கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் குண்டடிபட்டு அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது!
ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 780 படகுகளில் சென்று கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடந்துள்ளது. இதில் குண்டடிபட்ட குணபாலன், ராமேஸ்வரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.
இலங்கையுடன் நல்லுறவை ஏற்படுத்தும் பொருட்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நமக்குச் சொந்தமான கச்சத் தீவு சிறிலங்காவிற்கு அளிக்கப்பட்டது. அவ்வாறு அளிக்கப்பட்டபோது அது தொடர்பான ஒப்பந்தத்தின் படி, கச்சத் தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டு அந்நாட்டிற்குச் சொந்தம் என்றாலும் கூட, அத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக (இந்திய) மீனவர்களுக்கு உண்டு என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடிப்பது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் இறங்கி ஓய்வெடுக்கவும், தங்களுடைய மீன் பிடி வலைகளை உலர்த்தவும் உரிமை உண்டு என்பது அந்த ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இத்தாக்குதல் அத்துமீறிய நடவடிக்கை என்றும், ஒப்பந்த மீறல் என்றும் பல முறை தமிழக அரசின் உந்துதலின் பேரில் சிறிலங்க அரசிற்கு மத்திய அரசு கூறிவந்துள்ளது.
ஆயினும், தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நமது மீன் பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று எத்தனையோ முறை மத்திய அரசு எடுத்துக் கூறியும் தனது போக்கை சிறிலங்க அரசு மாற்றிக்கொள்ளவில்லை.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் வென்று முதல்வரான ஜெயலலிதா, தனது தேர்தல் அறிக்கையிலேயே கச்சத் தீவை மீட்போம் என்று சூளுரைத்திருந்தார். ஆனால் அங்கு ஒப்பந்த ரீதியாக நமக்குள்ள உரிமையைக் கூட அவரால் நிலைநாட்ட முடியவில்லை.
இன்றைக்கு தி.மு.க. ஆட்சி உள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பலமுறை முதலமைச்சர் கருணாநிதியும் மத்திய அரசிற்கு கடிதம் எழுதிவிட்டார். மத்திய அரசும், சிறிலங்க அரசிற்கு அழுத்தம் தந்ததாக செய்திகள் வெளியாயின.
ஆனால் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கச்சத் தீவுப் பிரச்சனையும் கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது.
கச்சத் தீவை மீண்டும் கைப்பற்றினால் மட்டுமே தமிழக மீனவர்கள் மீதான சிறிலங்க கடற்படையினரின் தாக்குதல்களுக்கு முடிவு ஏற்படும். அதனைச் செய்யாமல் வெறும் கண்டிப்புகளை மட்டும் வெளியிட்டிருக் கொண்டிருந்தால் எந்தப் பயனும் ஏற்படாது.
சக்தி வாய்ந்த கடற்படையும், திறமை வாய்ந்த கடலோரக் காவற்படையும் கண்காணிப்பில் ஈடுபட்டும் சிறிலங்க கடற்படையின் அத்துமீறிய தாக்குதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கச்சத் தீவு நமதானால்தான் அந்தக் கடற்பரப்பும் நமது படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
எனவே, தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். கச்சத் தீவை மத்திய அரசு திரும்பப் பெற்றாக வேண்டும் என்று மத்திய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., பா.ம.க. கட்சிகள் வலியுறுத்த வேண்டும். அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் அரசியலிற்கு இடம்தராமல் இப்பிரச்சனையில் அழுத்தம் தரவேண்டும்.
கச்சத் தீவை மீட்கும் முயற்சியில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கச்சத் தீவை மீட்பதன் மூலம் தமிழகர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
இதனை மத்திய, மாநில அரசுகள் செய்யவில்லையென்றால் அது தமிழக மீனவர்களின் உரிமையையும், உயிரையும் மதிக்கவில்லை என்றே அர்த்தமாகும்.