மதுரையில் திடீரென மிட்டாய் வியாபாரம் அதிகரித்து விட்டது. இதற்கு மதுரை மக்கள் அனைவரும் திடீரென மிட்டாயை விரும்பி சாப்பிட துவங்கி விட்டனர் என நினைத்து விடாதீர்கள். இதற்கெல்லாம் சில்லரை தட்டுப்பாடுதான் காரணம்.
“மதுரையில் 50 பைசா நாணயத்தை பார்ப்பதே அரிதாகி விட்டது. 50 பைசா நாணயம் இல்லாத காரணத்தினால் அரசு பேருந்து, தனியார் பேருந்து, டீ கடை, ஹோட்டல்கள், மருந்து கடைகள் என எல்லா இடங்களிலும் 50 பைசா நாணயத்திற்கு பதிலாக மிட்டாய் கொடுத்து சமாளிக்கின்றனர். இதனால் தான் மிட்டாய் வியாபாரம் அமோகமாக அதிகரித்து விட்டது” என்று மொத்த மிட்டாய் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
50 பைசா நாணயம் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம் மும்பையில் உள்ள பிளேடு தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகளவில் கிடைக்கும் எல்லா நாணயங்களையும் வாங்குவதே என்று சில பழைய இரும்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த பழைய இரும்பு வியாபாரிகள் 1 ரூபாய் நாணயத்திற்கு இரண்டு ரூபாயும், 50 பைசா நாணயத்திற்கு 1 ரூபாய் என இருமடங்கு விலை கொடுத்து தாங்கள் வாங்குவதாகவும், அதை மும்பை பிளேடு நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 1 ரூபாய், 50 பைசா நாணயங்களை வாங்கி விற்பது அதிகளவு இருந்தது. இப்போது நாணயம் கிடைப்பது குறைந்து விட்டது என்று பழைய இரும்பு வியாபாரிகள் நசீர், செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறும் போது, “முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் வேலை செய்பவர்களிடமும், சில பேருந்து நடத்துனர்களிடமும் நாணயங்களை வாங்கினோம். ஆனால் இப்போது அவர்களுக்கு நாணயம் கிடைப்பது குறைந்து விட்டது” என்று தெரிவித்தனர்.
பிரபல மிட்டாய் நிறுவனத்தின் மொத்த வியாபாரியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் கூறுகையில், “முன்பு நாங்கள் விற்பனை செய்த மிட்டாயை விட இப்போது இரு மடங்கு மிட்டாய் விற்பனை செய்கின்றோம். மருத்துவமனை, உணவு விடுதிகளில் கூட ஒரு டீ ரூ.3.50 பைசாவிற்கு வாங்கினால், மீதம் 50 பைசா நாணயத்திற்கு பதிலாக மிட்டாய் கொடுக்கின்றனர்” என்று கூறினார்.
பேருந்து நடத்துணரோ அல்லது வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வேலை பார்ப்பவரோ சில்லரை நாணயத்தை கொடுப்பதற்கு பதிலாக ஒரு பாட்டீல் மிட்டாய் கொடுத்தால், அவர் ரூ.15க்கும் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் கிராமப்புரங்களில் இயக்கப்படும் எல்லா பேருந்துகளிலும் சில்லரை நாணயத்திற்கு பதிலாக மிட்டாய் கொடுப்பதில்லை. அங்கு சில்லரை தட்டுப்பாடு இல்லை.
நகரில் இயக்கப்படும் பேருந்துகளில் சில்லரைக்கு பதிலாக மிட்டாய் கொடுப்பது பற்றி கருத்து தெரிவித்த மாநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரி, மாநகர பேருந்துகளில் அனுமதி பெறாமல் அவர்கள் (நடத்துநர்) மிட்டாய் கொடுக்கின்றனர் என்று தெரிவித்தார்.