Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசியா : உரிமை கோருவது பிரிவினை ஆகாது!

மலேசியா : உரிமை கோருவது பிரிவினை ஆகாது!
, செவ்வாய், 11 டிசம்பர் 2007 (20:21 IST)
webdunia photoFILE
மலேசிய நாட்டில் ஒன்றரை நூற்றாண்டிற்கு மேலாக அந்நாட்டின் உயர்விற்கும், செழுமைக்கும் தங்களது உழைப்பால் பங்களித்த இந்திய வம்சாவழியினர், தாங்கள் அந்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்படுவதாக குரல் எழுப்புவதை பிரிவினையைத் தூண்டும் நடவடிக்கை என்று மலேசிய அரசு கூறியுள்ளது மட்டுமின்றி, மலேசிய இந்தியர்களின் உரிமைகளை உலகத்தின் காதுகளுக்கு எட்டச் செய்த ஹின்‌ட்ராஃப் தலைவர்கள் மீது தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது!

தங்களது நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் ஒரு சமூகம், சம உரிமையும், சம வாய்ப்பும் கேட்டு பல முறை கோரிக்கைகள் அனுப்பியும் செவி சாய்க்காத காரணத்தினால் அமைதி வழியில் ஒரு பேரணி நடத்த முற்பட்டதை அந்நாட்டு அரசு பிரிவினைக்கான முயற்சி என்று கூறுவதை விவரம் தெரிந்த எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மலேசிய இந்தியர்களுக்காக போராடத் துவக்கப்பட்ட அமைப்பான ஹிந்து உரிமை மீட்பு முன்னணி (ஹின்‌ட்ராஃப்) ஒரு வெகுசன அமைப்பு அல்ல. வழக்கறிஞர்கள் பி. உதயகுமார், வேதமூர்த்தி, கணபதி ராவ் உள்ளிட்ட சில வழக்கறிஞர்கள் உருவாக்கிய அமைப்பு அது. அவ்வளவே. ஆனால், அந்த அமைப்பு தங்களது நாட்டு அரசிடம் பெறமுடியாத, பெற முயன்று தோற்ற காரணத்தினால் அதனை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்கின்ற நோக்குடன் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவர்களே எதிர்பாராத வண்ணம், காவல் துறையின் கடுமையான கட்டுப்பாட்டையும் மீறி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் - அனுமதி மறுக்கப்பட்ட - அந்தப் பேரணியில் கலந்துகொள்ள கோலாலம்பூரில் திரண்டனர்.

அனுமதி அளிக்காத நிலையில் அப்படிப்பட்ட ஒரு பேரணி ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்றது சட்டத்தை மீறிய நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால், அதற்கான காரணம் உரிமைப் பிரச்சனைதானே தவிர, எந்தவிதத்திலும் பிரிவினைக்கான காரணமாக கருதுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஹின்‌ட்ராஃப் தலைவர்கள் அழைப்பு விடுத்து வெளியிட்ட அறிக்கை பிரிவினையைத் தூண்டுவதாக உள்ளது என்று அந்நாட்டு காவல்துறை தொடர்ந்த வழக்கை கிளாங் அமர்வு நீதிமன்றம் அடிப்படையற்றது என்று கூறி நிராகரித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்நாட்டின் நீதிமன்றமே, ஹின்‌ட்ராஃபின் நடவடிக்கை பிரிவினையைத் தூண்டுவதற்கான அடிப்படை ஏதுமற்றது என்று கூறியதற்குப் பிறகும், மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது பதாவி இந்தியர்களின் உரிமைக் குரலை பிரிவினை நடவடிக்கை என்று பேசியுள்ளார். அதன் தொடர்ச்சியாக மலேசிய காவல்துறை ஹின்‌ட்ராஃப் தலைவர்கள் மீது மீண்டும் தேச துரோக சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.

சம உரிமையும், சம வாய்ப்பும் கேட்பதற்கான அடிப்படை என்ன என்பதை ஹின்‌ட்ராஃப் தலைவர்கள் தெளிவாக விளக்கி வருகின்றனர். தங்களது நாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டது. கோயில்களை கட்டுவதற்கு இடம் ஒதுக்கித் தருமாறு கேட்டால் சாக்கடைக்கு அருகே இடஒதுக்கீது செய்வது, அரசிடம் இருந்து உரிமங்கள் பெறுவதில் புறக்கணிப்பு, கல்வி, வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பு வழங்கப்படாமை என்று தாங்கள் எல்லா துறைகளிலும் ஒடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

அவர்களுடைய இந்த குற்றச்சாற்றுகளை இதுவரை மலேசிய அரசின் எந்த அமைச்சரும் மறுக்கவில்லை. மாறாக, அவர்களுடைய உரிமைக் குரலை பிரிவினைக் குரலாக சித்தரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சிதான் மீண்டும் ஹின்‌ட்ராஃப் தலைவர்கள் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டிருப்பதாகும்.

இதுமட்டுமல்ல, மலேசிய இந்தியர்களின் உரிமை கேட்பை தேசத்தின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் என்று அந்நாட்டின் காவல்துறை தலைவர் மூசா ஹாசன் கூறியுள்ளார்.

webdunia
webdunia photoFILE
மலேசிய அரசு முற்றிலும் தவறான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதையே பிரதமரின் பேச்சும், அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் காவல்துறை எடுத்துவரும் நடவடிக்கைகளும், 31 இந்தியர்களை பிணையில் விடுவிக்காமல் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றத்தின் போக்கும் காட்டுகிறது.

உலகத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால், பிரிவினை அல்லது விடுதலைக்கான வித்து, அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை ஏவிவிட்டு ஒடுக்குவதில் இருந்துதான் விதைக்கப்பட்டுள்ளது என்பதனைக் காணலாம்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் கூட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதில் இருந்தும், மனித உரிமைகள் மீறப்பட்டதில் இருந்தும், உரிமை கேட்ட மக்களை ஒடுக்குவதில் இருந்தும்தான் துவங்கியது என்பதனை வரலாறு தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

அது காலனி ஆதிக்க காலம். இன்று அனைத்து நாடுகளும் விடுதலை பெற்று ஜனநாயகப் பாதையில் முழு உரிமைகளுடனும், சம வாய்ப்புகளுடனும் வாழ்ந்து வரும் காலம். இந்த காலத்திலும், தங்களுடைய குடிமக்கள் தங்களுக்கு வாய்ப்பு, உரிமை மறுக்கப்படுகிறது என்று குரல் கொடுக்கும் போது அந்த குறையைத் தீர்ப்பதற்குத்தான் அந்த அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, அதனை பிரிவினைக்கான முயற்சி என்று கூறி ஒடுக்க முயலுமானால், அந்த உரிமைக் குரலே விடுதலைக் குரலாக மாறிவிடும்.

மலேசிய அரசு இந்த வம்சாவழியினர் மட்டுமின்றி, அந்நாட்டில் உள்ள இதர சிறுபான்மை இனத்தவர்களின் நலன்களையும் எதிர்பார்ப்புகளையும் சம உரிமையுடனும், சம வாய்ப்பு அளித்தும் நிறைவேற்ற முன்வர வேண்டும். அதனைத் தவிர்த்துவிட்டு தனது அதிகார, ஆயுத பலத்தை கையில் எடுக்குமானால், அதுவே அந்த நாட்டை நிரந்தரச் சிக்கலில் தள்ளிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil