123 ஒப்பந்தம் : மறு ஆக்க உரிமையை விட்டுத்தரக் கூடாது!
, புதன், 6 ஜூன் 2007 (19:12 IST)
இந்தியா - அமெரிக்கா இடையே அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான 123 ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக நடைபெற்ற பேச்சவார்த்தையில் மூன்று முக்கியக் காரணங்களினால் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது!
தலைநகர் டெல்லியில் அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் தலைமையிலான குழுவினருடன், அயலுறவுச் செயலர் ஷிவ்சங்கர் மேனன், பிரதமரின் சிறப்புத் தூதர் ஷியாம் சரண் ஆகியோரைக் கொண்ட குழுவினர் 3 நாட்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், இருதரப்பினருக்கும் இடையே 3 முக்கியக் காரணங்களினால் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியவில்லை என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. நமது அணு மின் சக்தி நிலையங்களுக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளை அளிப்பதற்கு சட்டம் இயற்றி ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்கா, அது அளிக்கும் எரிபொருளை பயன்படுத்திய பிறகு அக்கழிவை மீண்டும் எரிபொருளாக்கிப் பயன்படுத்தும் மறு ஆக்கம் செய்யும் உரிமையை நமக்குத் தர மறுக்கிறது. இதுவே முதல் காரணமாகும். அணு மின் நிலையங்களில், குறிப்பாக கடின நீர் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் கழிவை வேக ஈனுலைகளில் மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள நமது விஞ்ஞானிகள், அவ்வாறு பயன்படுத்தப்பட்ட அணுக் கழிவையும் மறு ஆக்கம் செய்து பயன்படுத்துவதில் முழு வெற்றி பெற்றுள்ளார்கள். இது நமது அணு சக்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். ஏனெனில், அணுக் கழிவில் இருந்து வெளியேறும் கதிரியக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மட்டுமின்றி, அதனை புதைத்து அழிப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளது. அந்த ஆபத்தை மறு ஆக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் நமது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தவிர்த்துவிட்டனர். அதுமட்டுமின்றி, அணுக் கழிவை பத்திரமாகக் கொண்டு செல்வது என்பதும் ஆபத்து நிறைந்ததாகும். எனவேதான் மறு ஆக்கம் செய்யும் தொழில் நுட்பத்தை உருவாக்கிய நமது விஞ்ஞானிகள் மறு ஆக்கம் செய்யும் உரிமையை விட்டுத்தர முடியாது என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.
2006
ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், அணு எரிபொருள் கழிவு மிகப் பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாகும் அபாயம் உள்ளதென்றும், எனவே நம்மைப் பொறுத்தவரை பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறு ஆக்கம் செய்வது மிக மிக முக்கியமானது என்று கூறினார். இதுமட்டுமின்றி, மேலும் 2 முக்கியக் காரணங்கள் 123 ஒப்பந்தம் உருவாவதற்கு தடையாக உள்ளன.
ஒன்று, நமது நாட்டின் தேச பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணு ஆயுதச் சோதனை நடத்தும் பட்சத்தில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் படி, நமது அணு மின் நிலையங்களுக்கு எரிபொருள் அளிப்பதை அமெரிக்கா நிறுத்தக்கூடாது என்பதும்,இரண்டு, தற்பொழுது நமக்கு நாமே விதித்துக் கொண்டுள்ள அணு ஆயுதச் சோதனை நடத்துவது தொடர்பான சுய கட்டுப்பாட்டை நிரந்தரமாக்க வேண்டும் என்கின்ற அமெரிக்காவின் கோரிக்கை ஆகும். நமது அணு உலைகளுக்கும், நாம் இதற்கு்மேல் கட்ட திட்டமிட்டுள்ள அணு உலைகளுக்கும் தேவையான யுரேனிய எரிபொருளை எதிர்பார்த்தே அமெரிக்காவுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு நமது நாடு முன் சென்றது. எந்த நிலையிலும் அணு ஆயுதம் தொடர்பான தொழில்நுட்பத்தை எந்தவொரு நாட்டிற்கும் வழங்குவதில்லை என்கின்ற உறுதியை அளித்தது மட்டுமின்றி, அது தொடர்பான பேரழிவு ஆயுதங்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தையும் உருவாக்கி அமெரிக்காவிற்கு உத்தரவாதம் அளித்தது. அதன் அடிப்படையில்தான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (என்.பி.டி.) கையெழுத்திடாத நமது நாட்டுடன் சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளிக்குமாறு அமெரிக்க நிர்வாகம் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒப்புக்கொள்ளச் செய்து அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றியது. ஆனால், அமெரிக்காவின் அணு சக்தி சட்டப்படி அப்படிப்பட்ட ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்படும் 123 ஒப்பந்தத்திற்கான கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது. இது நமது அடி மடியிலேயை கை வைப்பதற்கு ஒப்பாகும். இந்தியாவின் அணு திட்டம் என்பது நமது எரிசக்தி தேவையையும், நமது பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும். அணு மின் சக்தியை உருவாக்குவதில் 3 கட்ட அணு சக்தி திட்டத்தை இலக்காக வைத்து நமது விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகின்றன. வெற்றிகரமான இத்திட்டத்தின் காரணமாகவே கடின நீர் அணு உலைகளில் இருந்து கிடைக்கும் அணுக் கழிவைப் பயன்படுத்தி மின் சக்தியை தயாரிக்கக்கூடிய வேக ஈனுலை தொழில்நுட்பத்தை உருவாக்கி அதனை வெற்றிகரமாகச் சோதித்து தற்பொழுது கல்பாக்கத்தில் முதல் 500 மெகாவாட் வேக ஈனலை அமைக்கும் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இருந்து அடுத்தகட்டமாக தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி அணு மின் சக்தியை உருவாக்கும் உயர் தொழில்நுட்பத்தை நோக்கி இந்திய விஞ்ஞானிகள் வேக நடை போட்டு வரும் வேளையில், இந்த விவரங்களை அறிந்த எவரும் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்கா போடும் நிபந்தனைகள் முன்னேற்றம் சார்ந்த நமது அணு திட்டத்திற்கு எதிரானது என்பது மட்டுமின்றி, நமது தேசத்தின் பாதுகாப்பை சமரசப்படுத்தும் ஆபத்து நிறைந்ததாகும். அமெரிக்காவின் சட்டம் அந்நாட்டின் பிரச்சனை என்று இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளித்தார். மிகச் சரியானது. இந்த நிலையில் இருந்து இந்தியா பின்வாங்கக் கூடாது.
பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிகளுக்கு இணங்க, 2005 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி கையெழுத்தான கூட்டறிக்கை மற்றும் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நமது அணு உலைகளை சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையின் பார்வைக்கு உட்படுத்துவதற்கு அளித்த பட்டியலின் அடிப்படையில் மட்டுமே 123 ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும். மேற்கண்ட அந்த 2 உறுதியான நிலைப்பாடுகளில் இருந்து மத்திய அரசு பின் வாங்குமேயானால் அது நமது விஞ்ஞானிகளின் ஆக்கத்தையும், நமது அணு திட்டத்தின் முன்னேற்றத்தையும், நமது நாட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிடும்.