போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்க அரசு விலகிக் கொண்டதை எதிர்த்துள்ள இந்திய அரசு, இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வே சரியான வழிமுறையாக இருக்கும் என்று கூறியுள்ளது.
இந்திய அரசின் எண்ணத்தை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதிபலித்துள்ளார். “சிறிலங்க அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. அத்திட்டத்தின் தர்க்க ரீதியான முடிவைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்” என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
உலக நாடுகளின் வற்புறுத்தலால் ராஜபக்ச அரசு ஏற்படுத்திய அனைத்துக் கட்சி மற்றும் நிபுணர்கள் குழு உருவாக்கிவரும் தீர்வுத் திட்டத்தையே நமது அயலுறவு அமைச்சர் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வாக சிறிலங்க அரசு உருவாக்கும் எந்தவொரு திட்டமும் தமிழர்களின் தார்மீக எதிர்பார்ப்பை ஈடேற்றுவதாக இருக்காது என்பது மட்டுமின்றி, தமிழர்களோடு பேசி இறுதி செய்யப்படாத எந்தத் தீர்வுத் திட்டத்தையும் அவர்கள் மீது திணிக்க முற்படுவது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
அது மட்டுமின்றி, தமிழர்களிடையே ஆதரவற்ற, அவர்களிடையே பிரதிநிதித்துவம் பெறாத அரசியல் அமைப்புக்களுடன் பேசி சிறிலங்க அரசு உருவாக்கும் எந்தத் திட்டத்தையும் இந்தியா ஏற்கக் கூடாது என்பது மட்டுமின்றி சிறிலங்க அரசுடன் இணைந்து எந்தத் தீர்வுத் திட்டத்தையும் உருவாக்கும் முயற்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியா ஈடுபடுவது பிரச்சனையை முற்றிலும் திசை திருப்புவதாகவே அமையும்.
இலங்கைத் தமிழர்களின் நியாயமான, ஜனநாயக அடிப்படையிலான எதிர்பார்புக்களுக்கு என்றுமே செவி சாய்யக்காத சிறிலங்க அரசு, தனது தமிழர் விரோத திட்டத்தை இந்தியாவின் துணையைக் கொண்டு நிறைவேற்றிடவே பெரிதும் முயன்று வருகிறது. 1986-ல் கையாண்ட அதே ராஜ தந்திரத்தை மீண்டும் கையாண்டு பிரச்சனையில் இந்தியாவைச் சிக்க வைத்து குளிர்காயவே ராஜபக்சே அரசு முயற்சித்து வருகிறது. எனவே இலங்கை இனப் பிரச்சனையில் இதுவரை கடைபிடித்துவரும் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தமிழர்கள் நலத்தை முழுமையாக உறுதிசெய்யும் நியாயமான, தீர்க்கமான அணுகுமுறையை இந்திய அரசு கடைபிடிக்கவேண்டும்.
ஏனெனில் இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் இரு நாடுகளில் வாழும் ஓரின மக்களாவர். இந்தியாவில் அனைத்துவித சுதந்திரத்துடனும் தாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும்போது, தங்களுடைய இனத்தினர் மிக மிக அருகிலுள்ள மற்றொரு நாட்டில் அந்நாட்டு அரசால் தொடர்ந்து ஒடுக்கப்படுவதை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தங்களைப் போல அவர்களும் முழு சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பதே தமிழ்நாட்டித் தமிழர்களின் விருப்பமாகும். அந்த நிலையை உறுதி செய்யக்கூடிய தீர்வு எட்டப்படுவதற்கு மற்ற நாடுகளுடன் (குறிப்பாக இப்பிரச்சனையில் நீடுபணியாற்றிய நார்வே உள்ளிட்ட நாடுகளுடன்) இணைந்து இந்தியாவும் முயற்சிக்க வேண்டும். அதுவே அரசியல் ரீதியான தீர்வை எட்டுவதற்கான சரியான அணுகுமுறையாக இருக்கும். இதற்கு மாறாக சிறிலங்க அரசுடன் இணைந்து, ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வுகளை “அதிகார பகிர்வு” என்று கூறி திணிக்க முற்பட்டால் அது பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவது மட்டுமின்றி, இந்தியத் தமிழர்கள் மத்தியிலும் கசப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடும்.
இங்கு மற்றொரு சிந்தனையையும் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை இனப் பிரச்சனைக்கு, இந்திய அரசமைப்பு அடிப்படையிலான (மத்திய, மாநில அரசுகள் என்ற நிர்வாக அமைப்புகளை உருவாக்குவது) தீர்வே சரியானது என்பதே அது. நமது நாட்டிற்கு பொருந்தியுள்ள இந்த அமைப்பு நிச்சயம் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வைத் தராது என்பதே அரசியலாளர்களின் தீர்க்கமான கருத்தாகும்.
