Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெலிமார்க்கெட்டிங்கிற்கு தடை இழப்பா? லாபமா?

டெலிமார்க்கெட்டிங்கிற்கு தடை இழப்பா? லாபமா?

Webdunia

, சனி, 25 ஆகஸ்ட் 2007 (10:23 IST)
வேலை நிமித்தம் உச்ச கட்ட சிந்தனையில் இருப்பீர்கள். அப்பொழுது திடீர் என்று உங்களது செல்பேசியோ அல்லது அருகில் உள்ள தொலைபேசியோ அலறும்.

எடுத்துப் பேசுவீர்கள். மறுமுனையில் காலை அல்லது மதியம் அல்லது மாலை வணக்கத்தை இனிமையாகக் கூறும் ஓர் இனிமையான குரல். தான் பணியாற்றிடும் நிறுவனத்தின் பொருட்களையோ அல்லது சேவைகளையோ அல்லது திட்டங்களைப் பற்றியோ உங்களிடம் சிறிது நேரம் அக்குரல் பேசும்.

அந்த இளம் குரலில் தொணிக்கும் வணிக ஏக்கம் தொலைபேசியையோ அல்லது செல்பேசியையோ நீங்கள் துண்டித்துவிடாதபடி தடுக்கும். அவர்களுக்கு விற்பனையை அளிக்கின்றீர்களோ இல்லையோ அவர்கள் சொல்வதைக் கேட்போமே என்ற ஒரு ஈரத்துடன் கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டிப்பீர்கள்.

இது ஒவ்வொருவருக்கும் வாரத்திற்கு ஒரு முறையாவது நிகழ்கிறது. மாதத்திற்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் அல்லது அதிகமாக வருமானவரி செலுத்துபவர்கள் அல்லது அதிக அளவிற்கு தங்கள் வங்கி கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் போன்றோருக்கு இந்த அழைப்பு மணி அடிக்கடி ஒலிக்கும். அவர்களுக்கு அது வேதனையானதுதான். வேதனையின் விளைவாக அவர்கள் எல்லாம் புகார் குரல் கொடுக்க, வந்து விட்டது டெலி மார்க்கெட்டிங்கிற்கு தடை.

இதற்கு மேல் எண் தேடி எல்லோரையும் அந்த இளம் குரல்கள் அழைத்துப் பேசி விட முடியாது. எங்களுக்கு இப்படிப்பட்ட அழைப்புக்கள் தேவையில்லை என்று தேச பதிவு பட்டியலில் தங்கள் தொலைபேசி அல்லது செல்பேசி எண்ணைச் சேர்த்தவர்களை அழைக்க கூடாது. இப்படி ஓர் கட்டுப்பாடு "அப்பா நிம்மதி" என்று சொல்ல வைத்தாலும், மற்றொரு சிந்தனையையும் தூண்டுகிறது.

110 கோடியைத் தாண்டி ஜனத்தொகை ஏறிக் கொண்டிருக்கும் இந்திய நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் படித்துத் தேறி பட்டம் பெற்று வெளியே வரும் சாதாரண படிப்பு பட்டதாரிகளுக்கு உடனே கிடைக்கும் வேலை வாய்ப்புகளில் ஒன்று இந்த டெலி மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் வேலைதான்.

மாதத்திற்கு 3,000 முதல் 7,000 வரையில் சம்பளம் அளிக்கப்படும் இந்த டெலி மார்க்கெட்டிங் பணிகள் பல இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வாழ்க்கையின் முதற்படி.

வரப்போகின்ற இந்த டெலி மார்க்கெட்டிங் தடையால் இப்படி பணியாற்றிடும் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் வேலை இழப்பார்கள். புதிதாக வேலையைத் தேடும் இளம் சமூகத்தினருக்கு ஒரு வேலை வாய்ப்புக் கதவு மூடப்படுகிறது.

என்ன சோகம் இது? அவசியம்தானா? இவர்களுக்கு பணி கிடைப்பதற்காகவாவது இந்த தடையை கொண்டு வராமல் இருக்கலாமே என்றும்தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால்...

ஆனால் மறுசிந்தனைக்கும் வழிவிட்டுப் பார்ப்போம். இப்படிப்பட்ட பணிகள் அவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலத்தை அளித்துள்ளன? ஒவ்வொரு நாளும் பல பேருக்குப் பேசி ஓரிரு வாய்ப்புகளை பெறுவதற்குள் அடேயப்பா... எத்தனைப்பாடு?

