 (12:50 IST)
கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் என்னுடைய நண்பர் அண்மையில் நடைப்பெற்ற அம்மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தமது வாக்கு உரிமையை இந்த முறை காங்கிரசுக்கு பதிலாக பா.ஜ.க. விற்கு சாதகமாக பதிவுச் செய்ததாக எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அவர் குறிப்பிட்டிருந்த காரணம் என்னத் தெரியுமா, அவருடைய வீட்டுக் குழாயைத் குளிக்கத் திறந்தால் அதிலிருந்து காற்று வந்ததுதான் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.இதேப்போல இன்று கைவண்டி, ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு வருவாய் காவல் துறையினருக்கு கையூட்டாக அல்லது மாமூலாக கொடுக்க வேண்டிய அவல நிலை தொடரத்தான் செய்கிறது. கிராமத்தில் உள்ள தனது நிலத்துக்கான முறையான, தெளிவான பட்டாவைப் பெறுவதற்கு ஏழை விவசாயி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டிய நிலையுள்ளது. குப்பத்தில் வாழும் சீக்கிய ஏழைப் பெண், அங்குள்ள அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக செல்லும் போது, அங்கு நிரந்தரமாக ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் நீடிக்கத்தான் செய்கின்றது. கிராமத்தில் வசிக்கும் தாய் ஒருவர், தனது கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்தில் நிரந்தரமாக ஒரு ஆசிரியர் இருந்து தனது பிள்ளைகளுக்கு ஏதோ கொஞ்சம் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மேற்கண்டவற்றின் மூலம் ஒரு அரசு எந்த வகையில் சாமானிய மக்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்து உள்ளது என்பதை அறிய இயலும். ஆனால் இந்த நிலையில் தான் ஒவ்வொரு அரசுகளும் நிலைத்தடுமாறி தோற்றுப்போகின்றன. அன்றாட நிகழ்வுகளில் ஒரு அரசு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் சூழ்நிலையில், நாட்டில் வாழும் சாமானியனால் என்னதான் செய்யமுடியும். அவன் தனது இயலாமையை, கோபத்தை தேர்தலில் வாக்கு மூலம் வெளிப்படுத்துகிறான். தனது வாக்கு மூலம் ஒரு வகையான அரசியல் போக்கிரிகளை மாற்றி வேறொரு அரசியல் போக்கிரியிடம் அதிகாரத்தை கொடுக்கின்றான்.
சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தை அரசுக்கு எதிரான நிலை. அது வேறொன்றுமில்லை, ஒரு அரசின் அன்றாடத் தோல்விகளுக்கு எதிராக மக்கள் அளிக்கும் தண்டனைத்தான் அது. நம் நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், மாநில, மத்திய அரசுகள் எல்லாம் ஊழல் பணத்தில் திளைத்துக் கிடக்கின்றன. அதனால் உருவான நிர்வாகச் சீர்கேட்டால், தரமான பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடிநீர் போன்றவற்றைக் கூட செய்து தர முடியாத நிலையில் இந்த அமைப்புகள் உள்ளன. அரசியல்வாதிகள் தங்களின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று இப்போது நீங்கள் நினைக்கின்றீர்களா?ஜனநாயக அமைப்பில் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துவது மிகவும் எளிதான ஒரு காரியம். நம் நாட்டின் அரசாங்கங்களுடன் ஆட்சி நிர்வாகத்தை சேர்ந்தவர்களைத் தவிர வேறு எந்தவொரு அமைப்பும் நேர்மையற்ற வகையில் கருத்து முரண்பாடுகளுடன் செயல்பட்டது இல்லை. எந்தவொரு அமைப்பும் இது போன்று ஒரு பெரிய ஏமாற்றத்தை நமக்கு தந்ததும் கிடையாது.
நாங்கள் இளம் வயதினராய் இருந்த காலத்தில் பணியாற்றிய இந்திய பொது நிர்வாக பணியில் இருந்தவர்கள் எல்லோரும் இரும்புச் சட்டத்தைப் போல இருந்த நிலைக்கு காரணம் அவர்கள் எல்லாம் இங்கிலாந்து நாட்டின் வழித்தோன்றல்களாக இருந்தனர். இந்தியாவை சரியாக நிர்வகிக்க இங்கிலாந்து ஆட்சியாளர்களால் முடியாமல் போனதற்கு காரணம், அப்போது இந்திய ஆட்சிப் பணி முறை இல்லாததுதான் என்று அந்த காலத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். இன்று நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருப்பவர்களே நமது இந்திய ஆட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
கலப்பு பொருளாதாரத்தை வரன்முறைப்படுத்த கடந்த 1950 ஆண்டில் இலட்சியவாதியான நேரு நெறிமுறைகளை வகுக்கச் சொன்னார். அதற்கு ஆட்சி நிர்வாகத்தினர் நேருவுக்கு கொடுத்ததுதான் கோட்டா ( உரிமம் ) முறை. சமதர்ம சமுதாயம் என்ற உன்னதமான பெயரில், ஆயிரக்கணக்கான கட்டுப்பாடுகளைப் புகுத்தி நமது நாட்டின் தொழில்புரட்சியை முளையிலேயே கிள்ளியெறிந்தனர். எனது 30 ஆண்டுகால தீவிர வியாபார நாட்களில், உண்மையிலேயே என்னுடைய தொழில் குறித்து அறிந்து கொள்ள முயன்ற ஆட்சி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியைக் கூட பார்த்ததில்லை. ஏன், என்னுடைய தொழிலை முற்றிலும் அளிக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்ற நிலையிலும் அவர்கள் யாரும் அதனை தெரிந்துக் கொள்ள விரும்பவே இல்லை. இறுதியாக நமது தோல்விக்கு காரணம், கொள்கையில் குறைந்த அளவு ஈடுபாடு காட்டியது, பொது நிர்வாகத்தைக் கையாண்ட மோசமான விதமும்தான்.சரி, நிர்வாக சீர்கேடு எங்கு தொடங்குகிறது?, மோட்சத்தில் பிறந்த நம்முடைய அரசு நிர்வாக அதிகாரிகள் ஏன் இந்த அளவு இழிநிலைக்குச் சென்றனர்? இந்திய நாட்டில் உள்ள மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் ஏன் தங்கள் பணியைச் செய்வதில்லை?, தங்களுக்கு பொறுப்பு இருப்பதை உணர்ந்து கொள்ளாத அளவுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றதோ?ஓரளவுக்கு இந்தக் கூற்றில் உண்மை இருக்கிறது. அதேநேரத்தில் இந்த அரசு தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுள்ளது. ஆனால் அந்த மாற்றமும் இடதுசாரிகள், அதனைச் சார்ந்த தொழிற் சங்கங்களின் முடிவைப் பொறுத்தே நடக்கும். திட்டங்களைச் செயல்படுத்துவதில் நமக்கு உள்ள ஆற்றலுக்கும், திறமைக்கும் பல உதாரணங்களைச் கூறலாம்.
டெல்லி மெட்ரோ இரயில் திட்டம், முன்மாதிரி இந்தூர் பேருந்து போக்குவரத்து சேவை, முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பி.சி.கந்தூரி இருந்த போது, விரைவாக விரிவுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகள் ஆகியவை அசாதாரமான நிகழ்வுகள். ஆனால் நம்மால் எல்லாப் பணிகளிலும் அவ்வாறு செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக் காண்பிக்க வேண்டும்.அரசின் தற்போதைய நடைமுறையை மாற்றியமைப்பது தான் தமது பணிகளில் முக்கியமானதாக இருக்கும் என்று, கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு சில மாதங்கள் கழித்து டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். அரசின் நலத்திட்டங்கள் ஏழை - எளிய மக்களைச் சென்றடையும் வழிமுறைகளை மேம்படுத்தப் போவதாகவும், அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அப்போது கூறினார். பிரதமரின் பேச்சை நாம் மிகவும் கவனமாக எடுத்துக் கொண்டதோடு, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளால் மூழ்கிப்போனோம். மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவரை எதுவுமே நடைப்பெறாமல் நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் புஸ்வானமாகிப் போனது. நிர்வாக சீர்திருத்தம் நடைப்பெறுவதற்கான சாத்தியக் கூறு எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. அரசு ஊழியர்கள் இன்னும் கர்வத்துடனும், ஊழல் பேர்வழிகளாகவும், பொறுப்பற்றவர்களாகவுமே நீடிக்கின்றனர். அவர்கள் வேலை செய்கின்றார்களோ,
இல்லையோ ஆனால் பதவி உயர்வு மட்டும் அவர்களுக்கு வந்து விடுகிறது.
சரி இதற்கு முடிவு தான் என்ன? தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் அரசு நிர்வாகத்தை ஒழிக்க முடியாது. ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் அதனைத் தான் விரும்புகின்றனர். நமது அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், அவர்களைப் பயனுள்ளவர்களாகப் திறன் உயர்த்த வேண்டும்.
கடந்த 1979 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் அரசுப் பணியில் இருந்தவர்களைக் காட்டிலும் தற்போது 40 விழுக்காடு பேர் குறைவாக உள்ளனர். இதனால் ஆண்டுக்கு 100 பில்லியன் பவுண்டுகள் அரசுக்கு மிச்சமானது மட்டுமல்லாது, அரசின் நிர்வாகத் திறன் அதிகரித்துள்ளது. ஆஸ்ட்ரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் பொது நிர்வாகப் பணிகளில் உள்ள அதிகாரிகள் பொறுப்பு உள்ளவர்களாகவும், பயன்தரக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். சரியாக பணியாற்றாத அதிகாரிகள் கடுமையான விளைவுகளை மேற்கண்ட நாடுகளில் எதிர் கொள்கின்றனர்.அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஒன்றும் மன்மோகன் சிங்குக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. ஏனென்றால் அந்த முடிவை இடதுசாரிக் கட்சிகள் அனுமதிக்காது. ஆனால் அரசு நிர்வாகத்தை பயன் தரும் வகையில் மாற்றி அமைக்க மன்மோகன் சிங்கால் முடியும். அதேப்போல ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் மக்களுக்கு பொறுப்புள்ளவர்களாக நடக்க வைக்கவும் அவரால் முடியும்.
சீரமைப்புத் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய மற்றொரு குழுவை நியமித்தது மூலம் மன்மோகன் சிங் மீண்டும் ஒரு தவறைச் செய்துள்ளார். நிர்வாகச் சீர்திருத்தம் தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு குழுக்கள் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டு அவற்றின் பரிந்துரைகள் 50 ஆண்டுகளாக குப்பையில் போடப்பட்டு கிடக்கிறது. தற்போது தேவை என்னவென்றால் அமைச்சரவைச் செயலர் தலைமையிலான ஒரு அமலாக்க அமைப்பு மட்டும்தான்.
இந்திய அரசியல் வரலாற்றில் புதிய பொருளாதாரக் கொள்கையை கடந்த 1991- 93 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவால் வெற்றிக்கரமாக நடைமுறைப்படுத்தி சாதனைப்படைத்த அந்த முன்மாதிரியான காலக்கட்டத்தை மன்மோகன் சிங் சற்றுத் திரும்பி பார்க்க வேண்டும். அப்போது நரசிம்மராவ் சீர்திருத்தவாதிகளான மன்மோகன் சிங், ப.சிதம்பரத்தை மட்டும் கொண்டு வரவில்லை, கூடவே துணிச்சல் மிக்க ஏ.என்.வர்மா என்ற முதன்மைச் செயலரையும் கொண்டு வந்தார். வர்மாவின் அலுவலகம், சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் பணியை கண்காணிக்கும் மையமாக அப்போது திகழ்ந்தது. நாள்தோறும் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்த பணிகளை கையாண்ட வர்மாவின் நேர்த்தியான பணி போதுமான அளவில் பாராட்டப்படவில்லை. சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்க வர்மாவை நரசிம்மராவ் ஊக்கப்படுத்தினார். இது தான் அப்போது இருந்த பிரபலமான வியாழக்கிழமைக் குழுவாகும். இக்குழுவில் பொருளாதாரத் துறை சார்ந்த செயலாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இக்குழு சீர்திருத்த நடைமுறைகளை ஒருங்கிணைப்பது, கண்காணிப்பது, அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தருவது, நடைமுறைப்படுத்துவது என வாரத்திற்கு வாரம் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் கடுமையாக உழைத்தனர். தனது குழுவை மிகவும் கண்டிப்புடன் வழிநடத்தினார் வர்மா, எப்படியென்றால் யாருமே வியாழக்கிழமைகளில் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கமாட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இந்த கூட்டம் வியாழக்கிழமை தோறும் 2 மணி நேரம் தான் நடைபெறும். அப்போது சீர்திருத்தம் தொடர்பான கேள்விகள் வெளிப்படையாக எழுப்பப்படும். அக்கூட்டத்தின் இறுதியில் வர்மா, விவாதத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொகுத்து அறிக்கைத் தயார் செய்து அன்றைய தினமே அமைச்சரவையின் ஒப்புதலுக்காக திட்டத்தை கொண்டு செல்வார். அதனைத் தொடர்ந்து அந்த திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அடுத்த வாரமே தாக்கல் செய்யப்படும். அந்த பொன்னான காலத்தை எங்களைப் போன்ற பலர் எண்ணிப்பார்ப்பார்கள். அந்த அளவுக்கு எதிர்பார்ப்புகள் நிறைந்த காலம் அது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையான புதிய புதிய அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்த காலம் அது.
தற்போது ஒன்றும் காலம் கடந்து விடவில்லை. தனது வாழ்க்கையில் இரண்டாவது முறையாக வரலாற்றில் சாதனை படைக்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காலம் இன்னும் வாய்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதார சீர்திருத்தவாதியாக முதல்முறையாக வரலாற்றில் இடம்பிடித்தார். தற்போது நமது அரசின் செயல்பாட்டு நடைமுறையை மாற்றி, நமக்கு நல்ல நிர்வாகத்தை தர முயற்சி மேற்கொள்வது மூலம் இரண்டாவது முறையாக வரலாற்றில் மன்மோகன் சிங் இடத்தைப் பிடிக்க முடியும்.
-தாஸ்
கட்டுரையாளர்
புராக்டர் அண்ட் கேம்பிள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.