Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசிய இந்தியர்கள் போராட்டம் எதற்காக?

மலேசிய இந்தியர்கள் போராட்டம் எதற்காக?

Webdunia

ஒரு நூற்றாண்டிற்கு மேலாக மலேசிய நாட்டில் பொருளாதார மேம்பாட்டிற்கு ஈடிணையற்ற பங்களித்த மலேசிய இந்தியர்கள், தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சம உரிமை அளிக்கப்படவில்லை என்றும், மலேசிய அரசு தங்களை திட்டமிட்டு புறக்கணித்து வருவதாகவும் கூறி நடத்திவரும் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது!

மலேசிய நாட்டு மக்கட்தொகையில் 8 விழுக்காடு இருக்கும் தாங்கள் இப்படி எல்லாத் துறைகளிலும் புறக்கணிக்கப்படுவதற்கு காரணம், தங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் மலேயாவிற்கு அழைத்து வந்த பிரிட்டிஷ் ஆட்சிதான் காரணம் என்று கூறி தங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பை பிரிட்டிஷ் அரசாட்சி ஈடுகட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு மனு அளிக்கச் சென்று மலேசிய இந்தியர்கள் மீது அந்நாட்டு காவல்துறை தடியடி நடத்திய, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்கள் மீது "சட்டப்பூர்வமான ஒரு அராஜகத்தை" கட்டவிழ்த்துள்ளது.

மகாத்மா காந்தியின் படத்தை ஏந்தி தங்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பெட்ரோனாக்ஸ் கோபுரம் முன்பு திரண்ட 10 ஆயிரம் மலேசிய இந்தியர்கள், பேரணி நடத்துவதற்கு அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் கூறி அமைதி வழியில் திரண்டிருந்த அவர்களின் மீது அராஜகத்தை ஏவியுள்ளது மலேசிய அரசு.

மலேசிய நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மலேய முஸ்லிம் இன மக்களுக்கு சாதகமாகவும், தங்களுக்கு பாதகமாகவும் மலேசிய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது மலேசிய இந்தியர்களின் (இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்) உரிமைக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்டுள்ள ஹின்டிரஃப் (இந்து உரிமை நடவடிக்கை முன்னணி) கூறுகிறது.

இந்தப் பேரணிக்கு அறைகூவல் விடுத்த ஹின்டிராஃப் அமைப்பின் தலைவர் வாய்த மூர்த்தி பொன்னுசாமி, வாய்த மூர்த்தி மனோகரன், கணபதி ராவ், ஆர். கங்காதரன் ஆகியோரை கைது செய்த மலேசிய காவல்துறை, அவர்கள் மீது அரசிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாற்றி நீதிமன்றத்தில் நிறுத்தியது.

இந்த வழக்கை விசாரித்த கிளாங் மாகாண அமர்வு நீதிமன்றம், அரசிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுமாறு இவர்கள் மூவரும் மக்களைத் தூண்டியதற்கு அரசு தரப்பு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை என்று கூறி இன்று அவர்களை விடுதலை செய்துள்ளது.

இன்று நேற்றல்ல, மலேயா நாடு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு 1857ல் சுதந்திரம் பெற்று மலேசியா என்று ஆன நாள் முதலே அங்கு இந்தியர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை.

உதாரணத்திற்கு, மலேசிய அரசிடம் இருந்து ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தான் 400 ரிங்கிட் (119 யு.எஸ். டாலர்) செலவு செய்ததாக செல்வராஜா ராமகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார். மற்றொருவர், ஓட்டுநர் உரிமத்திற்காக தான் விண்ணப்பித்து 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிட்டவில்லை என்று கூறுகிறார்.

தொழில் நடத்த, கல்வி கற்க தமிழர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. மலேசியாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக உள்ளனர் என்றும், அவர்கள் வறுமை நிலையில் வாடுகின்றனர் என்றும் ஹின்டிர·ப் கூறுகிறது.

பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் மலேசிய இந்தியர்களை அந்நாட்டு அரசு பாதித்துள்ளது. கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி பதாங் ஜாவா என்ற இடத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான மகாமாரியம்மன் கோயிலை அந்நாட்டு அரசு இடித்துத் தள்ளியது. இதற்கு மலேசிய இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2006 ஆம் ஆண்டில் கூட இவ்வாறு பல இடங்களில் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டதாக இந்து அமெரிக்கன் ·பவுண்டேஷன் எனும் அமைப்பு வெளியிட்ட மனித உரிமை அறிக்கை கூறுகிறது.

இதுமட்டுமல்லாமல், சாதாரண கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக் கூட அந்நாட்டு அரசு அனுமதி அளிப்பதில்லை. மாறாக, அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு எதிராக அந்நாட்டு தூதரகங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உடனடியாக அனுமதி அளிக்கின்றது. மலேசிய அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவோர் மீது உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது, கோயிலிற்குள் கூடினால் அந்தக் கோயிலே இடித்துத் தள்ளப்படும் என்று அச்சுறுத்துவது, கோயிலை மூடிவிட்டு கோயிலிற்குச் செல்லும் அனைத்துப் பாதைகளையும் அடைப்பது, சாதாரணமாகக் கூடினாலும் அந்த இடத்தில் ஆயுதம் தாங்கிய காவலர்களை குவித்து அச்சுறுத்துவது என மலேசிய இந்தியர்களை பல முனைகளிலும் மலேசிய அரசு மிரட்டி வந்துள்ளது.

இப்படி எல்லாவிதத்திலும் பாதிப்பிற்குள்ளான மலேசிய இந்தியர்கள், தங்களின் நிலைக்குக் காரணம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக தங்களை மலேயாவிற்கு அழைத்து வந்த பிரிட்டிஷ் அரசு, விடுதலைக்குப் பின்னர் மலேசியாவில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் தங்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் விட்டுச் சென்றதே காரணம் என்று கூறி அந்நாட்டு அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தாங்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மலேசியத் தமிழர்களின் நிலையை ஆராய பிரிட்டிஷ் அரசியால் ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மனுவை அளிக்கவே கோலாலம்பூரில் நேற்று கூடினர். மலேசியா விடுதலை பெற்றதக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய பேரணி அது என்று கூறப்படுகின்றது.

இதுவரை மலேசியாவிற்குள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த அந்நாடு வாழ் இந்தியர்களின் உரிமைக் குரல் கோலாலம்பூர் பேரணி மூலம் உலகத்தின் காதுகளுக்கு எட்டியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil