Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள அரசின் முக்காலி அணை திட்டம்

கேரள அரசின் முக்காலி அணை திட்டம்

Webdunia

கேரள அரசின் முக்காலி அணை திட்டத்தால் பவானிசாகர் அணை வறண்டு போகும்?

கேரள அரசு தற்போது முக்காலி என்ற இடத்தில் சைலண்ட்வேலி தேசிய பூங்காவின் வனத்துறை அலுவலகம் அருகே பவானி நதியை தடுத்து அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதனால், ஈரோடு, கோவை, கரூர் மாவட்டங்களை வளமாக்குவதுடன் இந்த மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கி வரும் பவானிசாகர் அணை வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விண்ணைத் தொட துடிக்கும் மலைகள், அந்த மலைகளின் மடியில் வகை, வகையான மரங்கள் இந்த வனத்தில் துள்ளி ஓடும் மான்கள், தோகை விரித்தாடும் மயில்கள், கம்பீரமாய் நடமாடும் யானைக்கூட்டம் இப்படி பல உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் எங்கு பார்த்தாலும் தென்னந்தோப்புகள், நெற்பயிர்கள், வாழைத்தோப்புகள் என விவசாயத்தின் வளமான பசுமைத்தோப்பாக காட்சியளிக்கும் ஈரோடு மாவட்டம் முழுவதும், கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் வாழவைத்து கொண்டிருக்கும் ஜீவ நதிதான் பவானி ஆறு.

பவானிசாகர் அணையில் இருந்து வரும் இந்த ஆற்றின் மூலம் 40 லட்சம் மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி மூன்று லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தை வளமாக்கி விவசாயிகளின் வாழ்வில் ஒளி விளக்கேற்றி வருவது பவானிசாகர் அணைதான். இந்த அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து ஓடிவரும் பவானி ஆறும், முதுமலை பகுதியில் இருந்து தவழ்ந்து வரும் மாயாறும் நீர் பிடிப்புக்குக் காரணமாக இருந்து வருகிறது. இதில் மாயாறுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. காரணம், இந்த ஆறு தெங்குமரஹடா வழியாக முழுமையாக தமிழ்நாட்டின் உட்பட்ட பகுதிக்குள் வந்துவிடுகிறது. ஆனால் தற்போது பவானி ஆற்றினால்தான் பிரச்சினை உதயமாகி உள்ளது.

காரணம், தமிழ்நாட்டை சேர்ந்த நீலகிரி மலைப்பகுதி குந்தா பகுதியில் உற்பத்தியாகும் பவானி ஆறு சில கி.மீ. தூரம் சென்ற பிறகு கேரள பகுதியில் நுழைந்து சுமார் 20 கி.மீ. தூரம் மலைகளுக்கிடையே பயணம் செய்கிறது. அங்கிருந்து வடகிழக்கில் பயணிக்கும் பவானி ஆறு முக்காலி என்ற மலை உச்சியிலிருந்து கிழக்கு திசைக்கு திரும்புகிறது. பின்பு மீண்டும் தன் தாய்வீடான தமிழகத்திற்குள் நுழைந்து பில்லூர் அணையில் கலக்கிறது. அங்கிருந்து நிரம்பி மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக பவானிசாகர் அணைக்கு வந்து கலக்கிறது. பில்லூர் அணையில் இருந்து செல்லும் பவானி ஆற்றின் தண்ணீர்தான் கோயமுத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கிறது!

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பவானி ஆற்றை கேரளாவிற்கு உட்பகுதியில் சென்று வருவதால், இந்த ஆற்றை அப்படியே திருப்பி மன்னார்காடு பகுதிக்கு கொண்டு செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதறகhக ரூ.2ஙூ கோடி செலவில் முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டவும் முடிவெடுத்துள்ளது.

