Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரண தண்டனை அர்த்தமுள்ளதா?

மரண தண்டனை அர்த்தமுள்ளதா?

Webdunia

மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளிகளுக்கு கருணையின் அடிப்படையில் மன்னிப்பு அளிப்பது குறித்து ஒரு பொதுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 20க்கும் அதிகமான மரண தண்டனை கைதிகள் அனுப்பியுள்ள கருணை மனுக்களை பெற்றுள்ள குடியரசுத் தலைவர் கலாம், அதன் மீது தனது முடிவை வெளியிடுவதற்கு முன்னர், கருணை மன்னிப்பு அளிப்பது பற்றி நாடாளுமன்றம் விவாதித்து ஒருமித்த கருத்தை காண வேண்டும் என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.

நாகரீக சமூகத்தில் குற்றத்திற்கு தண்டனை என்பது பொதுவான சட்ட ரீதியிலான ஓர் ஒழுங்குமுறையாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது அவன் செய்யும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சாதாரணமானதாகவோ அல்லது கடுமையானதாகவோ விதிக்கப்பட்டாலும், தண்டனையின் நோக்கம் சட்டப்படி தண்டிப்பது என்பது மட்டுமின்றி, தண்டனைக் காலத்தில் தான் செய்த குற்றத்தை உணர்ந்து அச்செயலிற்குக் காரணமான உணர்ச்சித் தூண்டுதலில் இருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் சிறையில் தனிமையில் அடைக்கப்படுகின்றனர். சமூகத்தில் இருந்தும், சுதந்திரமான உலக அனுபவத்தில் இருந்தும் தாங்கள் செய்த குற்றத்தின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, சுதந்திரம் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கும் போது மனித சிந்தனை ஓர் தீவிர சுய சிந்தனைக்கு ஆட்படுகிறது.

கொடும் குற்றங்களுக்காக சிறைப்படுத்தப்பட்ட பல குற்றவாளிகள் தண்டனைக் காலத்திற்குப் பிறகு விடுதலையாகி மீண்டும் சமூக வாழ்வை தொடரும் போது - சமூகம் அவர்களை எப்படிப் பார்த்தாலும் - அவர்கள் மாறிய, முதிர்ச்சியுற்ற மனிதர்களாகவே வாழ்ந்துள்ளனர், வாழ்கின்றனர்.

சில, பல சாதாரண குற்றங்களின் மூலம் பயன் கண்டு, அப்படிப்பட்ட வாழ்க்கையே சிறந்தது என்று தங்கள் அளவில் முடிவுசெய்து கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், அரசியல் அதிகாரம், சுக வாழ்க்கை ஆகியவற்றை பெற்றுத் தரும் அமைப்பு ரீதியிலான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் ஆகிய இந்த இரு சாரார் தவிர, மற்ற எந்த குற்றங்களுக்காகவும் சிறைத் தண்டனைக்குப் பின் விடுதலையாவோர் திருந்திய மனிதர்களாகவே வாழ்கின்றனர்.

தண்டனையின் நோக்கம் இதுவே. குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் போது, அந்தத் தனிமை அம்மனிதனை ஆழமான சுய சிந்தனைக்கு இட்டுச் செல்லும் போது தான் செய்த குற்றம் தனது வாழ்க்கையின் போக்கை பாதித்ததும், அதன் அர்த்தமற்ற தன்மையும் உணர்ச்சியற்ற நிலையில் சிந்திக்கும் போது அவன் நன்றாகவே புரிந்துகொள்கிறான்.

கொலைக் குற்றம் உள்ளிட்ட எப்படிப்பட்ட குற்றத்திற்கும் தண்டனை அனுபவித்த பிறகு விடுதலைப் பெற்று மீண்டும் வாழ்க்கைத் தொடரும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், சில கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு :- கற்பழித்து கொலை செய்தவன், பல பேரைக் கொன்றவன், தனது குடும்பத்தாரை, தான் பெற்ற மக்களை மனிதத் தன்மைக்கு மாறாக கொன்றவன் போன்றவர்கள் மீண்டும் வாழ அனுமதித்தால் அது சமூக அமைதிக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலாக இருக்கும் என்று சமூகமும், சட்டமும், நீதிமன்றமும் கருதுவதால் மரண தண்டனை விதிக்கப்படுவது பொதுவான நடைமுறையாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட கொடூரச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதித்து அவர்களின் வாழ்க்கையை முடித்தால்தான் அப்படிப்பட்ட கொடூரச் செயல்களில் வேறெவரும் ஈடுபடமாட்டார்கள் என்கின்ற முன்னோக்கும் அடிப்படையாக உள்ளது.

ஆனால், சாதாரணக் குற்றங்களில் இருந்து கொடும் குற்றங்கள் வரை செய்ததாக உறுதி செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றவாளிகள் அனைவருமே நாம் மேலே குறிப்பிட்டுள்ளது போல சுய சிந்தனைக்கு தங்களை உள்ளாக்கிக் கொண்டு முதிர்ச்சி பெறுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துவிட்டால், அவன் ஆழமாக சிந்தித்து மன மாற்றம் பெறும் வாய்ப்பை இழக்கின்றான் என்பதே உண்மை. "எப்படியிருந்தாலும் தூக்கிலிடப்பட்டு உயிர் துறக்கப் போவது நிச்சயம். இதில் சிந்திப்பதனால் என்ன பலன்" என்கின்ற உணர்வுதான் மேலோங்குகிறது. பெரும்பாலான மரண தண்டனை கைதிகள் அந்த அச்சத்திலேயே இறுதி வரை இருந்துவிடுகின்றனர்.

க, தண்டனையின் நோக்கம் மரண தண்டனை விதிப்பதால் முறியடிக்கப்படுகிறது. ஒரு கொடும் குற்றச் செயலில் ஈடுபட்ட அந்த மனிதனை அச்செயலிற்குத் தூண்டிய புறக் காரணங்கள் அனைத்தும் சமூகச் சூழலைச் சார்ந்தவையே என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஏற்றத் தாழ்வுகள் குறைந்த, அன்றாடத் தேவைகள் பொதுவாக கிடைக்கக் கூடிய, வாழ்க்கையின் சுக போகங்கள் பரவலாக அனுபவிக்கப்படுகின்ற முன்னேறிய சமூகங்களில் கொடூரக் குற்றங்கள் குறைவாகவே இருப்பதை மானுடவியல் ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

ஆனால், ஏற்றத்தாழ்வு அதிகமுடைய, உரிமையுள்ள வாய்ப்புகள் கூட கிடைக்காத, அடிப்படைத் தேவைகளுக்கு வழியற்ற, முறைதவறிய தூண்டுதல்கள் நிரம்பிய சூழல்கள் கொண்ட சமூக வாழ்வில் கொடூரக் குற்றங்களுக்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.

உதாரணத்திற்கு :- நமது திரைப்படங்களில் வரும் காம, வன்முறைக் காட்சிகள் அதனைப் பார்க்கும் நெஞ்சங்களில் ஏற்படுத்தும் பாதிப்பு பிற்காலத்தில் முரண்பட்ட ஒரு சூழலைச் சந்திக்கும் போது செயல் வடிவம் பெறுகிறது. ஒரு ரசிகனாய்ச் சென்ற மனிதன், தான் எதிர்பாராத பதிவுகளால் உணர்ச்சி தூண்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரச் செயல்களில் ஈடுபடும் உந்துதலுக்கு ஆளாகின்றான். இது மிகவும் ஆழமாக பார்க்க வேண்டிய சமூகப் பிரச்சனை ஆகும்.

எனவே, ஒரு கொடுஞ் செயலில் ஈடுபட்டான் என்பதற்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு மனிதனை பிறவிக் குற்றவாளியாகப் பார்ப்பதோ அல்லது அப்படிப்பட்ட குற்றச் செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டுமெனில் மரண தண்டனைப் போன்ற கடுமையான தண்டனைதான் சரியான வழி என்பதோ அர்த்தமுள்ள வாதங்கள் ஆகாது.

இவைகளையெல்லாம் நன்கு சீர்தூக்கிப் பார்த்துதான் மரண தண்டனை ஒழிப்பை பல மேலை நாடுகளும் வலியுறுத்துகின்றன. மும்பை தொடர் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவனான அபு சலீமை கைது செய்த போர்ச்சுகல் நாடு, அவனை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒரு நிபந்தனையின் அடிப்படையில்தான் ஒப்புக் கொண்டது. அவனுக்கு எக்காரணம் கொண்டும் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனையாகும்.

எனவே, மரண தண்டனையை ஒழிப்பதுதான் சரியானதாகும். எந்தக் குற்றத்தைச் செய்தவனாயினும் சிறை வாழ்க்கையின் போது அம்மனிதன் நிச்சயம் சிந்திப்பான். அவனுக்குள் மாற்றம் ஏற்பட உகந்த சூழல் உருவாக்கப்பட வேண்டுமெனில் மரண தண்டனை அதற்கு வழியாகாது. அவன் உணர்வு நிலையில் பெற வேண்டிய மாற்றத்திற்கு மரண அச்சம் பெரும் தடையாகும்.

அதுமட்டுமின்றி, மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை (அராபிய நாடுகளில் விதிப்பதைப் போன்று) விதிப்பதால் குற்றங்கள் குறைவதில்லை என்பதை பல புள்ளி விவரங்கள் தெளிவாக்கியுள்ளன.

ஆகவே, தண்டனை அல்ல, கருணையே மனிதனை திருத்தவல்லது.

சிந்தனை அடிப்படையிலான நாகரீக உலகில் மரண தண்டனை அர்த்தமற்றது!


Share this Story:

Follow Webdunia tamil