Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளிகளிலேயே பாலியல் கல்வி அவசியம் - ஏன்?

பள்ளிகளிலேயே பாலியல் கல்வி அவசியம் - ஏன்?

Webdunia

, வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (16:51 IST)
சென்னை தனியார் பள்ளி ஒன்றின் மணி அடிக்கப்படுகிறது. சிறார்கள் ஆராவாரத்துடன் தங்களது வகுப்பிலிருந்து வெளியே வருகின்றனர். ஏழு வயது சிறுமி மட்டும் தனது புத்தகங்களை அடுக்கிக்கொண்டு வெளியே வர தாமதமாகிறது.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பள்ளியின் லேப் டெக்னிஷியன் ஒருவர், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்கிறார். அதன்பின், செய்வதறியாது பள்ளியின் வாசல் அருகே வந்த அச்சிறுமி, அழுதவண்ணம் தன்னுடைய தாயிடம் செல்கிறது.

தன்னுடைய மகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் குறிப்பால் உணர்ந்த தாயார், பள்ளி நிர்வாகத்திடமும், காவல்துறையிடமும் புகார் கூறுகிறார். இதையடுத்து, லேப் டெக்னிஷியனை காவல்துறையினர் விசாரித்த பின்னரே, நடந்தது என்ன என்பது தெரிய வருகிறது.

இந்தச் சம்பவம் மூலம் சில கேள்விகள் எழுகின்றன...

* அந்தச் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகாமல் தடுக்கப்பட்டிருக்க முடியுமா?

* லேப் டெக்னிஷியன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ளும்போது, பாலியல் கொடுமைக்கு ஆளோகிறோம் என்பதை அச்சிறுமி உணர்ந்ததா?

* தன்னிடம் தவறாக நடந்துகொள்ளும் நபரிடம் இருந்து தன்னைத் தானே மீட்டுக்கொள்ள அந்தச் சிறுமிக்கு இயலுமா?

* அவ்வாறு தன்னைத் தானே மீட்டுக்கொள்ளாத பட்சத்தில், தனக்கு என்ன நேர்ந்தது என்பதை பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ அந்தச் சிறுமியால் தெளிவாக விளக்க முடிந்ததா?

சிறார்கள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்படாத நிலை உண்டாக வேண்டுமானால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு எல்லாம் 'ஆம்' என்ற பதில் கிடைக்கப்பட வேண்டும். அவ்வாறான பதில் கிடைப்பதற்கு, பாலியல் கல்வியைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பது தெளிவு.

இந்தியாவில் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சிறார்களில் 53 சதவிகிதமானோர், குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களின் வாயிலாகவே பாதிக்கப்படுகின்றனர். இதில் 15 சதவிகிதத்தினர், 18-வயதிற்குள்ளாகவே கர்ப்பம் தரித்துவிடுகின்றனர் என்ற நம்பகத்தன்மை மிக்க கணக்கெடுப்புகள், நமக்கு அதிர்ச்சியையே அளிக்கின்றன.

இத்தகைய கொடுமை முற்றிலும் அகல வேண்டுமாயின், பள்ளிச் சிறார்களுக்கு பாலியல் கல்வி அளிக்கப்பட வேண்டியது அவசியம். அப்போதுதான், அன்றாட வாழ்வில் தனது சுற்றத்தார்களின் தொடுதல்களில், எவை நல்லவை? எவை தீயவை? என்பதை அறிதல் போன்ற விழிப்பு உணர்வுகளை சிறார்கள் பெறுவர்.

பழமைவாதிகள் கவனத்திற்கு...

சிறார்கள் பாலியல் கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, பாலினம் சார்ந்த அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்துக் கூறுகளையும் தெளிவாக எடுத்துரைப்பதே, பாலியல் கல்வி என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆண், பெண் புணர்ச்சி உறுப்புகளைப் பற்றியது மட்டுமே பாலியல் கல்வி என்ற தவறான கருத்து நம் சமுதாயத்தில் விரவிக் கிடக்கிறது. அத்துடன், 'பாலுணர்வைத் தூண்டக்கூடியது' என்று பழமைவாதிகள் பலர் கூறிவருவது, நவீனகால மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்.

'இளம் வயதில் அளிக்கப்படும் பாலியல் கல்வியால், பாலுணர்வு தூண்டப்படுவதோ அல்லது தவறான பாதைக்குக் கொண்டு செல்லும் வகையில் ஊக்கப்படுத்துவதோ முற்றிலும் கிடையாது என்றும், இளம் வயதிலேயே செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வழிவகை செய்வதில்லை என்றும் ஆணித்தரமாக தங்களது ஆய்வின் மூலம் எடுத்துரைக்கின்றனர் மருத்துவ அறிஞர்கள். இதையே உலக சுகாதார நிறுவனத்தில் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 16 முதல் 19 வரையிலான வயதுடையவர்களில் 45 சதவீதத்தினர் திருமணத்திற்கு முன்பாக உடலுறவில் ஈடுபடுவதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்நிலை மாறுவதற்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலே தீர்வு என்று தெரிவிக்கும் உளவியலாளர்களின் கருத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம்.

