Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐக்கிய ஜம்மு-காஷ்மீர் பிரதமரின் தீர்வுத் திட்டம்?

ஐக்கிய ஜம்மு-காஷ்மீர் பிரதமரின் தீர்வுத் திட்டம்?

Webdunia

, திங்கள், 16 ஜூலை 2007 (21:52 IST)
PIB PhotoPIB
ஜம்மு பல்கலைக்கழகம் அளித்த முனைவர் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு-காஷ்மீர் சிக்கல் குறித்து விரிவாகப் பேசியுள்ளது மட்டுமின்றி, சிக்கலிற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை நாசுக்காக வெளியிட்டுள்ளார்!

காஷ்மீர் சிக்கலிற்குத் தீர்வு காண பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷா·புடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சிக்கலிற்குத் தீர்வாக 5 அம்சத் திட்டத்தை அதிபர் பர்வேஸ் முஷாரப் வெளியிட்டார்.

அந்தத் திட்டத்திற்கு இதுவரை வெளிப்படையாக மறுமொழி கூறாமல் இருந்த பிரதமர் மன்மோகன் சிங், ஜம்மு பல்கலையில் ஆற்றிய உரையில் தீர்வை நோக்கி எந்த அடிப்படைத் தீர்வை இந்தியா முன்வைக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

"ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய அம்மாநிலத்தின் 3 பகுதிகளில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புக்களை கணக்கில் கொண்டு அதனை நிறைவேற்ற ஒரு பொதுவான புரிந்துணர்வுடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கூறியதற்குப் பின்னர், பிரதமர் ஒரு குறிப்பிட்ட சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார். "ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் சட்டப்பூர்வமான உணர்வுகளை மதிக்கும் அதே வேளையில், ஐக்கிய ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பொதுவான முன்னேற்ற அணுகுமுறை சாத்தியமே என்று நான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார். இங்கு ஐக்கிய ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

ஆக, காஷ்மீர் சிக்கலிற்கு தீர்வாக கட்டுப்பாட்டுக் கோட்டின் இரு பகுதியில் உள்ள காஷ்மீர் பகுதிகளை ஒரு நிர்வாகப் பகுதியாகவும், ஜம்முவை மற்றொரு நிர்வாகப் பகுதியாகவும், லடாக்கை 3வது நிர்வாகப் பகுதியாகவும் நிர்ணயித்து அவைகள் ஒன்றிணைந்த ஒரு ஐக்கிய மாநிலமாக ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமாகவும், அதே நேரத்தில் முழுமையான நிர்வாகச் சுதந்திரமுடைய மாநிலமாகவும் உருவாக்கும் தீர்வுத் திட்டத்திற்கான அடிப்படையை தனது உரையில் மன்மோகன் சிங் இழையவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து பேசியுள்ள பிரதமர், பிரச்சனைக்குத் தீர்வு காண பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் அதேவேளையில், ஜம்மு-காஷ்மீரில் இயங்கிவரும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும், பிரிவினைவாத இயக்கங்களுடனும் வட்டமேஜை மாநாடு என்ற பெயரில் 3 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

வட்டமேஜை மாநாட்டில் இதுவரை இதுவரை கலந்துகொள்ளாமல் தவிர்த்துவரும் குழுக்கள் இதற்கு மேலாவது பேச்சுவார்த்தைக்கு திரும்புவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்திருப்பது, அப்படிப்பட்ட இயக்கங்களுக்கு விடுத்துள்ள வெளிப்படையான அழைப்பாகும்.

காஷ்மீர் சிக்கலிற்குத் தீர்வு காண அனைத்து இயக்கங்களும் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர், முழுக்க முழுக்க காஷ்மீரிகளைக் கொண்ட அதே நேரத்தில் பாகிஸ்தானின் பிடியில் இருந்துகொண்டு இயங்கிவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்திற்கும் குறிப்பாக அழைப்பு விடுக்க வேண்டும்.

காஷ்மீர் சிக்கலிற்கு இறுதித் தீர்வு காணும் அமைதி முயற்சியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை ஈடுபடச் செய்வது மிக அவசியமாகும்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 60 ஆண்டுக்காலமாக நிலவி வரும் கசப்பான காஷ்மீர் சிக்கலிற்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தையை வேகப்படுத்தி அனைத்து பிரிவினைவாத இயக்கங்களையும் ஐக்கிய ஜம்மு-காஷ்மீர் மாநிலத் திட்டத்தை ஏற்கச் செய்ய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil