சமூக, கல்வி, தொழில், பொருளாதாரத்தில் தங்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்றும், மலேசிய நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றரை நூற்றாண்டுகளாக உடல் உழைப்பின் மூலம் பங்களித்த தங்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றும் கோரி மலேசிய இந்தியர்கள் நடத்திவரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு கடுமையாக ஒடுக்கி வருவது, அது கடைபிடித்து வரும் ரகசிய இன ஒடுக்கல் கொள்கைக்கு அத்தாட்சியாகவே உள்ளது!தங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலேசியாவிற்கு அழைத்து வந்து கடுமையான பணிகளில் ஈடுபடுத்திய பிரிட்டிஷ் அரசு, மலேசியாவிற்கு சுதந்திரமளித்த பிறகு அங்கு உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு உரிய சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுத் தரத் தவறிவிட்டது என்று கூறி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு பேரணியாகச் சென்று மனு கொடுப்பதற்காகச் சென்ற பல்லாயிரக்கணக்கான மக்களை தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்திருப்பது, மலேசிய அரசு அப்பட்டமாக மீறியுள்ளது மட்டுமின்றி, அந்நாட்டு அரசு ஒரு ஜனநாயக அரசு அல்ல என்பதனையும் நிரூபிப்பதற்கு போதுமானதாகும். கோலாலம்பூரில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மலேசிய இந்தியர்கள் மீது நடந்த தாக்குதல்களை அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டித்துள்ளன.ஒரு நாட்டின் குடிமக்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று உணர்ந்து அதனை வெளிப்படுத்த அமைதியான வழியில் பேரணி செல்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது, பொதுக்கூட்டங்களை நடத்துவது, அரங்கில் கூடி விவாதிப்பது ஆகியன சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஜனநாயக உரிமைகளாகும். ஆனால், மலேசிய அரசால் தாங்கள் பல்வேறு துறைகளில் புறக்கணிக்கப்படுகின்றோம் என்பதனை வெளி உலகத்திற்கு காட்டவும், அதற்கு காரணமாக இருந்துவிட்ட பிரிட்டிஷ் அரசிற்கு மனு செய்யவும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது மலேசிய அரசு தடியடி நடத்தியது, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது, பல நூற்றுக்கணக்கானோரை கைது செய்தது ஆகியன அந்த அரசு தனது மக்களின் ஜனநாயக உரிமைகளை வன்முறைத் தனத்தை ஏவி அடக்கியதுதான் உலகத்தின் பார்வையை ஈர்த்துள்ளது.
மலேசிய இந்தியர்களின் இந்த போராட்ட உணர்வு, அரசியல் தூண்டுதல் என்று அந்நாட்டு அரசு கூறியது. இப்படிப்பட்ட பேரணிகளை எல்லாம் நடத்தக் கூடாது என்று மலேசியப் பிரதமரே எச்சரித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இப்படிப்பட்ட 'அரசுக்கு எதிரான' நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஹின்ட்ரா·ப் என்று அழைக்கப்படும் மலேசிய இந்தியர் உரிமை முன்னணியின் தலைவர்களான வழக்கறிஞர்கள் வைதமூர்த்தி, உதயகுமார், கணபதி ராவ் ஆகியோரை கைது செய்து, அவர்கள் அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக மலேசியக் காவல்துறை தொடர்ந்த வழக்கு கிளாங் நீதிமன்றத்தால் ஆதரமற்றது என்று தீர்ப்பளிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வளவிற்குப் பிறகும் மலேசிய அரசு தனது அடக்குமுறைப் போக்கை நிறுத்தவில்லை. ஹின்ட்ரா·ப் தலைவர்களில் ஒருவரான கணபதி ராவையும், நீதிக் கட்சியின் கோபாலகிருஷ்ணனையும் கைது செய்துள்ளது. ஹின்ட்ரா·பின் மற்ற தலைவர்களும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட மனித உரிமை மீறல்களும், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் மலேசியாவில், அங்கு வாழும் பரம்பரை இந்தியர்களின் உரிமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
இதனை கடுமையாக விமர்ச்சித்துள்ள மலேசிய அமைச்சர் நஸ்ரீ அஜீஸ், மலேசியாவின் உள் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிடக் கூடாது என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
மலேசிய இந்தியர்கள் தங்களது உரிமைக்காகப் பல ஆண்டுகளாக போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளைப்பற்றி நன்கு அறிந்திருந்தும் தமிழ்நாட்டின் தலைவர்களோ அல்லது இந்தியத் தலைவர்களோ வெளிப்படையாக எந்த கருத்தும் கூறியதில்லை. போராடி வரும் மலேசிய இந்தியர்களும் இந்திய அரசின் ஆதரவையோ, தலையீட்டையோ கோரவில்லை. ஆனால், அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்புக் கொள்ளப்பட்ட ஜனநாயக உரிமைகளின் அடிப்படையில் பேரணி நடத்த முற்பட்டபோது, அதற்கு அனுமதி மறுத்தது மட்டுமின்றி, அமைதியாக ஒன்று கூடிய அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட பிறகுதான் தமிழ்நாட்டின் தலைவர்கள் மட்டுமின்றி, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் அரசு ரீதியான கண்டனத்தை வெளியிட்டன. இது அந்நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாது. மாறாக, அணிசேரா நாடுகளின் தலைமைப் பதவியை வகித்த ஒரு நாடான மலேசியா, தனது நாட்டில் உள்ள ஒரு இன மக்களை தொன்றுதொட்டு அடக்கி வருவது வெளி உலகத்திற்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கட்டவிழித்துவிட்ட காட்டுமிராண்டித்தனம்தான் அதற்கு எதிரான கண்டனங்களை ஈர்த்துள்ளது என்பதனை மலேசிய அமைச்சரும், அந்நாட்டுப் பிரதமரும், மலேசிய அரசுக்கு ஆதரவாகப் பேசும் அந்நாட்டின் தமிழ் அமைச்சர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
மலேசிய நாட்டின் முன்னேற்றத்திலும், அந்நாட்டு பொருளாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மலேசிய இந்தியர்கள் பெரும் பங்கு அளித்தும், மலேசிய ஏக போகத் தன்மையுடன் (Ketuanan Melayu) செயல்பட்டு வருகிறது என்று ஹின்ட்ரா·ப் கூறுகிறது.
இதற்கு மலேசிய அரசு ஆதாரப்பூர்வமாக பதிலளித்து மறுக்கட்டும். அதை விட்டுவிட்டு தங்களுடைய உரிமைகளுக்காகப் போராட முனைந்துவிட்ட மலேசிய இந்தியர்களை ஒடுக்க முற்பட்டால் அதனை இந்தியா உள்ளிட்ட எந்தவொரு உலக நாடும் வாய் மூடி பார்த்துக் கொண்டிருக்காது என்பதனை உணர வேண்டும்.
மலேசியாவில் மலேசிய இந்தியர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால், அந்நாட்டின் அரசில் இருந்து அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கு தொடர்ந்து உரிமை மறுக்கப்படுமானால் அது மலேசியாவை உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பாதிப்பிற்குள்ளாக்கும் என்பதனை அந்நாட்டு அரசு உணர வேண்டும்.