தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் பிற்போக்குதனமான இருக்க கூடாது. வங்கிகள் பழைய பார்வைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மத்திய அரசும், சிட்பி என்று அழைக்கப்படும் சிறு தொழில் வளர்ச்சி வங்கியும் இணைந்து குறுந்தொழில் மற்றும் சிறு தொழில்களுக்கு கடன் உறுதி நிதியை உருவாக்கியுள்ளன. இந்த நிதி சிறு, குறுந் தொழில்களுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 1 லட்சமாவது நபருக்கு கடன் உறுதி ஆணையை வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொணடு, கடன் உறுதி ஆணையை வழங்கிய அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், தொழில் முனைவோருக்கு கடன் கொடுப்பதில் வங்கிகள் பிற்போக்குதனமான பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். குறுந் தொழில்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கு கூடுதலாக ரூ.ஆயிரம் கோடி வழங்கப்படும்.
இந்தியாவில் எல்லா இளைஞர்களும் தொழில் முனைவோராக வருவதற்கு பதிலாக வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பதில்லை. அவர்கள் சொந்தமாக தொழில் துவங்க விரும்புகின்றனர். குறு மற்றும் சிறு தொழில் பிரிவில் அமைதியாக, வெளியே தெரியாத படி அமைதியாக புரட்சி நடந்து வருகிறது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், இந்த பிரிவு உற்பத்தி செய்பவைகளின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. இது ஒவ்வொரு வருடமும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இவை வங்கிகளாலும், நிதி நிறுவனங்களாலும் இனம் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இந்த பிரிவுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்க ஆரம்பிக்க வேண்டும்.
22 லட்சம் குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் மட்டுமே வங்கிகள், நிதி நிறுவனங்களில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் 1 கோடியே 30 லட்சம் தொழில் முனைவோரை எட்டிக் கூட பார்க்கவில்லை.
நான் இந்தியாவில் பல பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது இளம் தலைமுறையினர் தொழில் தொடங்க கடன் கிடைப்பதில் உள்ள பிரச்சனையை கூறுகின்றனர். கடன் கிடைப்பதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு தொழில் முனைவோரும் இடர்பாடுகளை சந்திக்கத் தயாராக உள்ளனர். அதே போல் வங்கிகளும் கடன் கொடுபபதில் உள்ள இடர்பாடுகளை, பிரச்சனைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
கடன் உறுதி திட்டத்தின் படி, அதிக எண்ணிக்கையிலான தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட வேண்டும். இந்த வருட இறுதிக்குள் மேலும் 50 ஆயிரம் குறு மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட வேண்டும்.
தற்போது இந்த திட்டத்தின் படி ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இது ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும்.
இந்தி திட்டத்திற்காக மொத்தம் ரூ.1,584 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.1,257 கோடி வழங்கியுள்ளது.
இதை ரூ.2 ஆயிரத்து 500 கோடியாக உயர்த்த மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. கூடுதல் நிதி தேவைப்படும் போது மத்திய அரசு உடனே நிதி வழங்கும். அதே நேரத்தில் குறுந்தொழில்களுக்கு தேவைப்படும் போது கடன் உதவி கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும் என்று சிதம்பரம் கூறினார்.