காயவைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து வீணாகிப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்ற பக்தன் ஒருவரின் வேண்டுதலை ஏற்று அதனை வேலி அமைத்து இறைவன் பாதுகாத்த இடம் என்பதால் திருநெல்வேலி என்று அழைக்கப்படும் நெல்லையில் நடைபெறும் தி.மு.க இளைஞரணியின் முதல் மாநில மாநாடு கட்சியின் வரலாற்றில் மற்றும் ஒர் திருப்புமுனை பதிவு செய்யும் என்று அக்கட்சி வட்டாரங்களில் பெருமையுடன் பேசிக்கொள்கின்றன.
கடந்த 1980 ஆம் ஆண்டு தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை மாநிலம் தழுவிய அளவில் மாநாடு எதுவும் நடைப்பெற்றிராத நிலையில் தற்போது நெல்லையில் நடைபெறும் மாநாடு அதீத முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தி.மு.க.வை வழிநடத்தி வரும் 84 வயதான கருணாநிதியின் அரசியல் வாரிசாக, அவரது மகனும், கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு முடிசூட்டுவதற்கான முன்னோட்டம்தான் இந்த மாநாடு என்றும் கூறப்படுகிறது.
தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதன் தலைமை பொறுப்பில் இருந்து வரும் ஸ்டாலின், கிட்டதட்ட ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி தனக்கு பின்னர் தலைமை பொறுப்புக்கு கொண்டுவருவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட காலமாகவே அடித்தளம் அமைத்து வந்துள்ளார் என்பது அரசியல் வட்டாரங்களில் எல்லோரும் அறிந்ததுதான்.
கட்சியில் எப்போதெல்லாம் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ அப்போதெல்லாம் அவற்றைக் களையெடுக்க கருணாநிதி தவறியதில்லை.
நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்று கருணாநிதியால் பாராட்டப்படும் அளவுக்கு நெல்லை மாவட்டம் கருணாநிதியின் அன்புக்கு பாத்திரமாக மாறியது. பின் அதிலும் சிக்கல் உருவானது. கருணாநிதியால் தம்பி என்று அழைக்கப்பட்ட வைகோ, கட்சிக்காரர்களிடத்தில் மிகவும் நெருக்கமாக பழகியதாலும், அவருடைய பேச்சாற்றலாலும் கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவரானார்.
மூன்று முறை வைகோ-வை நாடாளுமன்ற உறுப்பினராக்கினார். இந்த காலக்கட்டத்தில் கட்சியில் வைகோ-வின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கு பின்னர் கட்சித் தலைமைக்கு ஏற்றவர் யார்? என்ற கேள்வி எழுந்த போது தன் மகன் ஸ்டாலினை விட வைகோ முன்னணியில் இருந்ததை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பதைத்தான் கடந்த 1993 ஆம் ஆண்டு தி.மு.க. இரண்டாவது முறையாக உடைந்ததற்கான காரணம் என்று அப்போதே அக்கட்சியில் பலரும் கூறினர். அவர்கள் எல்லாம் வைகோவுடன் பிரிந்து சென்றனர்.
அதனைத் தொடர்ந்து கட்சியில் ஸ்டாலினை முன்னிலைப் படுத்துவதில் கருணாநிதி மிகவும் கவனமாக செயல்பட்டு வந்தார். வைகோ என்ற வெளியில் இருந்து ஸ்டாலினுக்கு எதிராக கிளம்பிய சக்தியை கட்சியை விட்டு லாவகமாக தூக்கியெறிந்த கருணாநிதிக்கு, 14 ஆண்டுகள் கழித்து சொந்தத்திலேயே உருவான எதிர்ப்பு மிகவும் சிக்கலை தந்தது.
தனது மனசாட்சி என்று கருணாநிதியாலேயே அழைக்கப்பட்ட முரசொலி மாறனின் மகன்கள் (கலாநிதி, தயாநிதி) உருவில் எதிர்ப்பு கிளம்ப, சற்று ஆடித்தான் போனார் கருணாநிதி. ஆனால் அசந்து போய்விடவில்லை. இப்பிரச்சனையைக் அவர் கையாண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அப்போது ஸ்டாலினுக்கு எதிராக கிளம்பிய தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவியை பறித்ததோடு மட்டுமல்லாது, கட்சியில் தனக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்பதை அவர் தான் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் தெள்ளத்தெளிவாக உடன் பிறப்புகளுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தினார்.
தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை தன்னிடம் வைத்துக் கொண்டு, ஆட்சிப் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைப்பது கருணாநிதியின் திட்டமென்று அரசியல் வட்டாரங்களில் பொதுவாக கூறப்படுவதுண்டு.
இதனை உறுதி செய்வதுபோல, அக்கட்சியின் மூத்த தலைவரும், நிதி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன், திருச்சியில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் பேசியபோது, கட்சியின் பொறுப்பை ஏற்க இளைய தலைமை தயாராக வேண்டுமென்றும், அவர்களுக்குப் பின்னால் இருந்து பணியாற்ற மூத்த தலைவர்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார். பேராசிரியர் அன்பழகனின் இந்தப் பேச்சு, "ஸ்டாலினை அரியணையேற்ற அடிகோலிடும் பேச்சு” என்று அப்போதே அக்கட்சி வட்டாரங்களில் வர்ணிக்கப்பட்டது.
எனவே, மு.க. ஸ்டாலின் கட்சிப் பொறுப்பிலும், ஆட்சிப் பொறுப்பிலும் 2வது இடத்திற்கு கொண்டுவருவதற்கான முதல்கட்ட நடவடிக்கை நாளை நெல்லையில் துவங்குகிறது.
பழையன கழிதலும், புதியன புகுதலும்... என்ற பழமொழிக்கேற்ப கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகார மையமாக விளங்கிவரும் தனது மகன் ஸ்டாலினிடம் அதிகாரப்பூர்வமாக அதிகாரத்தை மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஒன்று தான் இந்த இளைஞரணி மாநாடு என்றும் கூறப்படுகிறது.
கட்சியிலும், ஆட்சியிலும் எப்படிப்பட்ட முக்கிய பதவி அளிக்கப்பட்டாலும் அது மு.க. ஸ்டாலினிற்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கும். அந்த சவால்களை அவர் சமாளிப்பதைப் பொறுத்து அவரின் தலைமையும், தி.மு.க.வின் எதிர்காலமும் அமையும்.