Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்துல் கலாம் : இந்திய சரித்திரத்தில் ஒரு சகாப்தம்!

அப்துல் கலாம் : இந்திய சரித்திரத்தில் ஒரு சகாப்தம்!

Webdunia

, புதன், 25 ஜூலை 2007 (20:29 IST)
PTI PhotoPTI
இந்திய மக்களின் அபிமானத்தைப் பெற்றவராய், அப்பழுக்கற்றவராய், புன்னகை பூத்த முகத்தை தனது அடையாளமாகக் கொண்டவராய் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் உயரிய அரசியல் பதவியை ஏற்ற டாக்டர் அப்துல் கலாம், அப்பெருமைகள் எதுவும் சற்றும் குறையாமல் அப்பொறுப்பில் இருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார்!

இந்தியாவைப் போன்ற விறுவிறுப்பான ஜனநாயகத்தில், எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காமல், அதே நேரத்தில் அரசமைப்பு சட்ட ரீதியான தனது கடமைகள் அனைத்தையும் குறைவின்றி செய்துவிட்டு நம்முடைய நெஞ்சார்ந்த வாழ்த்துதலுடன் விடை பெற்றுள்ளார்.

இந்த ஐந்தாண்டுக் காலத்தில், நமது நாட்டின் நகரங்கள், கிராமங்கள் என்று களைப்பறியாமல் பயணம் செய்தார், மக்களைச் சந்தித்தார், அவர்களுடன் பேசினார், அவர்களின் குறைகளைக் கேட்டார், அதற்குத் தீர்வு அரசிடம்தான் உள்ளது என்று கூறாமல், எப்படி அந்தச் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பதையும் அவர்களுக்குக் கற்றுத் தந்தார்.

இப்படியும் ஒரு குடியரசுத் தலைவரா? என்று வியப்புடன் வாய்திறக்காத மக்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு அவர்களோடு கலந்து, அவர்களின் உணர்வுகளில் பங்கேற்று உற்சாகமூட்டினார்.

குஜராத் கலவரத்தில் ஓராயிரத்திற்கும் மேல் கொல்லப்பட்டு நம்பிக்கைகள் பொய்த்துப் போய், நமது நாட்டின் ஒரு சமூகமே துயரத்தில் உழன்று கொண்டிருந்தபோது அங்கு சென்றார். அவர்களின் கண்ணீரில் பங்கெடுத்தார். ஒன்றுபட்டு வாழ்வதன் அர்த்தத்தை விளக்கினார். அவர்களின் மனதில் வாழ்க்கையின் மீது நம்பிக்கை ஏற்படச் செய்தார்.

webdunia
PTI PhotoPTI
பல பல்கலைக்கழகங்களுக்குச் சென்றார். கெளரவ முனைவர் பட்டம் பெறுவதற்காக அல்ல, பட்டம் பெற்ற மாணாக்கர்களிடம், இந்நாட்டின் எதிர்காலம் அவர்களைத்தான் சார்ந்துள்ளது என்று பொறுப்புணர்த்திப் பேசினார். விஞ்ஞானத்தில், தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை எடுத்துக் கூறி, அவைகளை நமது நாட்டின் வறுமையையும், வேற்றுமையையும் ஒழிப்பதற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசனை கூறினார்.

webdunia
PTI PhotoPR
பள்ளி மாணவ சமூகத்தைக் கூட விட்டுவைக்கவில்லை. அவர்களின் மனதில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்தது மட்டுமின்றி, இந்தியா ஒரு வளமான நாடாக, வல்லரசாக உருவாக அவர்களின் கரங்களில்தான் பொறுப்பு உள்ளது என்பதனை அந்த பிஞ்சு நெஞ்சங்களில் பதியவைத்தார்.

தான் சந்தித்த இளைஞர்களிடமெல்லாம் கனவு காணுமாறு கூறினார். அந்தக் கனவை நிஜமாக்க திட்டமிட்டு உழையுங்கள் என்று வற்புறுத்தினார்.

அயல்நாடுகளுக்குச் சென்றார். அங்கு நமது நாட்டின் வளர்ச்சியையும், விஞ்ஞான திறனையும் எடுத்துக் கூறினார். அமைதியின் வல்லமையை விளக்கினார்.

இப்படி ஐந்தாண்டுக் காலமும் நாட்டின், நாட்டு மக்களின் நலனையே கருத்தில் கொண்டு மகிழ்ச்சியுடன் பணியாற்றினார். பதவியில் இருந்த ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக களித்ததாகக் கூறிய ஒரே தலைவர் டாக்டர் அப்துல் கலாம்தான்.

குடியரசுத் தலைவர் பதவி அவர் மீது ஏராளமான பொறுப்புகளை சுமத்தியது. ஆனால், அந்தப் பொறுப்புகளும், உயர் அதிகாரமும் கலாமின் தனித்தன்மையை எந்தவிதத்திலும் மாற்றவில்லை.

தனது தனித்தன்மையை ஒரு கணம் கூட விட்டுக் கொடுக்காமல், எதற்காகவும் மாறாமல், எந்த சிந்தனையுடன் ஒரு விஞ்ஞானியாக இந்தியாவின் பெரும் திட்டங்களில் பணியாற்றினாரோ, அதே சிந்தனையும், மனப்பாங்கும்தான் அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் நீடித்தது பெரும் சிறப்பாகும்.

இந்தியாவின் 60 ஆண்டு கால சுதந்திர வரலாற்றிலும், அதன் ஈடிணையற்ற நாடாளுமன்ற ஜனநாயகத்திலும் கலாமின் காலம் ஒரு தனித்த சகாப்தமாக நீடிக்கும்.

உயர் பதவி வகிப்பவர் தங்களுக்கு உள்ள பொறுப்பை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதனை அரசியல் அனுபவமற்ற கலாம் அருமையாக நிரூபித்தார். அனைவருக்கும் அவர் ஒரு முன்னோடி. இப்பொழுது மட்டுமல்ல, இனி வரும் காலங்களிலும் அவரே தனித்த அடையாளமாகவும், வழிகாட்டியாகவும் திகழ்வார்.

Share this Story:

Follow Webdunia tamil