இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் இந்த அளவிற்கு ஈர்த்ததில்லை என்று கூறும் அளவிற்கு நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.2002
ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சபர்மதி விரைவு ரயில் கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகே தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில், ஒரு பெட்டியில் இருந்த 58 பயணிகள் உயிரிழந்ததையடுத்து குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட (ஏற்படுத்தப்பட்ட) மதக் கலவரத்தில் 2,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.அதன்பிறகு அந்த ஆண்டின் இறுதியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. மொத்தமுள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 127 இடங்களில் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சர் ஆனார்.காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சியானது. 5
ஆண்டகளாக பதில் கிடைக்காத கேள்வி!
சபர்மதி விரைவு ரயிலிற்கு தீயிட்டுக் கொளுத்தியது முஸ்லீம் தீவிரவாதிகள்தான் என்றும், அதற்கு பதிலடியாக நடந்த கலவரம் யதார்த்தமான எதிர் வினைதான் என்றும் செய்யப்பட்ட பிரச்சாரம் குஜராத் வாக்காளர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக பா.ஜ.க.விற்கு அப்படியொரு பெரும் வெற்றியைத் தந்தது.
ஐந்தாண்டுக் காலம் நரேந்திர மோடி அரசு எவ்வித அரசியல் நெருக்கடியும் இன்றி ஆட்சி நடத்தியது. 2002 முதல் 2007 வரையிலான 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசின் நிர்வாகம் குஜராத் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றதாக கூறப்பட்டது.
கிராமத்திலிருந்து பெரு நகரங்கள் வரை கடந்த 5 ஆண்டுகளில் நிர்வாகம் முறையாக இயங்கியதாகவும், அன்னிய முதலீடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குஜராத்திற்கு கிடைத்ததாகவும் முதலமைச்சர் நரேந்திர மோடி கூறினார்.
பெரும்பான்மை ஊடகங்களும் மோடியின் இக்கருத்தை பிரதிபலித்தன. இதற்கு எதிராக தேர்தல் அறிவிக்கப்படும் வரை காங்கிரஸ் கட்சி கூட கேள்வி எழுப்பியதாகத் தெரியவில்லை.
ஆனால் ஒரு கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. 2002 தேர்தலில் பா.ஜ.க. பெற்ற பெருவெற்றிக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கோர கலவரத் தாண்டவமும் எப்படி நிகழ்ந்தது? அல்லது நிகழ்த்தப்பட்டது? என்பதே அந்தக் கேள்வியாகும்.
கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்ட சபர்மதி விரைவு ரயிலைக் கொளுத்தியது யார்? 58 பேர் உயிரோடு கொல்லப்பட்ட அந்த பெட்டிக்கு எப்படி தீ வைக்கபட்டது? உள்ளிருந்தா அல்லது வெளியிலிருந்தா? என்பதையறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் இன்னமும் தனது பணியை நிறைவு செய்யவில்லை. இக்குற்றத்தைச் செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளிலும் விசாரணை முடியவில்லை.ஆக, கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பாகவோ அல்லது 2,000 பேர் படுகொலை செய்யப்பட்ட கலவரம் தொடர்பாகவோ எந்த உண்மையும் சட்டப் பூர்வமாக வருவதற்குள் அடுத்த சட்டப் பேரவைத் தேர்தல் வந்துவிட்டது.சலசலப்பை ஏற்படுத்திய டெஹல்கா! 2001
ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு, தங்களை மிகவும் பாதித்த மதக் கலவரம் பற்றிய உண்மையை அறியாமலேயே அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு குஜராத் மக்கள் தள்ளப்பட்டனர்.
ஐந்தாண்டுக் கால ஆட்சியிலும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸிடமிருந்து பெரிய எதிர்ப்பு எதையும் சந்திக்காத முதலமைச்சர் நரேந்திர மோடி, தனது ஆட்சியில் குஜராத் மாநிலம் நன்கு முன்னேறிவருவதாகக் கூறி பிரச்சாரத்தைத் துவக்கினார்.சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் குஜராத் கலவரம் தொடர்பாக தாங்கள் ரகசிய கேமராவுடன் நடத்திய விசாரணை விவரங்களை டெஹல்கா நாளிதழ் வெளியிட்டது. அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய டெஹல்காவின் வெளியீடு ஏற்படுத்திய தாக்கம் வெகு விரைவிலேயே மறைந்துபோனது. இந்த நிலையில்தான் தனது ஆட்சியின் சாதனைகளை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிய முதலமைச்சர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரத்தைத் துவக்கும்வரை ‘வெற்றி நிச்சயம்’ என்ற (ஊடகங்கள் பெரும்பாலும் இப்படித்தான் செய்திகளை வெளியிட்டன) நிலையில்தான் பிரச்சாரம் செய்து வந்தார்.பிரச்சாரத்தை திசைமாற்றிய பிரச்சாரம்
நரேந்திர மோடிக்கு நிகராக வலிமையாக தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடிய மாநிலத் தலைவர் ஒருவரையும் பெற்றிராத காங்கிரஸ் கட்சி திணறிக்கொண்டிருந்த நிலையில் பிரச்சாரம் செய்ய வந்த அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி, எடுத்த எடுப்பிலேயே, “குஜராத் ஆட்சியாளர்கள் மரண வியாபாரிகள்” என்று கூற, பிரச்சாரம் சூடு பிடித்தது மட்டுமின்றி திசைமாறியது.