அப்படி பாடுபட்டு பணி உயர்வு பெற்று குரூப் லீடர் ஆனால் அதிகபட்சம் 10, 12 ஆயிரம். + ஊக்கத் தொகை. துவக்கத்தில் பெரும் தொகையாகத் தெரியும் இந்த வருவாய் திருமணமானவுடன் தேவையில் இருந்து பார்த்தால் சுருங்கிவிடுகிறது. ஆனால் இப்படிப்பட்ட மார்க்கெட்டிங் பணிகளில் இளம் வயதினர் தனது உடற் சக்தியையும், மனத்திறனையும் பெரும் அளவிற்கு இழக்கின்றனர். எவ்வளவு அலைச்சல்? எவ்வளவு பேச்சு? போலியாக எவ்வளவு நேரம் சிரித்தது? எதிரில் இருப்பவரை திருப்திப்படுத்த எவ்வளவு சகிப்புத் தன்மை? இந்த சாதாரண வாழ்க்கை வாழ இவ்வளவு பாடுபட்டு உடல் ஆற்றலையும், எண்ணத் திறனையும் இழப்பதை விட, கல்வியாலும், வாழ்க்கை அனுபவத்தாலும் நுண்ணிய உணர்வுகளின் ஆழ்ந்த வளர்ச்சியினாலும் கிடைக்கும் உருவாக்கத் திறனை அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் வாழ்கையை அமைத்துக் கொள்ள இந்தத் தடையால் ஓர் புதிய பாதை பிறக்கின்றது.

சேல்ஸ், மார்க்கெட்டிங், டெலி மார்க்கெட்டிங் இவையெல்லாம் என்ன? மேலாண்மை கல்வி கற்று எப்படியெல்லாம் உள்ளுக்குள் பொடி வைத்து வெளியில் சாயம் பூசி பேச்சால் பளபளப்பாக்கி நுகர்வோரின் ஆசையை காசாக்கும் நிறுவனங்களின் வித்தையல்லவா இதெல்லாம். இதற்காகவா படிப்பு? பட்டம் எல்லாம்.

ஒரு சராசரி கடைக்காரன் சம்பாதிப்பதையும் விட உழைத்து ஓடாய் தேய்ந்து ரோடு ரோடாய் அலையும் இளைஞர்கள் எத்தனை பேர். எவ்வளவு பணம் பார்த்தார்கள்? இலக்கின்றி படிப்பது, பிறகு இருக்கும் வாய்ப்பில் வாழ்க்கையைத் தேடுவது என்கின்ற மேலை நாட்டு அனுபவிப்பு பண்பாட்டின் தொடர்ச்சிதான் இப்படிப்பட்ட அர்த்தமற்ற வேலைகளை நோக்கி இளைஞர்களை இழுக்கிறது.

இந்த இழுப்பில் இருந்து சற்றே விலகி நிமிர்ந்து சிந்திக்க வேண்டும். நமக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. அதற்கு இலக்கு என்ன? அதற்கு நாம் செய்ய வேண்டிய பணி என்ன? அதற்கான திறனை எப்படி வளர்த்துக் கொள்வது என்று படிக்கும்போதும், பட்டம் பெற்று வெளியே வரும்போதும் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

அமெரிக்காவோ, ஐரோப்பாவோ அல்ல இந்தியா. இந்த நாட்டில் படித்து பட்டம் பெற்று திருமணமாகும்வரை முக்கால்வாசி நகர குடும்பங்களில் பெற்றோர்கள்தான் பிள்ளைக்குச் சோறு போடுகிறார்கள். துணி மணிகளை வாங்கித் தருகிறார்கள். இயன்ற வரை கனவுகளை நனவாக்க உதவுகின்றனர். இந்த வாய்ப்பை சிந்தித்து சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இளைஞர்கள். அதை விட்டுவிட்டு மேலை நாட்டைப் போல படித்தேன், பட்டம் பெற்றேன், சம்பாதிக்கின்றேன், ஜமாய்க்கின்றேன் என்றெல்லாம் கூறிக் கொண்டு நிறுவனங்களின் விற்பனை தந்திர வலையில் சிக்கி வாழ்க்கையை இழக்கக் கூடாது.

ஓர் கதவு மூடப்படும்போது ஒன்பது கதவுகள் திறக்கின்றன. டெலி மார்க்கெட்டிங் தடையை வரவேற்போம்.

Share this Story:

Follow Webdunia tamil