Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு எரிபொருள் மறு ஆக்கத்தில் இந்தியா முன்னணி நாடு : பல்தேவ் ராஜ்!

அணு எரிபொருள் மறு ஆக்கத்தில் இந்தியா முன்னணி நாடு : பல்தேவ் ராஜ்!

Webdunia

, வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (21:28 IST)
webdunia photoFILE
அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை நாடாக உள்ளது என்றும், இதில் எந்த நாட்டின் தொழில்நுட்ப உதவியும் இந்தியாவிற்குத் தேவையில்லை என்று அணு விஞ்ஞானி பல்தேவ் ராஜ் கூறினார்!

சென்னை உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் இன்று நடந்த இயற்பியல் ஆய்வு கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றியதற்குப் பிறகு தமிழ்.வெப்துனியா.காம் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு செவ்வியில், அணு எரிபொருள் மறு ஆக்கத்திற்கு உயர் தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளிடம் இந்தியா எதிர்பார்த்திருப்பதாக சில ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் அடிப்படையற்றது, வெறும் மாயை என்று பல்தேவ் ராஜ் கூறினார்.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு சக்தி மையத்தின் இயக்குநராக உள்ள முனைவர் பல்தேவ் ராஜ், 1960 ஆம் ஆண்டிலேயே அணு எரிபொருளை மறு ஆக்கம் செய்யும் தொழில்நுட்பத்தை நோக்கிய ஆய்வில் இந்தியா ஈடுபடத் துவங்கியது என்று கூறினார்.

"மறு ஆக்க தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆய்வை இந்தியாவின் அணு சக்தி ஆராய்ச்சியின் முன்னோடிகளில் ஒருவரான ஹெச்.என். சேத்னா துவக்கி வைத்தார். அந்த ஆய்வு நடவடிக்கையின் இயக்குநராக எம்.ஆர். சீனிவாசன் பொறுப்பேற்று முன் நடத்தினார்.

அன்றிலிருந்து சற்றேறக்குறைய 50 ஆண்டுகளாக மறு ஆக்க தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்திய அணு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக இன்று அத்தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் எந்தவொரு நாட்டையும் விட முன்னணியில் உள்ளது" என்று கூறிய பல்தேவ் ராஜ், கார்பைட் எரிபொருளை மறு ஆக்கம் செய்து மீண்டும் பயன்படுத்திய சாதனை இந்தியா மட்டுமே நிகழ்த்தியுள்ளது என்று கூறினார்.

"அணு எரிபொருள் மறு ஆக்க தொழில்நுட்பம் முற்றிலும் சுயச்சார்புடையது. 100 விழுக்காடு அது நாம் உருவாக்கிய உள்நாட்டு தொழில்நுட்பம். எனவே, இத்துறையில் எந்த நாட்டையும் நாம் சார்ந்திருக்கவில்லை என்று பல்தேவ் ராஜ் கூறினார்.

கேள்வி : இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர 123 ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டிற்குள் நமது அணு மின் சக்தி உற்பத்தி எந்த அளவிற்கு அதிகரிக்கும்?

பல்தேவ் ராஜ் : 123 ஒப்பந்தத்தின் மீது இந்திய நாடாளுமன்றத்திலும், அமெரிக்க காங்கிரசிலும் விவாதம் நடத்தப்படவுள்ளது. அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையுடன் தனி ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். அதன்பிறகு, என்.எஸ்.ஜி. என்றழைக்கப்படும் அணு சக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் வழங்கு நாடுகளுடன் இந்தியா பேச வேண்டும். அதன்பிறகே அணு சக்தி ஒத்துழைப்பு நடைமுறைக்கு வரும்.

இந்த ஒப்பந்தம் முழுக்க, முழுக்க நமது சமூக ரீதியிலான அணு மின் சக்தி தேவையை நிறைவு செய்வதற்கான ஒப்பந்தமாகும். தற்பொழுது இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 130 கிகாவாட் ஆகும். இதனை அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 250 கிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். தற்பொழுது அணு மின் சக்தியின் பங்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 விழுக்காடாக உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் அணு மின் சக்தி உற்பத்தி 40,000 மெகாவாட்டை எட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்தப் பணி நடைபெற்று வருகிறது.