காரணம், இந்தியா பல்வேறு மொழி இனங்களைக் கொண்டதொரு கூட்டமைப்பாகும். இதில் எந்தவொரு மொழியினப் பிரிவும் மற்றவற்றின் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய அளவிற்கு அரசியல் (தேர்தல் ரீதியாக) பலத்தைப் பெறக்கூடிய வாய்ப்பில்லை. ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை, அங்கு சிங்களர்கள் பெரும்பான்மை மொழியினத்தவர்களாகவும், தமிழர்கள் சிறுபான்மை மொழியினத்தவர்களாகவும் உள்ளனர்.
எனவே, அங்கு ஆட்சி அதிகாரத்தை (வாக்கு ரீதியாக) நிர்ணயிக்கும் சக்தியாக சிங்களர்கள் உள்ளனர். இலங்கை இனப்பிரச்சனைக்கு தோற்றுவாயாக இருந்ததே இந்த சிங்கள பொரும்பான்மை நிலைதான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சிங்கள மக்களிடையே இன ரீதியான பிரச்சாரத்தைச் செய்தே அங்கு ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படுவது வாடிக்கையாகவுள்ளது. இலங்கையை சிங்கள தேசமாகவே தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். அதனையே தங்கள் கொள்கையாக்கி, “தமிழர்களுக்கு விட்டுத்தர மாட்டோம்” என்று பிரச்சாரம் செய்து ஒவ்வொரு தேர்தலிலும் தென்னிலங்கைக் கட்சிகள் வெற்றிபெற்றும் வருகின்றனர். அவர்களின் செல்வாக்கே ஆட்சி அதிகாரத்தை நிர்ணயம் செய்கிறது.
எனவே ஒரு பெரும்பான்மை மொழியினத்தையும், ஒரு சிறுபான்மை மொழியினத்தையும் கொண்ட இலங்கையில் இந்திய அரசமைப்பை மாதிரியாகக் கொண்டு தீர்வு காண முயற்சிப்பது சரியாகாது. ஒரே நிலப்பரப்பில் இரண்டு வெவ்வேறு இனங்கள், கலப்பின்றி தனித்தனியாக வாழ்ந்துவரும் நிலை இலங்கையில் உள்ளது. அதனால், தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாக முன்வைக்கப்படும் எந்தவொரு திட்டமும் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தை அங்கீகரிப்பதாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்திவரும் அமெரிக்கா கூட, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியதை கருத்தில் கொள்ளவேண்டும்.
எனவே பிரச்சனையை இந்திய கோணத்திலிருந்து அணுகுவதை தவிர்த்துவிட்டு, அங்குள்ள யதார்தமான நிரந்தரக் கூறுகளை கருத்தில் கொண்டு நிரந்தரத் தீர்விற்கு நகரத் துவங்கவேண்டும். நிராகரிக்கப்பட்ட பழைய திட்டங்களை மீண்டும் கையிலெடுப்பது எதிர்பார்த்த பலனைத் தராது.
இன்றுள்ள நிலையில், இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் வாய்ப்பு உலக நாடுகளிடமிருந்து கை நழுவிப் போய்விட்டதாகவே தெரிகிறது. இனப் பிரச்சனை இலங்கைத் தமிழர்களுக்கும், சிறிலங்க அரசிற்கும் இடையிலான நேரடிப் பிரச்சனையாகிவிட்டது.
இலங்கைத் தமிழர்களின் தார்மீக உரிமைகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டுள்ளன. அதனை ஏற்றுக் கொண்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வந்தன. ஆனால் எந்தத் தீர்வுத் திட்டத்தை இதுவரை அளிக்காத சிறிலங்க அரசு, அதற்கான கதவுகளையும் அடைத்துவிட்டது.
இந்த நெருக்கடியான நிலையில், நார்வே உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து நீடித்தத் தீர்வு காண இந்தியா முயற்சிக்க வேண்டும். அதற்கு முதல் நடவடிக்கையாக சிறிலங்க அரசுடனான நெருக்கத்தையும், ராணுவ ரீதியிலான உறவுகளையும் முழுமையாக துண்டித்துக் கொள்ளவேண்டும். அப்படிச் செய்தாலே அது சிறிலங்க அரசிற்கு சரியான சமிக்கையை கொடுக்கும்.