Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹனீஃப் விவகாரம் : ஆஸ்ட்ரேலிய காவல்துறை தடுமாறுவது ஏன்?

ஹனீஃப் விவகாரம் : ஆஸ்ட்ரேலிய காவல்துறை தடுமாறுவது ஏன்?

Webdunia

, திங்கள், 23 ஜூலை 2007 (18:53 IST)
PTI photographerPTI
இங்கிலாந்தின் கிளாஸ்கோ விமான விலையத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளவர் என்று கூறி கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது ஹனீஃபிற்கு எதிரான வழக்கில் ஆஸ்ட்ரேலிய காவல்துறை தொடர்ந்து தடுமாறிக் கொண்டிருப்பது ஆஸ்ட்ரேலியாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சட்ட ரீதியான சர்ச்சையை உருவாக்கியுள்ளது!

கிளாஸ்கோ தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட ஷபில் அகமது பயன்படுத்திய ஜீப்பில் இருந்து மொஹம்மது ஹனீஃப் செல்பேசியின் சிம்கார்ட் கண்டெடுக்கப்பட்டதாக ஆஸ்ட்ரேலிய கூட்டமைப்பின் காவல்துறை (ஏ.எஃப்.பி.) கூறியது.

webdunia
PTI photographerPTI
அது உண்மையல்ல என்று இங்கிலாந்து செய்திகளை மேற்கோள் காட்டி ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கைகள் எழுதியதும், ஹனீஃபின் சிம்கார்ட் ஜீப்பில் இருந்து கைப்பற்றப்படவில்லை என்று பல்டி அடித்தது மட்டுமின்றி, ஹனீஃப் எந்தவித உள்நோக்கமும் இன்றி ஓர் அஜாக்கிரதையான செயலாகத்தான் தனது செல்பேசி சிம்கார்டை வழங்கியுள்ளார் என்று ஆஸ்ட்ரேலிய காவல்துறை கூறியது.

ஆக, அந்த நிலையிலேயே கிளாஸ்கோ தாக்குதலில் எந்தவிதமான தொடர்பும் ஹனீஃபிற்கு இல்லை என்பது உறுதியானது. அதனால்தான் அவருக்கு பிரிஸ்பேன் நீதிமன்றம் நிபந்தனையுடன் பிணைய விடுதலை தந்தது.

அதற்குப் பிறகு ஆஸ்ட்ரேலியாவின் குயின்ஸ்லாண்டில் உள்ள மிகப் பெரிய கட்டடத்தை குண்டு வைத்து தகர்க்கும் சதித் திட்டத்தில் ஹனீஃப் பங்கேற்றுள்ளதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. இது ஆஸ்ட்ரேலிய அரசின் உந்துதலால் அந்நாட்டின் பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியாகும். இதனை குயின்ஸ்லாண்ட் காவல் ஆணையர் ஹீட்லி மறுத்தார்.

இதற்கிடையே, ஆஸ்ட்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினரும், அந்நாட்டின் பசுமைக் கட்சியைச் சேர்ந்தவருமான கெர்ரி நெட்டில் என்பவர், ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்ட்ரேலிய காவல்துறை உலக நாடுகளின் நகைப்பிற்கு ஆளாகியுள்ளது என்று சாடியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக தாங்கள் கடுமையான போக்கை கடைபிடித்து வருகிறோம் என்று உலகிற்கு காட்டிக்கொள்ளவே ஆஸ்ட்ரேலிய அரசு தனது காவல் துறையைப் பயன்படுத்தி அடிப்படை ஆதாரம் ஏதுமில்லாத நிலையிலும் ஹனீஃப் விவகாரத்தை பெரிதுபடுத்தி வருவதாக கெர்ரி நெட்டில் குற்றம் சாற்றியுள்ளார்.

ஹனீஃபிற்கு எதிராக வலிமையான ஒரு ஆதாரம் கூட இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவருடைய பணி விசாவை எந்த அடிப்படையில் ஆஸ்ட்ரேலிய குடியேற்ற அமைச்சகம் ரத்து செய்தது என்கின்ற கேள்வியும் அங்கு எழுந்துள்ளது.

ஆஸ்ட்ரேலியாவின் ஒரு முன்னணி சட்ட அமைப்பு மொஹம்மது ஹனீஃபின் பணி விசா ரத்து செய்யப்பட்ட உத்தரவை குடியேற்றத்துறை திரும்பப் பெறவேண்டும் என்றும், தனிமைச் சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், மொஹம்மது ஹனீஃபின் நாட்காட்டியில் பயங்கரவாதிகளின் சிலர் பெயரை ஆஸ்ட்ரேலிய காவல்துறை எழுதிவிட்டது என்கின்ற குற்றச்சாற்றும் அங்கு பெரும் செய்தியாகிவிட்டது. அதனை அந்நாட்டு காவல்துறைத் தலைவர் மறுத்தாலும், எவ்வித ஆதாரமும் இல்லாமல் மொஹம்மது ஹனீஃப் இப்படி கடுமையாக நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதற்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மற்றவர்களின் உயிர்களை கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டுவரும் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக கடுமையான நிலைப்பாட்டையும், அணுகுமுறையையும் மேற்கொண்டு வருகின்றோம் என்பதனை உலகிற்கு காட்ட ஆஸ்ட்ரேலிய காவல்துறை போன்ற ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைப்பு சட்டத்திற்கு புறம்பான இப்படிப்பட்ட கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

webdunia
webdunia photoFILE
கிளாஸ்கோ தற்கொலைத் தாக்குதலை ஆழமாக விசாரிக்கட்டும். அதில் தொடர்புடைய பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்நாட்டு அரசின் ஒத்துழைப்பைப் பெற்று நடவடிக்கையை மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் தனி தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட உகந்த சூழ்நிலையில், முறைசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளையும், ஒரு நாட்டின் அரசு அதை தனக்கு ஏற்றவாறு அரசியல் கருவியாக பயன்படுத்தினால் அது உண்மையான நோக்கம் சார்ந்த செயல்பாட்டை சிதைத்துவிடும்.

ஹனீஃப் விவகாரத்தில் ஆஸ்ட்ரேலிய காவல் துறையும், அந்நாட்டு அரசும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு குற்றமற்றவரை குற்றவாளியாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதன் விளைவு அந்நாட்டின் பெருமைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil