2004ஆம் ஆண்டு டிசம்பர் 26, ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு இந்தியப் பெருங்கடலில் சுமத்ரா தீவை ஒட்டி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் உருவான ஆழிப் பேரலைகள் 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை தாக்கியதால் 2,90,000 பேர் உயிரிழந்தனர்!
சுமத்ரா தீவில் உள்ள பாண்டா ஆச்சே பகுதியில் மட்டும் 2,40,000 பேர் உயிரிழந்தனர். இலங்கையில் 31,000 பேரும், இந்தியாவில் 16,000 பேரும், தாய்லாந்தில் 5,000 பேரும் உயிரிழந்தனர்.
இந்தியாவில் மிக அதிகமாக தமிழ்நாட்டிலும், வங்கக் கடலில் உள்ள அந்தமான், நிக்கோபார் தீவுகளிலும்தான் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டின் நாகை கடலோரப் பகுதிகளில் மட்டும் 7,000 பேர் உயிரிழந்தனர்.
மானுட வரலாற்றில் பேரழிவை ஏற்படுத்தி மாறா வடுவாக நின்ற சோக நிகழ்வுகளில், கடந்த ஆண்டு ஏற்பட்ட இந்த பேரழிவும் இடம்பெற்றது.
சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு மட்டுமின்றி, அந்த பேரழிவிற்கு காரணமான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் தட்ப வெப்ப நிலையில் இருந்து நமது இயற்கைச் சூழலை பெருமளவு பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுனாமிக்குப் பிறகு வரலாறு காணாத அளவிற்கு இந்தியா முழுவதும் மழை பெய்துள்ளது. மும்பை முதல் தமிழ்நாட்டின் பல பகுதிகள் வரை வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் மூழ்கி மீண்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்பிற்கு உள்ளானது.
புவியியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் அனைத்தும் டிசம்பர் 26 ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர் விளைவுகளா? என்பதை விஞ்ஞானிகள் மிகத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னெப்பொழுதையும் விட இப்பொழுது விஞ்ஞானத்தின் பணி மிக அதிகமாக தேவைப்படுகிறது.
2004, டிசம்பர் 26 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்த 27 விஞ்ஞானிகளைக் கொண்ட பன்னாட்டுக் குழு, ஆர்.ஓ.வி. என்று அழைக்கப்படும் தொலைவில் இருந்து இயக்கப்படக் கூடிய ஓர் ஆய்வியல் வாகனத்தைப் பயன்படுத்தி தீவிர ஆய்வு செய்து வெளியிட்டுள்ள தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
இக்குழுவில் இடம்பெற்ற இந்திய கடல் உயிரியல் விஞ்ஞானி டாக்டர் பாபன் இங்கோல், சமீபத்தில் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் விளக்கியுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 20 மைல் ஆழத்தில் இந்திய துணைக் கண்டத்தைத் தாங்கியுள்ள புவிப்பாறை, பர்மிய புவிப்பாறையுடன் மோதியதில் 750 மைல் தூரத்திற்கு அப்பகுதி 10 அடி உயரம் மேலெழும்பியது என்றும், மோதியபோது ஏற்பட்ட அந்தப் பிளவு துப்பாக்கியில் இருந்து விடுபடும் தோட்டா செல்லும் வேகத்தை விட இருமடங்கு வேகத்துடன் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதன் விளைவாக 200 ட்ரில்லியன் டன் அளவுள்ள கடல் நீர் மேலே தள்ளப்பட்டது. மேலே தள்ளப்பட்ட அந்த நீர், அதன் மையப் பகுதியில் இருந்து சுற்று வட்டமாக கரைகளை நோக்கி 500 மைல் வேகத்தில் பாய்ந்து சென்றுள்ளது.
அதன் விளைவாக சில இடங்களில் 120 அடி உயரத்திற்கு நீரளவு உயர்ந்ததாக டாக்டர் இங்கோல் கூறியுள்ளார். நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகே இருந்த பண்டா ஆச்சே பகுதியை அது தாக்கியபோது வெளியான ஆற்றலின் அளவு 60 சூறாவளிகள் தாக்கினால் வெளியாகும் ஆற்றலுக்கு இணையானதாக இருந்தது என கூறியுள்ளார்.