அதுவரை தனது ஆட்சியில் குஜராத் மாநிலம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகக் கூறிப் பிரச்சாரம் செய்துவந்த நரேந்திர மோடி, மத பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியது தனது ஆட்சிதான் என்று மார்தட்டியது மட்டுமின்றி, குஜராத் காவல்துறை நடத்திய போலி என்கவுன்டர்களை நியாயப்படுத்தினார்.
காவல்துறை என்கவுன்டர்கள் புதிதல்ல என்றும், அதனைத் தான் ஆதரிப்பதாகவும் கூறிய மோடி, குஜராத் காவல்துறையினரால் சொராபுதீன் ஷேக் “என்கவுன்டரில்” சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்திப் பேசினார். சொராபுதீன் ஏ.கே.47 துப்பாக்கியால் காவல் துறையினரைத் தாக்கிதாகவும், பாகிஸ்தானில் பயிற்சிபெற்றவர் என்றும், அப்படிப்பட்டவர்களை சுட்டுப் படுகொலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்று மோடி பேசினார் (சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்ட ‘என்கவுன்டர்’ எப்படி அரங்கேற்றப்பட்டது என்பதை விளக்கி தலைமை காவலர் அளித்த வாக்குமூலம்). மோடியின் இந்தப் பேச்சு, சொராபுதீன் என்கவுன்டர் தொடர்பான வழக்கில் அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு எதிரானது என்பதாலும், மத உணர்ச்சியையும், வன்முறையையும் தூண்டுவதாக உள்ளதென்று தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டதால் பெரும் சர்சையானது.
குஜராத்தின் முன்னேற்றத்தை மட்டுமே பேசி பிரச்சாரம் செய்துவந்த நரேந்திர மோடி, சோனியா காந்தியின் பிரச்சாரத்திற்கு பதிலளிக்க என்கவுன்டர் பிரச்சனையை கையிலெடுத்தது ஏன்? ஏனென்றால், “இஸ்லாமிய தீவிரவாத்த்தை தன்னால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், தனது ஆட்சி இல்லையென்றால் மீண்டும் அது தலை தூக்கிவிடும்” என்று சொல்லாமல் சொல்லி மத ரீதியாக குஜராத் மக்களை திசைதிருப்பினார் மோடி. “அவர்களை கட்டுப்படுத்த தானே சிறந்த ஆள்” என்பதைத்தான் கடந்த தேர்தலிலும் (குஜராத் வன்முறையிலும்) தனது பிரச்சாரமாக வைத்து வெற்றிபெற்றார். அதனால்தான் அதே பிரச்சார யுக்தியை மீண்டும் கையிலெடுத்தார்.
தேர்தல் ஆணையம் விளக்கம் கோரி தாக்கீது அனுப்பியதற்குப் பிறகும் தனது (மத ரீதியிலான) பிரச்சாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
ஆக, தனது தேர்தல் பிரச்சாரத்தின் வாயிலாக குஜராத் மக்களை நோக்கி முதலமைச்சர் நரேந்திர மோடி வைத்துள்ள ஒரே கேள்வி இதுதான்: முஸ்லீம்களை ஒடுக்கி, இந்துக்களின் (எந்த இந்துக்களின்?) ஆதிக்கத்தை உறுதிசெய்த தனது ஆட்சி தொடர வேண்டுமா? அல்லது சோனியாவும், மற்ற கட்சிகளும் கூறும் மதச்சார்பற்ற அரசு வேண்டுமா? என்பதே அது.
தங்கள் வாக்குளின் மூலம் குஜராத் மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு நரேந்திர மோடியின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமையுமா? என்பதே அகில இந்தியாவின் எதிர்பார்ப்பு.
இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், போட்டி கடுமையாக இருந்தாலும் மோடி குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்றே வாக்குக் கணிப்புகள் கூறியுள்ளன. குஜராத்தின் பல்வேறுதரப்பட்ட மக்களும் இருவேறு கூறாக வாக்களித்ததையும் வாக்குக் கணிப்புக்கள் எடுத்துரைத்தன. வாக்குக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரங்கள் மதவாத சக்திகள் எதிர்பார்த்த சமூகப் பிளவை (பெரும் அளவிற்கு) உறுதிபடுத்திவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தத் தேர்தல் முடிவு, குஜராத்தின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, நமது நாட்டின் அரசியல் போக்கிலும் சறுக்கலை ஏற்படுத்தலாம். 23 ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்போம்.