யுரேனியம் வழங்கல் தடைபடாது!அதுமட்டுமல்ல, நமது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் நாம் அணு குண்டு சோதனை நடத்தினாலும், இந்த ஒப்பந்தத்தின் படி நமது அணு மின் உலைகளுக்கு அளிக்கும் யுரேனியம் எரிபொருள் வழங்கலை நிறுத்தக்கூடாது என்ற கண்டிப்புடன் இந்த வரைவு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1971
ஆம் ஆண்டு இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியதன் காரணமாக, தாராபூரில் உள்ள அணு மின் உலைக்கு வழங்கப்பட்டு வந்த யுரேனியம் எரிபொருளை அமெரிக்கா நிறுத்தியது. அப்படிப்பட்ட சூழல் எந்த நிலையிலும் ஏற்படாது என்று இந்த ஒப்பந்த வரைவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதைத்தான் எமது இணையதளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும், விஞ்ஞானியுமான டாக்டர் பல்தேவ் ராஜ் குறிப்பிட்டிருந்தார். அதாவது, நமது அணு மின் நிலையங்களுக்கு யுரேனியம் வழங்கல் எந்த நிலையிலும் நிறுத்தப்படமாட்டாது என்கின்ற உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.
இது நமது அணு எரிபொருள் தேவைக்கான ஒப்பந்தம் மட்டுமே என்பதில் நமது விஞ்ஞானிகள் தெளிவாக உள்ளனர். அணு எரிபொருள் கழிவை மறு ஆக்கம் செய்து பயன்படுத்துவது தொடர்பாக நெருடலான சில விதிமுறைகள் இந்த ஒப்பந்த வரைவில் உள்ளது என்று விஞ்ஞானி ஏ.என். பிரசாத் கூறியுள்ளதற்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
நமக்குத் தேவை எரிபொருள்! அமெரிக்காவிற்குத் தேவை இந்தியா!
சர்வதேச அளவில் அணு சக்தி ஆய்வுகளுக்கான தொழில்நுட்பத்தைப் பெறுவதிலும், எரிபொருளைப் பெறுவதிலும் இதுநாள் வரை நீடித்துவரும் தடைகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தவிடுபொடியாகின்றது என்பது முக்கியமானது.
இரண்டாவதாக, நமது எரி சக்தித் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், 2050 ஆம் ஆண்டிற்குள் 1,300 கிகாவாட் (ஒரு கிகாவாட் = 1,000 மெகாவாட்) தேவை என்ற நிலையில் உள்ள நமது நாடு, அந்த அளவிற்கு மின் உற்பத்தியை பெருக்க வேண்டுமெனில் அணு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் திறன் பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டும். அதற்கு எரிபொருளும், அதற்கான தொழில்நுட்பத் தேவைகளுக்கு இந்த ஒப்பந்தம் அவசியமாகிறது.
இந்த ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது நமது நாட்டின் இறையாண்மையையே அமெரிக்காவால் படுத்திவிட முடியும் என்று நினைப்பது நிச்சயம் பகல் கனவே என்பது விவரம் தெரிந்த அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.
நமக்கு எந்த அளவிற்கு எரிபொருளும், அணுத் தொழில்நுட்பமும் தேவைப்படுகிறதோ, அதைவிட அதிகமாக, ஏன் பன்மடங்கு அதிகமாக அமெரிக்காவிற்கு இந்தியா தேவைப்படுகிறது.
இந்த அணு சக்தி ஒத்துழைப்பின் வாயிலாக அந்நாட்டின் அணு சக்தி தொழில்நுட்ப நிறுவனங்கள் வணிக ரீதியாக பெரும் பயனடையவுள்ளன. அந்நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே மும்பைக்கும், டெல்லிக்கும் பறந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த வணிகத் தேவை, நமது எரிபொருள் தேவையை விட மிகப் பெரியது.
அது மட்டுமின்றி, இன்றைக்கு உள்ள சர்வதேசச் சூழலில், இந்தியாவைப் போன்ற ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நெருங்கிய ஆதரவும், ஒத்துழைப்பும் பல்வேறு சர்வதேசப் பிரச்சனைகளில் அமெரிக்காவிற்குத் தேவைப்படுகிறது. எனவே, இந்த ஒப்பந்தம் எந்தவிதத்திலும் ஒருதலைப்பட்சமானது என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. மாறாக, இரு நாடுளின் தனித்த நலன்களை கருத்தில் கொண்டே நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெறக்கூடிய விவாதத்தி்ல் பிரதமர் மன்மோகன் சிங் இவைகளை தெளிவாக விளக்குவார் என்பதனை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டுதான் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பதனை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கட்சிகளும், இடதுசாரிகளும் புரிந்துகொள்ளும் அளவிற்கு பிரதமரின் விளக்கம் அமைய வேண்டும்.
அதே நேரத்தில், அமெரிக்கா, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இறையாண்மை என்றெல்லாம் கூறி அரசியல் ரீதியாக இந்த ஒப்பந்தத்தை பார்ப்பதைத் தவிர்த்து இந்நாட்டின் எதிர்காலத்திற்கு இது அவசியமா இல்லையா என்பதனை எதிர்க்கட்சிகளும், இடதுசாரிகளும் முடிவு செய்ய வேண்டும்.
அரசியலை ஒதுக்கிவிட்டு, நாட்டின் எதிர்காலம் முன்னுரிமை பெறவேண்டும். அதுவே சரியானது.