சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமேஸ்வரம் கடற்பகுதியில் உள்ள நிலத்திட்டு ராமர் பாலம் என்றும், அதனை இடிக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அதனை மறுத்து தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவை திருப்பப் பெற்றதும், அந்த மனுவை தயாரித்த இரண்டு மூத்த அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்திருப்பதும் மத்திய அரசின் முடிவு தடுமாற்றம் என்பது மட்டுமின்றி, தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிட்டது!
சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆழப்படுத்தப்படும் ராமேஸ்வரத்தை ஒட்டிய கடல் பகுதியில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே தொடர் நிலத் திட்டுக்களாய் உள்ள பகுதி இயற்கையாய் அமைந்ததே தவிர, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் ஒன்றுமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அந்த தொடர் நிலத் திட்டுக்களை ராமர் பாலம் என்று கூறி பிரச்சனையாக்கிவரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளும் கூட அது இந்துக்கள் நம்பும் ராமர் பாலம் என்றும், அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும்தான் கூறுகிறார்களே தவிர, அது ராமர் கட்டிய பாலம் என்பதற்கு எந்தத் தெளிவான வரலாற்று ஆதாரத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.
இந்த நிலையில்தான், இந்துக்கள் ராமர் பாலம் என்று நம்பும் அந்த நிலத் திட்டுக்களை சேது சமுத்திரத் திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்த சி்தைத்துவிடக்கூடாது என்று கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கில், அது குறித்து சரித்திரப்பூர்வமான, தொல்லியல் ரீதியான உண்மையை அறியவே நீதிமன்றம் விடுத்த தாக்கீதையடுத்து, இந்தியத் தொல்லியல் துறை உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுவை தாக்கல் செய்தது.
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே உள்ள அந்த நிலத் திட்டுக்கள் மனிதனால் கட்டப்பட்டவை அல்ல, இயற்கையானதுதான் என்றும், அது ராமர் பாலம் என்பதற்கு எந்தவிதமான மறுக்க முடியாத ஆதாரம் என்று ஏதுமில்லை என்றும் தனது மனுவில் கூறியிருந்த தொல்லியல் துறை, அவதாரம் என்று கருதப்படும் ராமர் வாழ்ந்ததற்கோ அல்லது ராமாயணம் நடந்ததாகக் கூறுவதற்கோ தொல்லியல் ரீதியான ஆதாரம் ஏதுமில்லை என்று தனது மனுவில் தெளிவாகக் கூறியிருந்தது.
ஆனால், இதனை ராமர் எனும் கடவுளை மறுப்பதாக மத்திய அரசு மனு செய்துள்ளது என்று பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் பிரச்சனையாக்க, ஏற்கனவே அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினால் தடுமாறிக் கொண்டிருக்கும் மத்திய அரசு, மற்றொரு பிரச்சனையை எதிர்கொள்ளத் தயங்கி, உச்ச நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றது.
அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இப்படிப்பட்ட நடவடிக்கையை எடுத்தது என்று சமாதானம் சொல்லிக் கொண்ட நிலையில், அந்த மனுவை தயாரித்ததாக கூறப்பட்ட தொல்லியல் துறை உயர் அதிகாரிகளை இடை நீக்கம் செய்ததுதான் என்ன நியாயம் என்று தெரியவில்லை.
நமது நம்பிக்கைகள் என்பது வேறு. ஆனால், தொல்லியல் துறையைப் போன்ற விஞ்ஞான அடிப்படையிலான ஒரு ஆய்வு அமைப்பு நம்பிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடுகளை வழங்க இயலாது என்பதை மத்திய அரசும், ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதாவும் மறந்துவிட்டுப் பேசுவதுதான் புரியாத புதிராக உள்ளது.
புவியியல் (Geology) எனும் விஞ்ஞானம் புவியின் தோற்றத்தில் இருந்து இந்தப் பூமி கடந்து வந்த பல்வேறு மாற்றங்களை பல்வேறு காலகட்டங்களாகப் பிரித்து, அந்தக் காலகட்டத்தில் தோன்றிய அல்லது மறைந்த விலங்கினங்கள், பறவைகள், மரம், செடி, கொடிகள் ஆகியவற்றையெல்லாம் மண்ணில் புதைந்து கல்லாகிவிட்ட ஆதாரங்களை கார்பன் டெஸ்ட் என்றழைக்கப்படும் சோதனையின் மூலம் அவைகளின் காலத்தை உறுதி செய்து ஜியோலாஜிக்கல் காலண்டர் என்றழைக்கப்படும் புவியின் பரிணாம வளர்ச்சியை நாட்காட்டியாக உருவாக்கியுள்ளது. உலகமே ஏற்று பாடமாக நமது பிள்ளைகளும் கற்றுவரும் விஞ்ஞானத்தை நாம் தொன்றுதொட்டு நம்பி வரும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளுமாறு எப்படி கட்டாயப்படுத்த முடியும்?இலங்கைக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே உள்ள அந்த நிலத் திட்டுக்கள் எப்படி தோன்றியவை என்பதையும், இதேபோன்று இரண்டு பெரும் நிலப்பரப்புகளை இணைக்கும் நிலத் திட்டுக்கள் உலகில் 41 இடங்களில் உள்ளதையும் ஏற்கனவே நாங்கள் விளக்கியுள்ளோம். (பார்க்க... சேது சமுத்திரத் திட்டமும் - ராமர் பாலமும்)எனவே, தொல்லியில் துறை ராமர் பாலம் குறித்து அளித்த விஞ்ஞானப்பூர்வமான முடிவை புறந்தள்ளும் இந்த அரசு, அயோத்தி பிரச்சனையில் அந்த இடத்தில் இருந்தது எந்த இந்து கோயிலோ அல்லது ராமர் கோயிலோ அல்ல என்று ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனுவையும் திரும்பப் பெறுமா? அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், சர்ச்சைக்குறிய அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து பல்வேறு ஆதாரங்களை தொல்லியல் துறைதான் நீதிமன்றத்தில தாக்கல் செய்துள்ளது. அவை அனைத்தும் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலான அறிக்கைகளாகும். அந்த ஆதாரங்கள் அங்கு ராமர் கோயில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவித்து அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அதனை இந்த அரசு ஏற்குமா? நிராகரிக்குமா? மத்திய அரசின் நடவடிக்கை பாரதிய ஜனதாவையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது. நாசா அளித்த செயற்கைக்கோள் படத்தை கண்ட பிறகுதான், பாரதிய ஜனதா உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் ராமர் பாலத்தைப் பற்றி பேச ஆரம்பித்தன. அதற்குமுன் அவ்வாறு பேசவில்லையே ஏன்? பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தபோதுதானே சேது சமுத்திர திட்டத்திற்கான ஆய்வும், அதன் அடிப்படையில் ஒப்புதலும் வழங்கப்பட்டது. அப்பொழுது ராமர் பாலம் பிரச்சனையே எழவில்லையே. நாசா படத்தை காட்டியவுடன் இவர்கள் புதிதாக கதை புனைந்தார்கள். அதனை ஆதாரமற்றது என்று தொல்லியல் துறை மறுத்தது. இதில் மத்திய அரசு கவலைப்பட என்ன இருக்கிறது. இந்திய மக்களுக்கு ஸ்ரீ ராமர் மீது பக்தியும், நம்பிக்கையும் எப்போதும் இருக்கும். ஏனெனில் தாங்கள் வணங்கும் கடவுள்களின் மூலங்களை ஆதாரப்பூர்வமாக தெரிந்துகொண்டு வணங்குபவர்கள் அல்ல அவர்கள். அது ஆன்மீக ரீதியானது. தனி மனித நாட்டத்தின் அடிப்படையிலான ஆத்மார்த்த விஷயம் என்பது அவர்களுக்குப் புரிந்துதான் உள்ளது. எனவே, பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் இதுதான் ராமர் பாலம் என்று எதையாவது சாதிக்க நினைத்தால், அதனை நிராகரிக்கக்கூடிய சிந்தனை ஆற்றலும் இந்திய மக்களுக்கு உண்டு. அவர்கள் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்துத்தான் வாக்களிக்கின்றனர். அவர்களை ராமரை வைத்தும் ஏமாற்ற முடியாது, கிருஷ்ணரை வைத்தும் ஏமாற்ற முடியாது. ஆனால், தான் ஆளும் மக்களின் சிந்தனைத் திறனை உணராமல் தான்தோன்றித்தனமாக முடிவெடுத்துவிட்டு தத்தளிக்கின்றது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சேது சமுத்திரத் திட்டத்திற்கு மட்டுமல்ல, விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மனப்பான்மைக்கும் வேட்டு வைப்பதாகும்.