வீணாக ஆற்றில் செல்லும் தண்ணீரை தடுப்பணைகள் அமைத்து சேமித்தால், மாவட்டம் முழுவதும் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். பவானிசாகர் அணையின் கீழ் புறம், கொடிவேரிக்கு மேல்புறம், காளிங்கராயன் அணைக்கட்டு வரையிலும், கொடிவேரிக்கு கீழ் பகுதியிலும் தடுப்பணை கட்ட வேண்டும். பவானியில் கூடுதுறை, பவானியில் இருந்து ஈரோடு வரும் வழியில் ஆற்றை தடுத்து இரு தடுப்பணை அமைத்து மின் உற்பத்தி செய்யலாம். பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி என்ற இடத்தில் பவானி ஆறு இயற்கையாகவே 50 அடி ஆழத்தில் செல்கிறது. 100 அடி அகலத்தில் செல்கிறது. இந்த இடத்தில் தடுப்பணை அமைப்பதன் மூலம் செலவு குறைவதுடன் அதிக தண்ணீரை சேமிக்க முடியும். பவானிசாகர் அணையில் இருந்து ஈரோடு வரை தண்ணீரை தேக்கி வைக்க பல்வேறு சாத்தியக்கூறுகள் உள்ளன. தடுப்பணை அமைத்து தண்ணீரை சேமித்தால் குறைந்தபட்சம் 5 முதல் 7 டி.எம்.சி., வரை தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் சுப்பு கூறியதாவது, ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உயிர் நாடியாக உள்ள பவானிசாகர் அணையில் 120 அடி வரை தண்ணீரை தேக்க முடியும். தற்போது அணையில் 15 அடிவரை சேறும் சகதியுமாக உள்ளதால், 105 அடி மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன்பின் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வீணாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தண்ணீரை தேக்க வேறு அணைகள் ஏதும் இல்லாமல் கடலுக்கு செல்கிறது.
தடுப்பணை கட்டப்பட்டால், அணையில் இருந்து வரும் தண்ணீருடன், மழை நீரையும் சேமித்து வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும். கூடுதலாக ஆற்றில் இரண்டு மின் அணைகள் அமைப்பதன் மூலம் குறைந்த செலவில் மின் உற்பத்தி கூடுதலாக பெறலாம்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால், வாய்க்கால் பாசனம் தவிர கிணற்று பாசனத்திலும் சாகுபடி பரப்பை அதிகரிக்கலாம். மாவட்டத்தில் நீர்பாசன பிரச்னை தீர்க்கப்படுவதுடன், மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க முடியும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.