இந்தியா மேற்கொண்டுவரும் 3 கட்ட அணு சக்தி திட்டத்தின் 2வது கட்டமாக வேக ஈனுலை (Fast Breeder Reactor - FBR) உருவாக்கும் திட்டத்தின்படி, தற்பொழுது கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் வேக ஈனுலை 2010 ஆம் ஆண்டில் செயல்படத் துவங்கும். வேக ஈனுலைகளின் வாயிலாக மின் உற்பத்தி அதிகரிக்கும் போது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.2க்கு அளிக்க முடியும். அதுவே எங்களது இலக்காகும். இந்த இலக்கை நோக்கித்தான் அணு சக்தித் துறை திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.

கேள்வி : 123 ஒப்பந்தத்தின்படி, எதிர்காலத்தில் நமது பாதுகாப்பத் தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு வேளை அணு ஆயுதச் சோதனை நடத்தினால், உடனடியாக இந்த ஒப்பந்தம் ரத்தாகும் என்று நிக்கோலாஸ் பர்ன்ஸ் கூறியுள்ளார். அப்படிப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நமக்கு கிடைத்து வரும் எரிபொருளும் நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இது, முன்பு தாராப்பூர் அணு மின் நிலையத்திற்கு எரிபொருள் நிறுத்தப்பட்டது போன்ற நிலையை உருவாக்குமே?

பல்தேவ் ராஜ் : இந்த ஒப்பந்தத்தின் கீழ் சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பிற்கு உட்படுத்தும் அணு உலைகள் அனைத்திற்கும் தொடர்ந்து எரிபொருள் வழங்க வேண்டும் என்பதனை ஒரு உரிமையாக உறுதி செய்துள்ளோம். எனவே, தாராப்பூர் போன்ற நிலை நிச்சயம் உருவாகாது.

கேள்வி : அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பால் நாம் மேற்கொண்டுவரும் 3 கட்ட அணுத் திட்டத்திற்கு தடையேதும் ஏற்படுமா?

பல்தேவ் ராஜ் : அணு சக்தித் துறையின் தலைவர் அனில் ககோட்கர் இன்று அளித்துள்ள பேட்டியை படியுங்கள். 3 கட்ட அணுத் திட்டத்தை நாம் மிகுந்த உறுதியுடன் செயல்படுத்தி வருகின்றோம். 2050 ஆம் ஆண்டிற்குள் 1,300 கிகாவாட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்கின்ற இலக்கை எட்டுவதற்கு நாம் கடைபிடித்து வரும் அணுத் திட்டம் இது. உலகத்தின் எதிர்கால எரிசக்தித் தேவையைக் கருத்தில் கொண்டு வேக ஈனுலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் நாம், அடுத்தகட்டமான தோரியம் தொழில்நுட்பத்தை இலக்காகக் கொண்டு பணியாற்றி வருகின்றோம்.

இந்த 3 கட்ட அணுத் திட்டம் முழுக்க முழுக்க சுயச்சார்புடையது. 123 ஒப்பந்தம் வந்தாலும், வராவிட்டாலும் இத்திட்டம் தொடரும்.

கேள்வி : நாம் மேற்கொண்டு வரும் அணுத் திட்டத்திற்கு அரசின் உதவி போதுமான அளவிற்கு கிடைக்கின்றதா?

பல்தேவ் ராஜ் : தேவைக்கு ஏற்ற அளவிற்குக் கிடைக்கின்றது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதில் மாற்றம் ஏதுமில்லை. நமது அணுத் திட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தற்பொழுது அளிக்கப்பட்டுள்ளதைவிட 3 முதல் 5 மடங்கு நிதி அதிகரிப்புச் செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அளிக்க அரசு உறுதி தந்துள்ளது.

நாங்கள் எதிர்கொள்வது நமது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான அளவிற்கு இளம் விஞ்ஞானிகள் கிடைப்பதுதான் கடினமாக உள்ளது. தற்பொழுது நிலவிவரும் போக்கு சாதகமாக இல்லை. ஆனால் இதில் மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் தெரிகிறது.

அணுத் திட்டத்திற்கு தேவைப்படுவதை அரசு மறுப்பதில்லை. எங்களை ஊக்குவிக்கும் அளவிற்கு ஆதரவு உள்ளது.

