2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் சென்ற சொராபுதீன் ஷேக் தன்னைச் சுற்றிவளைத்த காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதையடுத்து, காவலர்கள் திருப்பிச் சுட்டதில் கொல்லப்பட்டதாக குஜராத் காவல்துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது.
சொராபுதீன் ஷேக் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நீத்தா ஜோரியிடம் வாக்குமூலம் அளித்த அஜய்குமார் பகவன்தாஸ் பார்மர் கூறியுள்ளார்.
நடந்தது இதுதான்...
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து சாங்லி என்ற ஊருக்கு சென்று சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த சொராபுதீனும், அவரது மனைவியும் பேருந்தில் இருந்து இறக்கி கைது செய்யப்படுகின்றனர். குஜராத் மாநில காவல்துறை துணைத் தலைமை ஆய்வாளர் பன்சாராவும், காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியனும் அவர்களை கைது செய்தனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு நவம்பர் 26 ஆம் தேதி காலை 4 மணிக்கு காவல் ஆய்வாளர் டாபி அளித்த உத்தரவிற்கு இணங்க, காவல் நிலையத்தில் இருந்த ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளை அஜய்குமார் பகவன்தாஸ் பார்மர் நரோல் சர்கிள் என்ற இடத்திற்கு கொண்டு வந்தார்.
அங்கு பன்சாராவும், ராஜ்குமாரும் உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் தினேஷ¤ம் இருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு மாருதி கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் பார்மரும், ஆய்வாளர் செளபேயும் காருக்குள் இருந்த சொராபுதீனை வெளியே இழுத்து கொண்டுவந்து ரோட்டில் தள்ளினர். அங்கிருந்த காவல் அதிகாரிகள் அவரை சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர்.
என்று தனது வாக்குமூலத்தில் காவலர் அஜய்குமார் பகவன்தாஸ் பார்மர் கூறியுள்ளார்.
இதிலிருந்து சொராபுதீன் ஷேக் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்ததாக மோடி பேசியது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகிறது. சொராபுதீனின் மனைவி கெளசர் பீயும் பிறகு எரித்துக் கொல்லப்பட்டார்.