புன்னகையுங்கள், புன்னகை பூத்த முகத்துடன் எப்போதும் இருங்கள் என்று எத்தனையோ ஞானிகள் கூறியிருக்கிறார்கள். புன்னகையோடு அவர்கள் கூறும்போது நம்மாலும் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது. ஆனால், அவ்வாறு இருக்க முடிவதில்லை. எப்போதும் புன்னகைக்க மனதால் மேற்கொள்ளும் முடிவு மட்டுமே போதுமானதாக ஆகாது. அதற்கு அகநிலையும், புறச்சூழலும், முதிர்ச்சியும், ஞானமும் அத்தியாவசியமானவை என்பதை யோசித்துப் பார்த்தால் நிச்சயம் உணரலாம். உலகில் பிறந்த எல்லோருமே பிறந்தவுடன் அழுதாலும், அன்னையால் பாலூட்டப்பட்ட பிறகு சிரித்துக்கொண்டுதான் இருந்துள்ளோம். அது குழந்தைப் பருவம். அப்பொழுது உரக்கத்தில் கூட முகத்தில் புன்னகை நிழலாடிக் கொண்டிருக்கும். ஆனால், வயது ஏற ஏற, நாம் வளர வளர புன்னகையெல்லாம் மாறி முகம் கடுமையாகி, பிறகு நமக்கும் புன்னகைக்கும் என்ன சம்பந்தம் என்பது போல மிகவும் இறுகி உள்ளோம். வாழ்கையின் சூழல், போராட்டம், பளு ஆகியன அந்த நிலையை ஏற்படுத்துகின்றன.
ஞானிகளால் எப்படி புன்னகைக்க முடிகிறது? அவர்கள் வாழ்க்கையை அடி முதல் நுனி வரை, பிறப்பு முதல் இறப்பு வரை, உணவு முதல் காமம் வரை, சொத்து முதல் சுகம் வரை அனைத்தையும் நன்கு உணர்ந்து தெளிந்ததனால் அகத்தில் இறுக்கமற்று, ஒரு உட்சுதந்திரத்துடனும், அழுத்தமற்றும், அமைதியுற்றும் உள்ளதால் புன்னகை பூத்த முகத்துடன் உள்ளனர்.
இந்த வித்தையை நமக்கும்தான் கற்றுத் தந்தனர். ஆனால், வாழ்க்கையை நாம் ஒரு கற்பித்ததலாகவோ, அறிதலாகவோ பார்க்கவில்லை. ஒவ்வொரு ஏற்ற இறக்கத்தையும் போராட்டம் அல்லது வெற்றி என்ற இரண்டே பார்வையால் பார்ப்பதால் நமக்கு எல்லாமே நிரந்தரமற்றுப் போகிறது.
சித்தம் போக்கு சிவன் போக்கு என்றொரு பழமொழி உண்டு. எதையும் பெரிதாக பொருட்படுத்தாமல், எதனையும் கண்டு அலட்டிக் கொள்ளாமல் (இறை சார்ந்து) வாழ்பவரை இப்படிக் கூறுகின்றனர். வாழ்க்கையின் போக்கை நமக்கு உகந்ததாக அல்லது நாம் விரும்பும் வகையில் மாற்ற மேற்கெர்ளளும் முயற்சியினால்தான் அது போராட்டமாகிறது. அதனின் போக்கை புரிந்துகொண்டால் ஒவ்வொன்றும் அதன்போக்கில் நிர்ணயித்த பாதையில் நிறைவேறிக் கொண்டிருப்பதை காணலாம் என்று கூறுகின்றனர். தத்துவமோ அல்லது ஆன்மீகமோ எதுவாயினும் வாழ்க்கையை பொதுவாகப் பார்க்கின்றன. நாம் வாழ்க்கையில் இருந்து நமது வாழ்க்கையை பிரித்துக்கொண்டு பார்ப்பதால் துயரமாகிறது என்று தத்துவம் கூறுகிறது. பிரச்சனை ஒன்று தீரும் போது மற்றொன்று பிறக்கின்றது. அதனை சந்தித்தே தீரவேண்டிய கட்டாயமும், தீர்வு காண வேண்டிய அவசியமும் மானுடருக்கு உண்டு. அதனை உளப்பூர்வமாக விரும்பி எதிர்கொண்டு தீர்க்க முயற்சித்தால் அதுவொரு போராட்டமாக இருக்காது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். இதனைத்தான் புன்னகையோடு வாழ்வது... அதாவது, புன்னகையுடன் வாழ்வை எதிர்கொள்வது. வாழ்வை புன்னகையுடன் பார், அதுவும் உன்னைக் கண்டு புன்னகைக்கும் என்று ஒரு ஆன்மீக ஞானி கூறுவது அர்த்தமுள்ளதுதான்.
செய்ய வேண்டியதை செய்தே தீரவேண்டும். சந்திக்க வேண்டியதையும் சந்தித்தே தீரவேண்டும். அதனை புன்னகையோடு எதிர்கொண்டு செய்தால் என்ன?
இன்றைக்கு எதற்கு இதெல்லாம்? என்று கேட்கத் தோன்றுகிறதா. இன்று உலக புன்னகை தினம்.