கேள்வி : தற்பொழுது மாணவர்கள் விஞ்ஞான ரீதியான கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை அதிகம் நாடவில்லை என்று கவலை தெரிவித்திருந்தீர்கள். இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்வது?

பல்தேவ் ராஜ் : விஞ்ஞான தொழில்நுட்பத் தேவைகள் குறித்த விழிப்புணர்வை சிறு வயது முதலே ஊட்ட வேண்டும். வளர்ந்த பிறகு அதனைச் செய்வதால் பலனேதும் கிட்டுவதில்லை. நமது அன்றாட வாழ்க்கையிலும், சமூக முன்னேற்றத்திலும் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். அதுதான் வழி.

இந்தியா இன்றைக்கு முன்னேறிவரும் நாடாக, அதன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் தன்னிறைவு நாடாக முடிவானதற்கு விஞ்ஞான தொழில்நுட்பத்தின் பங்கை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். முன்னேற்றம் முழுமையாக அனைவருக்கும் சென்றடைய வேண்டுமெனில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது.

11வது, 12வது படிக்கும் மாணவர்களில் இருந்து முதுகலை விஞ்ஞான மாணவர்கள் வரை விஞ்ஞான தொழில்நுட்ப அவசியத்தை வலியுறுத்திப் பேசி வருகின்றோம். அவர்களை அழைத்து வந்து கல்பாக்கத்தில் உள்ள சோதனைச் சாலைகளைக் காட்டுகின்றோம். நாம் வாழும் இந்த பூமியை முறையாக காப்பாற்ற வேண்டுமெனில் அது விஞ்ஞானத்தாலும், தொழில்நுட்பத்தாலுமே மட்டுமே சாத்தியமாகும்.

கேள்வி : இந்தியாவின் அணு சக்தி தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு நீங்கள் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் முகமாக மத்திய அரசு உங்களுக்கு பத்மஸ்ரீ விருதை அளித்து பெருமைப்படுத்தியுள்ளது. அவ்விருதைப் பெற்றபோது உங்களுடைய உணர்வு எப்படியிருந்தது?

பல்தேவ் ராஜ் : எனது தாய், தந்தையர் அதனைப் பார்த்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன். இந்த நிலை, இப்படிப்பட்ட பெருமை கிடைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. அவர்கள் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

இத்துறையில் சேர்ந்த நாள் முதல் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளை முழு ஈடுபாட்டுடன் செவ்வனே செய்து வந்துள்ளேன். இன்றைய உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு பணியும் சர்வதேச தரத்திற்கு இணையானதாக இருக்க வேண்டும். தரத்தில் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ஒவ்வொரு செயலிலும் இந்த உறுதியுடன்தான் நான் பணியாற்றியுள்ளேன்.

பெருமைக்குரிய இந்த விருதை அளித்து மேலும் நன்றாகப் பாடுபடு என்று என் நாடு என்னை உற்சாகப்படுத்துவதாகவே கருதுகிறேன். நான் 10 வயது சிறுவனாக இருந்தபோது எனது தந்தை இறந்துவிட்டார். எனது தாயார்தான் குடும்பத்தின் சுமையை ஏற்று எங்களை வளர்த்தார். இந்தப் பெருமைக்காக அவருக்கே நான் நன்றி செலுத்துகிறேன்.

சுதந்திரம் பெற்ற நேரத்தில் நமது நாட்டின் நிலை மிக மோசமாக இருந்தது. எங்கும் வறுமை, ஏழ்மை, வறட்சி, கல்வியிண்மை எல்லாம். இன்று அந்த நிலை பெருமளவிற்கு மாறிவிட்டது. நான் இளைஞனாக இருந்த இல்லாத தன்னம்பிக்கை இன்றைய இளைய சமூகத்திடம் உள்ளது. இந்த நிலையை எட்ட நாம் கடுமையாகப் பாடுபட்டுள்ளோம். இன்னமும் பாடுபட வேண்டும்.

நமது நாட்டின் கல்வி, சுகாதாரம், வாய்ப்புகள் ஆகியன அனைவருக்கும் கிட்ட விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியன கருவியாக வேண்டும். அனைவருக்கும் அடிப்படையான அனைத்தும் கிடைக்க வேண்டும். அவ்வாறு இல்லாத சமூகம் விஞ்ஞான, தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்ததாக இருந்தாலும் என்ன பயன்?

Share this Story:

Follow Webdunia tamil