அங்கு தாக்கிய 25 நிமிடத்திற்குப் பிறகு 60 அடி உயர பேரலைகள் தாய்லாந்தை தாக்கியுள்ளன. அதன்பிறகே இந்திய கடலோரப் பகுதியையும், இலங்கையையும் ஆழிப்பேரலைகள் மூழ்கடித்தன.
சுனாமிப் பேரழிவு : ஆய்வுகளுக்கு ஊக்கம் தரவேண்டும்
திங்கள், 26 டிசம்பர் 2005
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இந்தோனேசியாவை ஒட்டிய கடற்பகுதியில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 8.3 புள்ளிகளாக பதிவான அந்த நிலநடுக்கம், கடலின் மிக அழமான பகுதியில் ஏற்பட்டதால், சுனாமியின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
அதற்குப் பின் அக்டோபர் 8ஆம் தேதி காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் நிலநடுக்கம், 80,000 பேரை விழுங்கியது. அம்மக்களுக்கு நிவாரண உதவிக ள் அளித்து தற்காலிக ஏற்பாடுகளை செய்து தருவதற்குள் முன் எப்போதும் காணாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் அழிவை நினைத்து அழுவதும், அஞ்சலி செலுத்துவதும், உணர்ச்சிமயமான மானுட வாழ்க்கையின் ஓர் அங்கம்தான் என்றாலும், இப்படிப்பட்ட இயற்கையின் சீற்றங்களும், மாற்றங்களும் ஏன் ஏற்படுகின்றன? அதற்கான காரணிகள் யாவை? என்பதெல்லாம் குறித்து தீவிரமான ஆய்வு தேவை.
இவையெல்லாம் புவி அமைப்பிலும், இயங்குதலிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் வெளிப்பாடே என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், துல்லியமாக விளக்கப்படவில்லை.
விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி இவைகளை விளக்கிட வேண்டும். அதற்கு அரசுகள் பெரும் நிதியுதவி செய்து ஊக்குவித்திடல் வேண்டும். டிசம்பர் 26 அன்று சுமத்ரா அருகே கடும் நிலநடுக்கம் ஏற்படும் என்று சென்னைப் பல்கலையின் செயல்முறை புவியியல் துறையில் நிலநடுக்க முன் கணித்தல் பற்றி ஆய்வு செய்துவரும் என். வேங்கடநாதன் முன்னரே கணித்து அறிவித்திருந்தார். போதுமான விவரங்கள் இல்லாத நிலையிலும் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்பதையும், அது ரிக்டர் 7 புள்ளிகள் வரை இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இப்படிப்பட்ட ஆய்வுகளுக்கு போதுமான நிதியுதவியும், உபகரண வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். அப்போதுதான் எந்தவொரு பெரும் மாற்றத்தையும் துல்லியமாகக் கணித்து முன் நடவடிக்கைகள் எடுக்க இயலும். எனவே அரசு விஞ்ஞான ஆய்வுகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி ஊக்கமளிக்க வேண்டும்.
புவி இயற்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் துல்லியமாக விளக்கப்பட்டு மக்களுக்கு சந்தேகத்திற்கிடமின்றி புரியவைக்கப்பட வேண்டும்.
இயற்கையின் ஒவ்வொரு சீற்றத்தையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அதை தாண்டும் ஆற்றலை வளர்த்துக் கொண்டே மானுடம் முன்னேறி வந்துள்ளது. வரலாறு, நாகரீக வளர்ச்சி என்றெல்லாம் நாம் அறிந்து வரும் அனைத்தும் இயற்கையின் மீது மனிதன் செலுத்தி வரும் ஆளுமையின் வளர்ச்சியே.
அதுபோல, இன்று நம்மை அச்சுறுத்தும் இப்படிப்பட்ட புவியியல் மாற்றங்களை துல்லியமாகக் கண்டறிந்து அவற்றில் இருந்து பாதுகாப்பாக மீண்டு மானுட வாழ்வை பாதுகாப்பானதாக மாற்றும் மார்கத்தை கண்டறிய வேண்டும். இயற்கையின் சீற்றம் அதற்கோர் உந்துதலாகட்டும்