Newsworld News Currentaffairs 0706 04 1070604021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனுமதி பெறாமல் பவானி மீது கேரளா கட்டும் தடுப்பு அணை!

Advertiesment
பவானி அணை!

Webdunia

ஈரோடு, சேலம் விவசாயிகளுக்கு தண்ணீர் அளித்து அவர்களுக்கு வாழ்வளித்துவரும் பவானி ஆற்றின் மீது அனுமதி பெறாமலேயே தடுப்பு அணை கட்டும் முயற்சியில் கேரளா ஈடுபட்டுள்ளது என்கின்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது!

தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளாவிற்குள் பாய்ந்து பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்குள் ஓடிவரும் பவானி ஆற்றின் மீது முக்காலி எனும் இடத்தில் தடுப்பு அணை ஒன்றைக்கட்டி தண்ணீரை மேற்குப் பக்கமாக திருப்ப கேரளா ஈடுபட்டு வருகிறது.

இதற்கு கோவை, ஈரோடு, சேலம் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பை காட்டிவருகின்றனர். தமிழக அரசு இப்பிரச்சனையை நதிநீர் தகராறு தீர்ப்பாயத்திற்கு கொண்டு சென்றது. மார்ச் 6 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அணை கட்டுமானப் பணியை நிறுத்திவைக்குமாறு தீர்ப்பாயம் நேற்று இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசிற்கு தாக்கீது ஒன்றை அனுப்பியுள்ளது.

இந்த தடுப்பு அணை கட்ட பெங்களூரில் உள்ள மண்டல வன தலைமைப் பாதுகாப்பாளர் அளித்த ஒப்புதலை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு மத்திய வன மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் உதவி தலைமை ஆய்வாளர் ஜே.பி. மிஸ்ரா கேரள அரசிற்கு தாக்கீது ஒன்றை அனுப்பியுள்ளார்.

பவானி ஆற்றோடு இணையும் கிளை ஆறு ஒன்றின் மீதுதான் தடுப்பு அணை கட்டிக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கேரள அரசு விடுத்த கோரிக்கையை ஏற்றுத்தான் பெங்களூரில் உள்ள மண்டல வன தலைமை பாதுகாப்பாளர் அனுமதி அளித்துள்ளாரே தவிர, அந்த அனுமதியில் "பவானி நதியின் மீது தடுப்பு அணை கட்டிக்கொள்ள" என்று குறிப்பிடப்படவில்லை என்பதை மிஸ்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு பவானியின் கிளை ஆறு ஒன்றின் மீது தடுப்பு அணை கட்டுவதற்கு பதிலாக, பவானி ஆற்றின் மீது முக்காலி எனும் இடத்தில் தடுப்பு அணை கட்டுவது ஏன்? என்று மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

"பவானி ஆற்றின் மீது தடுப்பு அணையோ அல்லது வேறு எந்த கட்டுமானத்தையோ கட்டி, நதி நீரை திருப்பி விடுவதற்கு எந்த அனுமதியையும் வன பாதுகாப்புச் சட்டம் - 1980-ன் கீழ் மத்திய அமைச்சகம் தரவில்லை" என்று தனது தாக்கீதில் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

"பவானியின் கிளை ஆறு ஒன்றின் மீது தடுப்பு அணை கட்டி பந்தந்தோடு பகுதிக்கு வாய்க்கால் வெட்டி தண்ணீரை கொண்டு செல்வதற்கு பதிலாக - அனுமதி அளிக்கப்பட்ட திட்டத்தின்படி - பவானியின் ஆற்றின் மீதே தடுப்பு அணையை கட்டி மாந்தோப்பட்டி சிற்றாற்றிற்கும், பவானிக்கும் இடையே கால்வாய் வெட்டி பவானி நதி நீரை முழுமையாக மேற்குப் பக்கம் திரும்பும் முயற்சி நடைபெற்று வருவதை மண்டல வன தலைமை பாதுகாப்பாளர் நேரிலேயே கண்டுள்ளார். பவானியின் கிளை ஆற்றில் இருந்து பந்தந்தோட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு பதிலாக, அனுமதி அளித்ததற்கு மாறாக பவானியின் மீது தடுப்பு அணை கட்டி நீரை திருப்பும் முயற்சி நடந்து வருகின்றது" என்று அந்த தாக்கீது கேரள அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளது.

மண்டல வன தலைமை பாதுகாப்பாளர் அளித்த அனுமதிக்கு மாறாக இப்படிப்பட்ட திட்டத்தை நிறைவேற்றத் துணிந்த அதிகாரிகளின் பெயர்களை முழுமையாக அளிக்குமாறும் கேரள அரசை அந்த தாக்கீது கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த தாக்கீதிற்கு ஒரு மாதத்திற்குள் கேரள அரசு பதிலளிக்கவில்லை என்றால் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கப்படும் என்றும், அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் அந்த தாக்கீது கூறியுள்ளது.

மத்திய அரசு கேரள அரசிற்கு அளித்துள்ள இந்த தாக்கீதின் நகலை கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் (தி.மு.க.) பொங்களூர் பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் நலனிற்கு புறம்பாக அணை கட்ட முயற்சிப்பதே பெரும் குற்றம். அதிலும், ஒரு அரசு வேறு ஒரு ஆற்றின் மீது தடுப்பு அணை கட்டுவதாகக் கூறி அனுமதி பெற்று, அதனை தவறாகப் பயன்படுத்தி முக்கிய நதியின் மீது அணை கட்டி நதி நீரை திருப்ப முயற்சிக்கும் குற்றச் செயல் வேறு எந்த நாட்டில் நடைபெறும்? இந்தியாவைத் தவிர!

நல்ல நாடு! நல்ல மக்கள்!! நல்ல அரசுகள்!!!

Share this Story:

Follow Webdunia tamil