Newsworld News Currentaffairs 0706 04 1070604022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண காலமும் - தங்கத்தின் விலையேற்றமும்!

Advertiesment
திருமண காலமும் - தங்கத்தின் விலையேற்றமும்!

Webdunia

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தங்கள் பெண்களுக்கு திருமணத்தை நிச்சயித்துவிட்ட பெற்றோர்கள் தங்கத்தின் விலையைக் கண்டு விழிபிதுங்கி நிற்கின்றனர்!

கடந்த 2 மாத காலமாக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தங்கத்தின் விலையேற்றம், தாங்கள் பெற்ற தங்கங்களை கரையேற்ற திட்டமிட்ட பெற்றோர்களை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது.

கிராமிற்கு 410 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை இன்று 537 ரூபாயாக உயர்ந்துள்ளது!

என்னய்யா காரணம் என்று கேட்டால், ஈராக்கின் மீது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன என்று பதில் தருகிறார்கள். ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அதனால் பாதிக்கப்படப்போவது கச்சா எண்ணெய் உற்பத்திதான். காரணம் கச்சா எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது பெரும் உற்பத்தியாளராக இருப்பது ஈராக்.

ஆனால், இதற்கும் தங்கத்தின் விலையேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்று இன்று வரை யாரும் விளக்கவில்லை.

அதுமட்டுமா, மற்றொரு காரணத்தையும் கூறுகிறார் சென்னையின் தங்கம் மற்றும் வைர வியாபாரிகளின் சங்கத் தலைவர், வடகொரியா ரகசிய அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதால், அந்நாட்டிற்கும், அமெரிக்காவிற்கும் பிரச்சனை ஏற்படும் என்றும், அதனால் அமெரிக்க டாலர் மதிப்பு குறையும் வாய்ப்புள்ளது என்றும், அதனை எதிர்பார்த்தே தங்கம் விலை உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. லண்டன் தங்கச் சந்தையில் விலை தொடர்ந்து கூடிவருவதால் சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஈராக் மீது அமெரிக்கா இன்னும் போர் தொடுக்கவில்லை. அப்படியே போர் தொடுத்தாலும், அதற்கும் எண்ணெய் உற்பத்திக்கும்தான் சம்பந்தம் உண்டே தவிர, அங்கு தங்கம் எங்கே வருகிறது என்று தெரியவில்லை.

லண்டன் தங்கச் சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (28.35 கிராம்) 24 காரட் தங்கத்தின் விலை 357.80 டாலராக உயர்ந்துள்ளது. இந்த உயர்விற்குக் காரணம் என்ன என்று இதுவரை விளக்கப்படவில்லை.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது.

இப்பொழுது மூன்றாவது, நான்காவது காரணங்களும் கூறப்படுகின்றன!

ஜப்பான் தனது தங்க இருப்பை தொடர்ந்து கூட்டிக்கொண்டே வருவதாலும், தென் ஆப்ரிக்காவில் உள்ள தங்க சுரங்கங்களில் பணியாற்றிடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாலும் தங்க தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தாலும், கல்யாண நேரத்தில் வாங்கித்தானே தீரவேண்டும் என்று எதிர்பார்த்து முன்கூட்டியே திட்டமிட்டு விலைகள் உயர்த்தப்பட்டு வருவதாகவே மக்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாக தங்கத்தின் விற்பனை பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக பண்டிகை, திருமண காலங்களில் நாளுக்கு 10 முதல் 12 கி.கி. வரை தங்க நகைகள் விற்பனை செய்து வந்ததாகவும், ஆனால் தற்பொழுது 7 முதல் 7 1/2 கி.கி. மட்டுமே விற்பனையாகி வருகிறது என்றும் பிரின்ஸ் ஜுவல்லரி நிர்வாகி கூறியுள்ளார்.

தங்களுடைய விற்பனை பாதிக்குப் பாதி பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 50 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் இருந்துவரும் லலிதா ஜுவல்லரி நிறுவனத் தலைவர் கந்தசாமி கூறியுள்ளார்.

பொதுவாக பண்டிகை மற்றும் திருமண காலங்களில் தங்க நகை விற்பனை 100 விழுக்காடு கூடும். ஆனால் இம்முறை பாதியாக குறைந்துள்ளது கவலையளிக்கின்றது என்று கூறியுள்ள கந்தசாமி, தை மாதம் பிறந்துவிட்டது. இத்திருமண காலத்தில் விற்பனை கூடும் என்று எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருமணத்தை முன்னிட்டோ, சேமிப்பை முன்னிட்டோ தங்களுடைய தனித்த அவசியத்தின் காரணமாக மக்கள் வாங்குவதைப் பொறுத்து விற்பனை கூடலாம் அல்லது குறையலாம்.

ஆனால் எல்லோரும் புரிந்துகொள்ள விரும்புவது என்னவெனில், தங்க விலையேற்றதற்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதே.


Share this Story:

Follow Webdunia tamil