பாலியல் கல்வியை பள்ளிச் சிறுவர்களுக்கு கற்றுத்தர கூடாது என்று வாதிடுவோர், "சிறுவர்கள் கெட்டுப்போய்விடுவார்கள்" என்று ஒரு சிறிய சொற்றொடரில் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதற்கு, உண்மை நிலை என்ன என்பதை அறிவுப் பூர்வமாக உணராததே காரணம்.

மனிதனின் இயல்பிலேயே குறிப்பிடத்தக்கது 'தேடல்'. இந்தச் செயலானது, பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து விஷயங்களிலும் நீண்டு கொண்டே செல்லும் ஒன்று. பாலியல் தொடர்பான தேடல், பள்ளி வயதில் இருந்தே தொடங்கிவிடுகிறது.

பாலியல் குறித்த தகவல்களை ஆசிரியர்கள் மூலமோ, பெற்றோர்கள் மூலமோ தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சிறார்கள், வேறு சில (பல) ஆதாரங்களை நாடுகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், செக்ஸ் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு தொலைக்காட்சி, சினிமா, புத்தகங்கள், மூத்த நண்பர்களின் வழிகாட்டுதல் போன்றவற்றின் மூலம் விவரங்களைப் பெற முயல்கின்றனர். இந்த ஆதரங்கள், தவறான வழிகாட்டுதலாகவே மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

ஆனால், மேல்தரப்பு குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களோ, ஒருபடி மேலே சென்று 'வலைத்தளங்களை' நாடுகின்றனர். இதில், உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊறு விளைவிக்கும் வழிகாட்டுதல்கள் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பாதை மாறிச் செல்லக்கூடிய நிலையும் ஏற்படும்.

அதேநேரத்தில் இந்த இயல்பான தேடலுக்கான உரிய விடைகள், நேர்மையான முறையில் கிடைக்கும் பட்சத்தில், வழிதவறி போவதற்கு வாய்ப்பை இல்லை எனலாம்.

பாலினத் தன்மை, பாலின உறுப்பு, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், பால்வினை நோய்கள், எய்ட்ஸ் முதலானவை குறித்து தொடர்ச்சியாக, பள்ளி வகுப்புக்கு ஏற்றவாறு பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும்.


பாலியல் கல்வியை அமலாக்குவதில் சர்ச்சைகளும் தீர்வும்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) மற்றும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து உருவாக்கிய பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை, நடப்பு கல்வியாண்டில் இருந்தே அறிமுகம் செய்ய மத்திய அரசு பரிந்துரைத்தது.

ஆனால், இந்த பாடத்திட்டத்தால் நன்மை உண்டாவதற்கு மாறாக, நமது கலாச்சாரம் பாதிக்கப்படுவதோடு பல்வேறு தீமைகள் உருவாகும் என்று கூறி குஜாராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா என வரிசையாக பல மாநிலங்கள், பள்ளியில் இப்பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த மறுத்தன. மூத்த அரசியல்வாதிகள் சிலரும் அம்மாநிலங்களுக்குகாக குரல் கொடுத்தனர்.

மேலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்தப் பாடத்திட்டத்தில், சில பகுதிகள் மாணவர்களிடையே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்டு 21-ம் தேதியன்று பாராளுமன்றக் கூட்டத்தில், அமைச்சர் புரந்தரேஷ்வரி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில், 'பாலியல் பாடத்தில் ஆட்சேபணைக்குரியது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகள், அப்பாடத்தை நடத்தும் ஆசிரியர்களின் புரிதலுக்காகவே தவிர, மாணாக்கர்களுக்கு கற்றுத் தருவதற்கு அல்ல. ஆயினும், அந்த பாடத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பை அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது' என்று கூறினார்.

அடலன்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற குழந்தைப் பருவத்துக்கும், வாலிப பருவத்துக்கும் இடைப்பட வயதில் ஏற்படும் வளர்ச்சி, எச்ஐவி மற்றும் எய்ட்ஸ்சில் இருந்து எங்ஙனம் பாதுகாப்பது, பாலியல் மற்றும் போதைப்பொருள் கொடுமையில் இருந்து எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருப்பது ஆகியவையே, அந்தப் பாடத் திட்டத்தின் உள்ளடக்கமாகும்.

அடிப்படை பாலியல் கல்வியோடு, எய்ட்ஸ் போன்ற கொடிய நோய் மற்றும் பல்வேறு பால்வினை நோய்கள் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெளிவாகப் புகட்டும் இந்தப் பாடத்திட்டத்தை வரவேற்க வேண்டியது, சமூக அக்கறைகொண்ட ஒவ்வொருவரது கடமை.

அத்துடன், எதிர்காலத்தில் பள்ளியில் பாலியல் கல்வியை கட்டாயப் பாடமாக்குவது, வருங்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.



Share this Story:

Follow Webdunia tamil