Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிமிட்ஸ் கப்பலைப் பற்றி...

நிமிட்ஸ் கப்பலைப் பற்றி...

Webdunia

, புதன், 4 ஜூலை 2007 (12:22 IST)
அமெரிக்கா அணு ஆயுதப் போர்க் கப்பல் சென்னை துறைமுகப் பகுதியில் 3 மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. அணு ஆயுதக் கப்பல் என்பதால் பல்வேறு எதிர்ப்புகள்...

அணு ஆயுதக் கப்பலை சென்னை துறைமுகத்தில் நிறுத்த எதிர்ப்புத் தெரிவித்து அஇஅதிமுக, இடது சாரிகள் அறிக்கைகளும், போராட்டங்களும் நடத்தின. ஒன்றும் அறியா பொதுமக்களும் அணு ஆயுத போர் கப்பல் சென்னைக்கு வந்தால், சென்னையே அழிந்துவிடும்... அணுக் கசிவு ஏற்பட்டால் தமிழகமே இருக்காது.... என்று பலவாறு பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட நிமிட்ஸ் பற்றிய உண்மை என்னவென்று தெரிய வேண்டாமா?

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ், இராக்கில் போர் பணியாற்றிவிட்டு சற்று இளைப்பாற சுற்றுலா கிளம்பிவிட்டது. அதன் ஒரு பகுதியாகவே நிமிட்ஸ் இந்தியா வந்துள்ளது. அக்கப்பலில் உள்ள வீரர்கள் இந்தியாவில் சில நாட்கள் தங்கியிருந்து தங்களை புதுப்பித்துக் கொண்டு செல்லவே சென்னையில் மையம் கொண்டுள்ளனர்.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனினும் இந்த தொழில்நுட்பம் பாதுகாப்பனது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே, இந்த கப்பல் சென்னைக்கு வர மத்திய அரசு அனுமதித்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை நிமிட்ஸ் சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

நிமிட்ஸ் போர் கப்பலில் பணியாளர்கள், அதிகாரிகள் உட்பட 6,000 வீரர்கள் உள்ளனர். அவர்கள் நேற்றபடகுகள் மூலம் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்காக நட்சத்திர விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண்டாட உள்ளனர்.

மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் கப்பல் ஊழியர்கள் சென்னையில் உள்ள அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகின்றனர். எலியட்ஸ் கடற்கரையை அவர்கள் சுத்தம் செய்தனர். அனாதை ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

நிமிட்ஸ் போர்க் கப்பலில் வந்தவர்கள் இப்படியிருக்க... நிமிட்ஸ் போர் கப்பலோ நமது சென்னை துறைமுகத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. அணுசக்தி மூலம் இயங்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவிற்கு ஆபத்தானதுதான். ஆனால் இந்த தொழில்நுட்பம் கடந்த 57 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இதுவரை எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை. அதில் இருக்கும் நாங்களே மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று கப்பலில் வந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும், கப்பலில் அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகாமிட்டுள்ளது. அணு கசிவை துரிதமாக கண்டறிந்து தகவல் அளிக்கும் கருவியும் அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் நிமிட்ஸ் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளையே அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரையில் சுற்றி வருகின்றர். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

பொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.

கப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து வரவில்லை என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உடையது. 23 மாடிகள் கொண்ட இந்த கப்பலிலஒரே நேரத்தில் 65 போர் விமானங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே மாதம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த இக்கப்பல் கடந்த 32 ஆண்டுகளாக சளைக்காமல் பணியாற்றி வருகிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் பணிபுரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸின் நினைவாக அவரது பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

நிமிட்ஸில் 53 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை உள்ளது. அதில் 6 மருத்துவர்களும், தனியாக 5 பல் மருத்துவர்களும் இருக்கின்றனர். உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. அதன் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை குடிநீர் தேவைக்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும். கப்பலில் இருப்பர்கள் வழிபாட்டிற்காகக் கூட வெளியே செல்ல வேண்டாம். வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் பலரும் கப்பலில் இருப்பதால் அவர்களுக்கு வசதியாக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள்ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 விழுக்காடு ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமானங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. போர் விமானங்கள் பழுதடைந்துவிட்டால் அவற்றை உட்பகுதிக்ககொண்டு சென்று பழுது பார்க்கும் தளமும் உள்ளது.

உணவு உண்ணுவதற்கான தனிக் கூடம், மாநாட்டு அறை, பொழுதுபோக்கு கூடம் என அனைத்து வசதிகளும் இந்த போர்க் கப்பலில் உள்ளன. மொத்தத்தில் ஒரு சிறிய நகரத்தில் இருக்கும் அத்தனை வசதிகளும் இருக்கும் இந்த கப்பலை மிதக்கும் நிமிட்ஸ் நகரம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil