இருபதாவது நூற்றாண்டில் மட்டும் உலக மக்கட்தொகையில் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 22 கோடியிலிருந்து 280 கோடியாக உயர்ந்தது. இது அடுத்தாண்டின் இறுதிக்குள் மேலும் 50 கோடி அதிகரிக்கும் என்று ஐ.நா.வின் மக்கட்தொகை நிதியம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக வேலை வாய்ப்பு, வாழ்நிலை உயர்வு மற்றும் வசதிகளை நாடி நகரத்தை நோக்கி நடைபெற்று வரும் இந்த மனித நகர்வு ஆச்சரிப்படத்தக்கதல்ல என்றாலும், எதிர் காலத்தில் ஏற்பட போகும் நகர மக்கட்தொகை பெருக்கத்தின் காரணமாக ஏற்கனவே இருப்பவர்கள் மட்டுமல்லாது புதிதாக நகர ஏழைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஐ.நா.கூறியுள்ளது கவலை அளிக்ககூடியதாகும்.2008
ஆம் ஆண்டின் முடிவில் 330 கோடியாக உயரப்போகும் நகர மக்கட்தொகை, 2030 அதாவது அடுத்த 22 ஆண்டுகளில் 500 கோடியாக உயரும் என்று அபாய சங்கு ஊதியுள்ளது ஐ.நா.மக்கட்தொகை நிதியம்.
நகரத்தை நோக்கிய இந்த மானுட நகர்வு ஆசியாவிலும்,ஆப்பிரிக்காவிலும் பெருமளவிற்கு நிகழும் என்றும், இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டில் முன்னேறிவரும் நாடுகளில் மாநகரங்களிலும், நகரங்களிலும் மட்டும் உலக நகர மக்கட்தொகையில் 81 விழுக்காடு மக்கள் வசிப்பார்கள் என்று கூறியிருப்பது இந்தியாவை போன்ற வளரும் நாட்டிற்கு மிகப் பெரிய சவாலாகும்.
அடிப்படை வசதிகள் அற்ற குடிசைப் பகுதிகள், சுகாதாரமற்ற சுற்றுச் சூழலுக்கு இடையே வறுமையுடன் போராடி கொண்டிருக்கும் மக்கள் இந்தியாவில் எல்லா நகரங்களிலும் பரவலாக வாழ்ந்து வரும் நிலையில், நகர மக்கட்தொகை பெருக்கத்தினால் உருவாகப் போகும் புது சவால்கள் குறித்து இன்றே மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி மாநகராட்சி,நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளும் திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.
அதை செய்யத்தவறினால் நமது நாட்டில் எல்ல நகரங்களிலும் குடிசைப்பகுதிகள் உள்ளன என்கின்ற நிலை மாறி குடிசைப்பகுதிகள் சூழ இந்திய நகரங்கள் காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டு விடும்.
இன்றைக்கு ஏன் மக்கட்தொகையை பற்றி... இன்று ( 11 - 07 - 2007 ) உலக மக்கட்தொகை தினமாகும்.