நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் எடுத்து வைக்கப்படும் கருத்துக்களையும், வாதங்களையும் முழுமையாக அறிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும், அதன் மூலம் அரசின் நடவடிக்கைகள் சரியா? தவறா? என்பதை முடிவு செய்யும் உரிமையை ஜனநாயகம் வாக்களிக்கும் மக்களுக்கு அளிக்கிறது.
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கக்கூடிய அரசின் முடிவுகள் அனைத்தும் சரியா? தவறா? என்பதனை உரசிப் பார்க்கும் இடம் ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் நாடாளுமன்றமாகவே இருக்கின்றது. ஜனநாயகத்தின் உயிர்த் துடிப்பாக நாடாளுமன்றம் இருப்பதால்தான் ஜனநாயக அரசியல் அமைப்பை "நாடாளுமன்ற ஜனநாயகம்" என்று அழைக்கப்படுகிறது.
ஆக, ஒவ்வொரு பிரச்சனையிலும் அரசு, எதிர்க்கட்சிகள் இவ்விரு தரப்பையும் சாராத மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் எடுத்து வைக்கும் கருத்தைக் கொண்டும், அதற்கு அரசின் சார்பாக பிரதமரோ, அமைச்சரோ அளிக்கும் பதிலைக் கொண்டும் மக்கள் கருத்து தெளிவுபெற வழிவகுக்கிறது நாடாளுமன்ற நடவடிக்கைகள்.
நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சிகள், மற்ற கட்சிகள் ஆகியவை ஏற்படுத்தும் அமளியின் காரணமாக ஒவ்வொரு நாளும் தள்ளிவைக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு இயங்கவிடாமல் தடுக்கப்பட்டு வருவது வருத்ததிற்குரியது.
இந்த நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கி நேற்று வரை 32 நாட்களில் 17 நாட்கள் மட்டுமே அவை நடந்துள்ளது. அதில் மக்களவை 41 மணி நேரமும், மாநிலங்களவை 42 மணி நேரமும் தள்ளிவைக்கப்பட்டே வீணாகியுள்ளன. இதனால் மக்களவை விவாதித்து நிறைவேற்றியிருக்க வேண்டிய 11 சட்ட முன்வரைவுகளும், மாநிலங்களவை 5 சட்ட முன்வரைவுகளும் விவாதிக்கப்படாமலேயே கிடப்பில் உள்ளன.
இந்த நிலையில்தான், இன்னும் 4 நாட்கள் நடைபெற்றிருக்க வேண்டிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்றுடன் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த வகை செய்யும் 123 ஒப்பந்தம், நமது நாட்டிற்கு சாதகமானதா? பாதகமானதா? என்பதை எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணி கட்சிகளும் விவாதிக்கும் என்றும், அதன் மூலம் உண்மையை அறிந்து தெளிவுபெறலாம் என்று எதிர்பார்த்திருந்த சராசரி கல்வி அறிவு பெற்ற, அரசியல் அறிவு பெற்ற அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து ஒரு மணி நேரம் கூட விவாதிக்க அனுமதிக்காமல் தங்களுடைய கோரிக்கையை (நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும்) வலியுறுத்தி பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஒவ்வொரு நாளும் தள்ளிவைக்கப்பட்டு நேற்று கூட்டத் தொடரையே முடித்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிட்டது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரை 4 நாட்கள் முன்னதாகவே முடித்துக்கொள்ள வேண்டிய நிலையை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நமது நாட்டின் மிக உயர்ந்த பொது அமைப்பு இயங்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது, குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது என்று கூறியுள்ளார்.
ஆம், நாடாளுமன்ற ஜனநாயகமே கேள்விக்குறியாகியுள்ளது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையே அரசையும், நிர்வாகத்தையும் நிர்ணயிக்கின்றது. ஆனால், அவர்களின் பொறுப்ப்பின்மையும், கொள்கை ரீதியான தான்தோன்றித்தனமான செயல்பாடும் ஜனநாயகத்தின் நெறிமுறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது மட்டுமின்றி, மக்களினுடைய கருத்து சுதந்திரத்திற்கும் முட்டுக்கட்டை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக்கப்படுகிறது என்று ஏற்கனவே எழுதிவிட்டோம். ஆனால், நமது நாட்டின் அரசியல்வாதிகளை மக்களின் கருத்துரிமை பற்றி கவலைப்படாத ஒரு தான்தோன்றித்தனம் பீடித்துள்ளது. அவர்களின் ஜனநாயகக் கடமைகள் என்னவென்பதை உணரவைக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது.
இப்படிப்பட்ட நடத்தைகளை தாங்கள் ஏற்கவில்லை என்பதனை ஏதாவது ஒருவிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் உணர்த்த வேண்டும். ஏனெனில், நாடாளுமன்ற நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக்கப்படுவது தொடர்ந்தால் இந்த நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை விவாதிப்பதற்கு வேறொரு சட்டப்பூர்வமான அரசியல் அரங்கம் இல்லை.