1997-ம் ஆண்டிலேயே கேரள அரசின் பாசனத்துறை ஆணையம், இதற்கான உத்தரவை (ஆணை எண் : 1275/97 / தேதி 8-9-97) வெளியிட்டது. மன்னார்காடு பகுதியில் பாசனத்தை மேம்படுத்துவதற்கு பவானி நீரை பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமென்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் பவானி ஆறு என்று குறிப்பிடாமல் முக்காலி வன அலுவலகத்திற்கு பின்புறமுள்ள ஓடையை பாந்தான்தோடு என்ற ஓடையுடன் இணைப்பது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த இடத்தில் வேறு ஓடைகள் எதுவும் ஓடுவதில்லை. பவானி ஆறு மட்டுமே ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த அணையை கட்ட பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மன்னார்காடு பகுதிக்கு பவானி ஆறு திருப்பப்பட்டால் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாய நிலம் முழுவதும் பாதிக்கப்படும் என்பதே இதற்கு காரணமாகும். இந்த பள்ளத்தாக்கு பகுதியில் பவானி ஆற்று நீரை நம்பி 50 ஆதிவாசி கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் வசிக்கும் பனிரெண்டாயிரம் ஆதிவாசிகள் முக்காலி அணை திட்டத்தை எதிர்த்து போராடத் தயாராகிவிட்டனர். அட்டப்பாடி பஞ்சாயத்து யூனியன் சார்பிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி கேரள அரசுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு, கேரளாவிற்கு இடையே இரு மாநில நீர்ப்பாசன திட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட மறுபரிசீலனை, முல்லைப் பெரியாறு அணை உயரத்தை 152 அடியாக உயர்த்துவது, பம்பா - அச்சன் கோயில் - வைப்பார் இணைப்புதிட்டம், பாண்டியாறு - புன்னம்புழா நதிகளில் நீரை தமிழகத்திற்கு திருப்புவது உள்ளிட்ட 12 பிரச்சினைகள் பற்றி இரு மாநில அரசுகளும் தொடர்ந்து பேசி வருகின்றன.

காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் தமிழகத்திடம் அனுமதி பெறாமல் கர்நாடகம் 6 அணைகளை கட்டியது போல் கேரளாவும் இந்த முயற்சியில் இறங்கியிருப்பது, தமிழக விவசாயிகளுக்கு வேதனையும், அதிர்ச்சியும் அளித்துள்ளது. ஆகவே முக்காலி அணை கட்டும் முன்பு தமிழகம் விழித்துக் கொண்டால் பவானிசாகர் அணையில் நீர் பெருகும். இல்லையேல் விவசாயிகளின் கண்ணீரால்தான் நிரப்பவேண்டும் என்பதே தற்போதைய நிலை.

மின்சாரத்திற்கு வேண்டியே கேரள திட்டம்!

கேரள மாநிலத்தில் எப்போதும் மழை வளமும், நீர் வளமும் அளவிற்கு அதிகமாகவே இருக்கும். கேரளா வழியா மொத்தம் 85 நதிகள் அரபிக்கடலில் சங்கமிக்கின்றன. கேரளாவில் மொத்த நீர்வளம் மட்டும் 2,500 டி.எம்.சி. ஆகும். குடிநீர், பாசனம் உட்பட மொத்தம் 850 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இந்த மாநிலத்திற்கு போதுமானது. மீதமுள்ள 1,250 டி.எம்.சி. தண்ணீர் முழுவதும் கடலில்தான் கலக்கிறது என மத்திய நீர்வள மேம்பாட்டு திட்டகுழுவின் 1978-ம் ஆண்டு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இவற்றை தமிழகத்தின் வறட்சி பகுதிகளுக்கு திருப்பினால் பெரும்பயன் ஏற்படும் என்றும், அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் 1976 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இரு குழுக்கள் பரிந்துரையும் செய்தன. ஆனால், அது கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. கேரள அரசு பவானி ஆற்றை திருப்ப நினைப்பது நீர்மின் திட்டம் அமைப்பதற்காகத்தான் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil