இந்த வெற்றி மைதானத்தின் கொண்டாட்டத்துடன் முடிந்துபோயிற்று. சமீபத்தில் சர்வதேச அளவில் நடைபற்ற ஸ்னூக்கர் போட்டியில் கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியனானார். இது மிக மிக பெருமைக்குரிய வெற்றியாகும். பில்லியட்ஸில் இந்திய வீரர்கள் நெடுங்காலமாக சிறப்பான நிலையில் இருந்தது மட்டுமின்றி, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர். அரவிந்த் சவூர், சாண்டில்யா ஹபீப், கீத் சேத்தி போன்றவர்கள் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர்கள்.
ஆனால், ஸ்னூக்கரில் அந்த நிலை இல்லை. அதனை சமீப காலமாக இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்கள் மாற்றி வருகின்றனர். அதன் உச்சமாக பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த பெருமைக்குரியதாகும். ஆனால், அந்த ஆட்டத்தை பரவலாக மக்கள் தெரியாதிருப்பதால் அதன் பெருமையும் பெரிதாக வெளிப்படவில்லை.
இருந்தாலும், அரசும், விளையாட்டு கூட்டமைப்புகளும் அந்த வீரர்களை (கிரிக்கெட் வாரியம் செய்வதைப் போல) நன்கு பெருமைப்படுத்தியிருக்க வேண்டும். இந்திய அரசு அர்ஜூனாவில் இருந்து ராஜீவ் கேல் ரத்னா வரை விருதுகள் வழங்கி கெளரவிக்கிறது. ஆயினும், ரொக்கப் பரிசும் வழங்குவது அவர்களின் திறனை மெச்சுவதாகவும், அதனை அங்கீகரித்து ஊக்குவிப்பதாகவும் அமையும்.
தமிழ்நாட்டிலும், ஆந்திரத்திலும், மராட்டியத்திலும் அற்புதமான கேரம் விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள், இருக்கின்றார்கள், உருவாகி வருகிறார்கள். டெல்லி, மரியா இருதயம், புண்ணியக்கோட்டி, ராதாகிருஷ்ணன், அந்தோணிராஜ் ஆகியவர்களின் ஆட்டம் நம்மை மெய்மறக்கச் செய்யும். ஆனால், அவர்களின் திறனிற்கு கிடைத்ததெல்லாம் சராசரி எழுத்தர் வேலையும், வெற்றிக் கோப்பையும், மெடல்களும்தான். ரொக்கப் பரிசென்று ஏதும் அளிக்கப்படாததால் அந்த முன்னாள் சாம்பியன்களின் வாழ்க்கை இன்று வரை சந்துகளுக்கு அமைந்துள்ள எலிக் கூண்டு வீடுகளில்தான் முடங்கிக் கிடக்கிறது.
இந்த நிலை மாறவேண்டும். மாநில அளவில், தேச அளவிலும், சர்வதேச அளவிலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு மாநில அரசுகளும், மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் ஒரு குறிப்பிட்ட ரொக்கப் பரிசை நிர்ணயித்து அளிக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்திற்கு இணையாக அவ்வளவு பெரும் தொகை வழங்க முடியாது என்றாலும், அவர்களின் வாழ்நிலை உயரக்கூடிய அளவிற்கு அந்த ரொக்கப் பரிசுகள் இருக்க வேண்டும்.