சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு - கருத்து வரவேற்பு!
, சனி, 7 ஜூன் 2008 (16:33 IST)
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிப்பது பற்றியும், உள்நாட்டு பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்களை அனுமதிப்பது பற்றி பொதுமக்கள், வியாபாரிகள் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் எனறு நாடாளுமன்ற நிலைக்குழு கூறியுள்ளது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்க கூடாது என்று வியாபாரிகள் கூறிவருகின்றனர். இதேபோல் உள்நாட்டு நிறுவனங்களும் குறிப்பிட்ட பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். காய்கறி, பழங்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் கூறிவருகின்றனர். மத்திய அரசு இந்தியன் கவுன்சில் பார் ரிசர்ச் ஆன் இன்டர்நேஷனல் எகானாமிக் ரிலேசன் (சர்வதேச பொருளாதார உறவு ஆய்வு நிறுவனம்) என்ற ஆய்வு நிறுவனத்தை சில்லரை வர்த்தகத்தை பற்றி ஆய்வு செய்து கருத்து கூற நியமித்தது. இந்த ஆய்வு நிறுவனம் இந்தியாவில் சில்லரை வணிகம் வளர்ந்து வருகிறது. இது 2011-12 ஆம் ஆண்டுகளில் 590 பில்லியன் டாலர் அளவிற்கு வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சில்லரை வணிகத்தை நவீன மயமாக்கும் வகையில், இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான உரிமம் (லைசென்ஸ்) வழங்கும் கொள்கை கடைபிடிக்க வேண்டும். தற்போது சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிறு கடைகளில் (மளிகை கடை) 12 விழுக்காடு மட்டுமே வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் பெறுகின்றன. இந்த சிறு கடைகள் நவீனமயமாகும் வகையில் அவைகளுக்கு குறைந்த வட்டியில் வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் கிடைக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் சமர்பித்த ஆய்வறிக்கையில் கூறியிருந்தது. இந்த ஆய்வு நிறுவனம் 10 பெரிய நகரங்களில் உள்ள 2,020 சிறு மளிகை கடைகளிலும், 1,318 நவீன சூப்பர் மார்க்கெட் மற்றும் பெரிய அளவு கடைகளிலும், 100 இடைத் தரகர்கள், 197 விவசாயிகளிடம் ஆய்வு நடத்தியது. சில்லரை வணிகத்தில் அந்நிய நாடுகள் மற்றும் உள்நாட்டை சேர்ந்த பெரிய நிறுவனங்களை அனுமதித்து, சில்லரை வணிகத்தை நிறுவனமயமாக்கினால் லட்சக்கணக்கான மளிகை வியாபாரிகளும், சில்லரை விற்பனையாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி, இந்த ஆய்வு அறிக்கையை சிறு சில்லரை வணிகர்கள் நிகாரித்தனர். வர்த்தக அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு டாக்டர் முறளி மனோகர் ஜோசியின் தலைமையில் உள்ளது. இதில் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலைக்குழு ஏற்கனவே சில இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியுள்ளது. அத்துடன் சிலரின் கருத்துக்களை நேரடியாக பதிவு செய்துள்ளது. தற்போது இந்த நிலைக்குழு சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிப்பது பற்றியும், உள்நாட்டு பெரிய தொழில், வர்த்தக நிறுவனங்களை அனுமதிப்பது பற்றி பரந்த அளவில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்ள உள்ளது. இந்த நிலைக்குழுவில் கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் கருத்துக்கள்,. ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் எழுதி அனுப்பலாம். நிலைக்குழுவின் முகவரி: திரு. சுரேந்தர் குமார் வாட்ஸ், இயக்குநர்,மாநிலங்களவை செயலகம்,240,
இரண்டாவது மாடி,நாடாளுமன்ற அலுவகம் விரிவுபுது டெல்லி - 110 001தொலைபேசி : 23034240தொலை நகல் : 23013158
மின்னஞ்சல் : [email protected] இந்த நிலைக்குழுவுக்கு தெரிவிக்கும் கருத்துக்கள், ஆலோசனைகள் ரகசியமான ஆவணமாக கருதப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.