Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் மீது தாக்குதல் : மத்திய அரசின் பாராமுகம்!

மீனவர்கள் மீது தாக்குதல் : மத்திய அரசின் பாராமுகம்!

Webdunia

ராமேஸ்வரம், புதுக்கோட்டையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்து மீறி தாக்கி வருவது ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது.

ஏதோ சாலை விபத்து போல ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என்கின்ற செய்தி சிறு சிறு இடைவெளிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே மோதல் வலுவடைந்து வரும் நிலையில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்றுவிடாமல் எச்சரிக்கையாக மீன்பிடிக்குமாறு மாவட்ட நிர்வாகங்களால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படியே, தமிழக மீனவர்களும் சர்வதேச கடற்பகுதியிலும், கச்சத் தீவை ஒட்டியுள்ள, நமக்கு மீன்பிடிக்க உரிமை உள்ள கடற்பகுதிகளிலும் மீன்பிடித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் மீது இலங்கை கடற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் ஆந்ரூஸ் என்ற மீனவர் குண்டடிப்பட்டு ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, அவர்களின் வலைகளையும், மீன்பிடி உபகரணங்களையும் பறித்துக் கொண்டது மட்டுமின்றி, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், இறால்களையும் பிடுங்கி கடலில் எறிந்துவிட்டு திருப்பி அனுப்பியுள்ளது.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை அவருடைய ஒவ்வொரு கடிதத்திலும் இடம்பெறுகிறது.

அதுமட்டுமின்றி, இலங்கைக்கு நாம் அளித்த கச்சத் தீவு பகுதியில், நமக்குள்ள மீன்பிடி உரிமையை நிலைநிறுத்துமாறும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்துள்ளார். இப்பொழுதும் அதைத்தான் முதலமைச்சர் ஜெயலலிதா செய்துள்ளார்.

கச்சத் தீவை குத்தகைக்கு எடுத்து நமது மீனவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்படி ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தாலும், அதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து எந்த பதிலும் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.

நமது கடலோர பகுதிகளை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவற்படையும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தியதாகவும் தெரியவில்லை. ஆனால், தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதற்கு அர்த்தம் என்ன?

Share this Story:

Follow Webdunia tamil