Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேண்டாம் மீண்டும் கும்பகோணம்

வேண்டாம் மீண்டும் கும்பகோணம்

Webdunia

, திங்கள், 16 ஜூலை 2007 (16:08 IST)
2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி இதே நாள் தான் கும்பகோணம் மட்டுமல்லாது நாடே பெரும் சோகத்தில் மூழ்கியது. காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தே இதற்கு காரணம். யாராலும் எளிதில் மறந்திட முடியாத இந்த தீவிபத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல 94 பள்ளி குழந்தைகள் தீக்கு இரையாயினர்.

வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு அழும் கூக்குரல்களுக்கு மத்தியில் பள்ளியே சுடுகாடாய் காட்சியளித்த அந்த கோர காட்சி இன்று நம் கண் முன்னே வந்து போகிறது. குழந்தைகளை தீக்கு பறிகொடுத்த பெற்றோர்களுக்கு அன்று முதல் இன்று வரை என்னதான் உதவிகள் கிடைத்தாலும் அவர்களின் மனதில் அழியா சுவடாக அந்த தழும்பு இருந்து வருகிறது.

தன் மகன் படித்து ஆசிரியராக வர வேண்டும், தன் மகள் மருத்துவராக வர வேண்டும் என கற்பனைகளோடும், கனவுகளோடும் பள்ளிக்கு அனுப்பி வைத்த பொற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் கறிக்கட்டையாக வந்ததை பார்த்தவர்களின் சோகத்தை சொல்ல இயலாது.

ஏன் இந்த கொடுமை, இதற்கு காரணமானவர்கள் யார்? அரசா அல்லது அரசு வரையறை செய்த விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகமா? என அப்போது பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக செய்திகள் வந்தன. அரசும் தனியார் பள்ளிகளின் கட்டட வசதிகளை மேம்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அது பலனளித்ததா என்பது கேள்விக் குறியே.

இன்றைய கால கட்டத்தில் கல்விச் சேவை என்பது வெறும் காசு, பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவருகிறது என்பது மட்டும் உண்மை. பள்ளிக்கு ஆட்டோவிலும், வாகனத்திலும் செல்லும் குழந்தைகளை காணும் போது இது உண்மை என்பது நமக்கு வெட்ட வெளிச்சமாக தெரியும். மூட்டைகளை அள்ளி போட்டுக் கொண்டு செல்வதுபோல வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிச்செல்கின்றனர். பெற்றோர் தரப்பில் குறையிருந்தாலும் பொருளாதார நெருக்கடி ஒரு பெரும் குறையாக அவர்களுக்கு அமைந்து விடுகிறது.


பள்ளி நிர்வாகம் இதனை ஒழுங்காக முறைப்படுத்த முன் வர வேண்டும். பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கென தனியாக வாகனம் ஒன்றை வாங்கி பொறுப்பான ஓட்டுநரை பணியில் அமர்த்தினால் பெரும்பாலும் விபத்துகளை தடுக்க முடியும். ஆனால், எத்தனை பள்ளி நிர்வாகங்கள் இதற்கு முன் வரும் என்பது கேளிவிக் குறியே.

சென்னை போன்ற பெரு நகரங்களில் இன்னமும் நூற்றுக்கணக்கான தனியார் ஆங்கிலப் பள்ளிகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி கொண்டிருக்கின்றன. கும்பகோணத்தில் அரங்கேறிய கோர சம்பவத்தை தொடர்ந்தும் இதே நிலை தொடர்வது இப்பிரச்சனையில் கல்வித் துறை போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

குறைந்த பரப்பளவு கொண்ட இடத்தில் பள்ளிக் கூடத்தை கட்டி முடித்து விடுகிறார்கள். ஆனால் எல்லா வசதிகளுடனும் பள்ளி கட்டி முடிக்கப்பட்டதற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்று விடுகின்றனர். குறிப்பாக நர்சரி பள்ளிகள் ஒன்றிலாவது குழந்தைகள் மைதானாம் உள்ளதா? , ஏதேனும் ஏற்பட்டால் குழந்தைகளை காப்பாற்றும் வாய்ப்பு வசதிகள் உள்ளனவா என்று பார்த்தால், 90 விழுக்காடு மழலையர் பள்ளிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்காமலேயே இயங்கி வருகின்றன.

மழலையர் பள்ளியில் இருந்து உயர் நிலை, மேல் நிலை பள்ளிகள் வரை தனியார் நடத்திடும் ஒவ்வொரு பள்ளியிலும் விளையாடுவதற்கு மைதானமும், நல்ல பலமான, காற்றோட்டமான வசதிகளுடன் கூடிய கட்டடத்தில் வகுப்பறைகள் உள்ளனவா, கற்பிக்கும் ஆசிரியர்கள் உரிய தகுதி பெற்றவர்களா, கல்வி கற்பித்தலுக்கான வசதிகளும், உபகரணங்களும் உள்ளனவா, விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வு ஏற்படும் போது அவைகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தக் கூடிய தீயணைப்பான் போன்ற உபகரணங்கள் உள்ளனவா என்பதையெல்லாம் கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்புகள் குறித்து தீயணைப்பு துறை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சான்றிதழ் அளிக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் தான் இன்னொரு கும்பகோணம் நிகழாமல் தடுக்க முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil