தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுத்தான். உலக பிரசித்தி பெற்ற இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் பொங்கலுக்கு 2 நாட்கள் கழித்து 17ஆம் தேதி நடைபெறும்.
இதற்காக அலங்காநல்லூர், மதுரை, திண்டுக்கல், தேனி, பாலமேடு, அவனியாபுரம் 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து கொம்பு சீவப்பட்ட காளைகள் சீறிபாயும். காளைகளை அடக்க இளம் வாலிப காளையர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். அதுமட்டுமின்றி தங்கள் காளைகளை யாரும் அடக்கி விடக்கூடாது என்பதற்காக அதன் உரிமையாளர்கள் தங்களது காளைகளின் கொம்புகளை சீறிவிட்டு பளபளப்புடன் வைத்துக் கொள்வார்கள்.
என்னதான் கொம்புகளை சீவி விட்டு தங்கள் காளைகளை வைத்திருந்தாலும் போட்டிப்போட்டுக் கொண்டு வாலிபர்கள் காளைகளை அடக்க பாயும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும். இதில் பல இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த வீர விளையாட்டுக்கு கடந்த ஆண்டு முதல் நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்து போட்டியை நடத்த அனுமதி அளித்து. இதனால் உயிர் பலி தவிர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு மகிழ்ச்சியாக முடிந்தது.
இது தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் திட்டமிட்டப்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா? என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் மதுரை மாவட்ட மக்களுக்கு இப்போதே ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 11ஆம் தேதி (நாளை) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியை பெற்றுத் தர வேண்டும் என்று அலங்காநல்லூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு அதிகம் இருந்தாலும் சில அமைப்புகள், மிருகவதை அதிகம் இருப்பதால் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக் கூடாது என்ற வாதத்தையும் முன் வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளை எங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வருகிறோம். அதற்காக சிறப்பு உணவும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே கடவுளின் கரிசனையோடு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அலங்காநல்லூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரகுபதி.
இது குறித்து தென் மண்டல ஐ.ஜி.சஞ்சீவ் குமார் கூறுகையில், ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடக்கும் பட்சத்தில் தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் தயாராக உள்ளது.
எது எப்படியோ! வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாயுமா? என்பது நீதிமன்ற உத்தரவை பொறுத்தே அமையும். ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று அலங்காநல்லூர் மக்களும், தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 11 மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். விடிவு கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!