இலங்கை இனச் சிக்கலிற்கு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் ரீதியான தீர்வு காண சிறிலங்க அரசுடன் தாங்கள் செய்துகொண்ட சண்டை நிறுத்த உடன்படிக்கை செத்துவிட்டது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது!
சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்ளத் தயார் என்று இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர் கூறியிருந்ததையடுத்து, சண்டை நிறுத்தம் மீது தங்களுடைய நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட சண்டை நிறுத்த உடன்படிக்கைக்குப் பிறகு சிறிலங்க அரசுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், மாறாக தமிழர்களுக்கு எதிராக நிழல் யுத்தம் முடுக்கிவிடப்பட்டது என்றும் கூறியுள்ள விடுதலைப் புலிகள், ஈழ விடுதலையை வென்றெடுக்க மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிவித்திருப்பது இலங்கை இனச் சிக்கலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மாவீரர் தினத்தையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் போர் நிறுத்தம் செயலற்றதாகிவிட்டது என்றும், தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட யுத்தத்தை சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியிருந்தார்.
சண்டை நிறுத்த உடன்படிக்கை செயலற்றதாகிவிட்டது என்று தாங்கள் கூறுவதற்கான காரணங்களை அந்த உரையிலேயே விளக்கிய பிரபாகரன், "சிங்கள பேரினவாதத்தின் கடுமையான போக்கு தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத் தவிர வேறு எந்த வழியையும் விட்டுவைக்கவில்லை" என்று கூறியது மட்டுமின்றி, "எமது விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தினையும், நீதியினை மதிக்கும் உலக நாடுகளையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்" என்று கூறியிருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அன்றைக்கு கூறியதைத்தான் இன்று அந்த இயக்கம் ஒரு விளக்கமாக அறிக்கை அளித்துள்ளது.
எனவே, இலங்கை இனச் சிக்கலிற்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கான வழிகள் முற்றிலுமாக மூடப்பட்டுவிட்ட நிலையில், அப்பிரச்சனையில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு இருக்கப் போகிறது என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறிலங்க அரசுடனான போர் நிறுத்த உடன்படிக்கை செயலற்றுவிட்டது என்று விடுதலைப் புலிகள் கூறுவதற்கான காரணங்களை நியாயம் அறிந்த எவரும் மறுக்க இயலாது. காரணம், கடந்த 15 மாதங்களில் மட்டும் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிறிலங்க அரசின் முப்படைகளும் நடத்திய தாக்குதல்களிலும், அதனைத் தொடர்ந்து புலிகளுடன் ஏற்பட்ட மோதல்களிலும் 4,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 3,000த்திற்கும் அதிகமானோர் அப்பாவித் தமிழர்களே என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
தமிழர் பகுதிகளில் சிறிலங்க ராணுவம் நடத்திய தாக்குதல்களின் காரணமாக ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டிற்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலைக்குப் பிறகுதான் சண்டை நிறுத்தம் செத்துவிட்டது என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு தாய்லாந்தில் நடந்த முதல் பேச்சுவார்த்தையில் இருந்து அதன்பிறகு டோக்கியோ, பிறகு ஜெனீவா என்று 8 முறை நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட எதையும் சிறிலங்க அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று விடுதலைப் புலிகள் கூறும் குற்றச்சாற்றிற்கு சிறிலங்க அரசு இதுவரை பதிலளிக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
· இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிலங்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தின் ஆதரவுடன் இயங்கிவரும் கருணா இயக்கம் போன்ற ஆயுதக் குழுக்களை முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும், அவர்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என்று தாய்லாந்து பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், 5 ஆண்டுக்காலமாகியும் அது நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இந்த ஆயுதக் குழுக்களின் தாக்குதலினால் தமிழர்களும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, தமிழர்களின் உரிமைக்காக செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளின்
தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த ஆயுதக் குழுக்களின் உதவியுடன் கொல்லப்பட்டுள்ளனர்.
· கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை தலைநகர் கொழும்புவிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள், பேசுபவர்கள், செய்தியாளர்கள், தமிழ் வணிகர்கள் கடத்தி கொல்லப்பட்டுள்ளனர். இதனை ஐ.நா.வின் மனித உரிமை பிரிவு வன்மையாகக் கண்டித்துள்ளது மட்டுமின்றி, அது குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
· இலங்கை இனச் சிக்கலிற்கு இறுதித் தீர்வு எட்டப்படும் வரை வடக்கையும், கிழக்கையும் இணைத்து ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் அளித்தது. ஆனால், அதனை பரிசீலனைக்கு உட்படுத்தாமலேயே சிறிலங்க அரசு நிராகரித்தது.
· 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சுமத்ரா தீவிற்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் உருவான சுனாமி பேரலைகள் இலங்கையை தாக்கியபோது, அதில் தமிழர்கள் வாழும் வட, கிழக்கு மாகாணங்களிலும் பெரும் உயிரிழப்பும், பொருளிழப்பும் ஏற்பட்டது. அம்மக்களின் வாழ்வை புனரமைக்க உலக நாடுகள் அளித்த உதவியை பயன்படுத்திக்கொள்ள விடுதலைப் புலிகளுடன் பி-டாம்ஸ் என்றழைக்கப்படும் சுனாமி நிவாரண ஆளுமை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த அமைப்பு சிறிலங்க அரசமைப்புச்
சட்டத்திற்கு ஏற்புடையதல்ல என்று கூறி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கியது. விளைவு : சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கிட்டவில்லை.
· எல்லாவற்றிற்கும் மேலாக - சிறிலங்க அதிபராக மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்ற பிறகு - கடந்த 15 மாதங்களாக இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பது என்ற பெயரில் சிறிலங்க ராணுவமும், விமானப்படையும் நடத்திய தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் நிலைகளை குறிவைத்து தாக்குவதாகக் கூறிக்கொண்டு குடிமக்கள் வாழும் பகுதிகளின் மீது குண்டுகள் வீசப்பட்டன. அதன்
உச்சகட்டம்தான் முல்லைத் தீவு பகுதியில் இயங்கிவந்த செஞ்சோலை எனும் ஆதரவற்ற சிறார்களின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சாகும். அதில் 70 சிறார்கள் கொல்லப்பட்டனர்.
ஆக, சண்டை நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 5 ஆண்டு காலத்தில் இனச்சிக்கலிற்கு தீர்வு காணும் அமைதி முயற்சியில் ஒரு அடி கூட சிறிலங்க அரசு முன்னெடுக்கவில்லை என்பதும், மாறாக, அது தமிழ் மக்களை ஒடுக்குவதிலும், ராணுவத்தின் பலத்தைக் கொண்டு தங்களுடைய ஆளுமையை விரிவுபடுத்திக் கொள்வதிலும்தான் கவனம் செலுத்தியது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதன் விளைவுதான், தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட யுத்தத்தை தவிர வேறு வழியில்லை என்று புலிகளின்
தலைவர் பிரபாகரன் கூறியது. பிரபாகரன் பேசியதற்குப் பின்னரும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றும் எண்ணத்துடன் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை சிறிலங்க ராணுவமும், விமானப்படையும் தொடர்ந்து வருகின்றன.
அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகள் எதிலும் சிறிலங்க அரசு ஈடுபடவில்லை. இனச் சிக்கலிற்குத் தீர்வாக ஒரு திட்டம் தயாராகி வருவதாக இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிபர் ராஜபக்சே கூறினார். ஆனால், அது குறித்த செய்தி எதுவும் இதுவரை வரவில்லை. அதே நேரத்தில் சிங்கள பேரினவாத இயக்கங்களான ஜனதா விமுக்தி பெரமுணா, ஜாதிக ஹேல உருமயா போன்றவை சண்டை நிறுத்த உடன்படிக்கையை தூக்கி எறிந்துவிட்டு தாக்குதலைத் தொடர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து
வருகின்றன.
இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கை நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் போர்நிறுத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு அவையிலேயே அமளியில் ஈடுபட்டன. கொழும்புவில் பெரும் பேரணியே நடத்தப்பட்டுள்ளது.
இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிவது என்னவெனில், சிறிலங்க அரசோ அல்லது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையோ அல்லது அங்குள்ள தென் இலங்கை அரசியல் கட்சிகளோ தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளன. இந்த யதார்த்த நிலையில், இலங்கை இனச் சிக்கலிற்கு தமிழர்களின் உரிமைகளை பேணக்கூடிய அரசியல் ரீதியான ஒரு தீர்வு எட்டப்படும் என்று நம்புவதற்கு என்ன அடிப்படை உள்ளது?
இந்தச் சூழலில் இந்திய அரசு எப்படிப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்ளப் போகிறது என்பது ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியத் தமிழர்களும், உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல லட்சக்கணக்கான தமிழர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
"இலங்கையின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் உட்பட்டு அந்நாட்டில் வாழும் அனைத்து மொழி, இன மக்களும் சம உரிமையுடன் வாழ வகை செய்யும் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்" எனும் மத்திய அரசின் நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிதத்திலாவது உதவிகரமாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்த நிலைப்பாடு தமிழர்களுக்கு உரிய தீர்வை எட்டுவதற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. இந்த நிலைப்பாடு தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் இன ஒழித்தல் கொள்கைக்கு ஒரு கவசமாகவே இருக்கிறது. இப்படி கூறுவதற்கு காரணம், இந்திய அரசின் நிலைப்பாடு சிறிலங்க அரசிற்கு இதுவரை எந்தவொரு அழுத்தத்தையும் தரவில்லை. மாறாக, தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களும், தமிழர்களின் உரிமைகளை முற்றிலுமாக புறக்கணிக்கும் அதன் நேரடி மற்றும் ரகசியப் போக்கும் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை.
இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதில் சிறிலங்க அரசு எந்தவிதத்திலும் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்கவில்லை. இதனை இலங்கையின் புனரமைப்பிற்கு உதவ முன்வந்த கொடை நாடுகளின் அறிக்கையிலேயே கூறியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் என்கின்ற நிலைப்பாட்டை அங்கீகரித்து இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. ஆனால், இதனை மகிந்தாவின் சிறிலங்க சுதந்திரா கட்சியோ அல்லது முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது ஜனதா விமுக்தி பெரமுணா, ஜாதிக ஹேல உருமய போன்ற சிங்கள இனவாத கட்சிகளோ ஏற்கவில்லை. இந்த நிலையில், அரசியல் ரீதியான தீர்வு எப்படி சாத்தியமாகும்?
எனவே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன ஒடுக்கல் கொள்கையை மறைமுகமாக கடைபிடித்து வரும் சிறிலங்க அரசு, சிங்கள மக்களுக்கு இணையான ஆட்சி மற்றும் அடிப்படை உரிமைகளை தமிழர்களுக்கு அளிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தியத் தமிழர்களுக்கு எதிராகவும் காட்டுமிராண்டித்தனமாகத்தான் சிறிலங்க அரசும், அந்நாட்டு கடற்படையும் செயல்பட்டு வருகின்றன.
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. தமிழக அரசின் வற்புறுத்தலால் மத்திய அரசு பல முறை எடுத்துக் கூறிய பிறகும், மீனவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது கூட ராமேஸ்வரம் மீனவர் ஒருவரை சிறிலங்க கடற்படை சுட்டுக் கொன்றது. இதிலிருந்து ஒன்று வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிலங்க ராணுவமும், விமானப்படையும், கடற்படையும் தமிழர்களை அழித்தொழிக்க வேண்டும் என்கின்ற
மறைமுக திட்டத்துடனேயே செயல்பட்டு வருகின்றன. அதன் வெளிப்பாடுதான் அங்கு அனாதைகள் காப்பகத்தின் மீது குண்டு வீசுவதும், இந்திய கடல் எல்லையில் அத்துமீறிப் புகுந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குவதும் ஆகும்.
எனவே, இலங்கை இனச் சிக்கல் தொடர்பான தனது அணுகுமுறையை மத்திய அரசு மறு சிந்தனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. சர்வதேசப் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும் இந்திய அரசு எடுக்கும் நிலைப்பாடு மதிப்பு வாய்ந்தது. ஏனெனில் அது மானுட உரிமைகளையும், சுதந்திரத்தையும் மதிப்பதாகவும், ஜனநாயக உணர்வுகளுக்கு ஆதரவளிப்பதாகவுமே இருந்து வந்துள்ளது. இலங்கை இனச் சிக்கலிலும் அதன் அணுகுமுறை மாறாவிட்டால் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கும், அழிவுகளுக்கும் ஒருவிதத்தில் இந்தியாவும் காரணமாக நிற்கும் நிலை ஏற்படும்.
இந்திய அரசு சிந்திக்கட்டும். அதன் புதிய அணுகுமுறை இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வுரிமையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒரு தீர்விற்கு வழிகோலட்டும்.