சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கான டயர், பேருந்து டயர்கள் மீது குவிப்பு வரி விதிக்க வேண்டும் என்று டயர் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
சீனாவில் இருந்து கடந்த ஐந்து வருயங்களில் இறக்குமதி செய்யப்படும் டயரின் அளவு 1300 விழுக்காடு அதிகரித்துள்ளது. மத்திய அரசு சீன டயர்கள் மீது உடனடியாக குவிப்பு வரி (ஆன்டி-டம்பிங்) போட வேண்டும்.
மத்திய அரசின் அந்நிய வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரப்படி, சீனாவில் இருந்து 2003-04 ஆண்டில் 88 ஆயிரம் டயர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இது 2007-08 ஆம் ஆண்டில் 12.17 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 1300 விழுக்காடு உயர்வு.
இந்தியாவில் தயாரிக்கப்படும் டயர்களின் விலையைவிட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டயர்கள் விலை 30 விழுக்காடு குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.
சில இறக்குமதியாளர்களும், வியாபாரிகளும் சீன டயர்களின் விலையை குறைத்து காண்பித்து இறக்குமதி செய்கின்றனர். இவர்கள் எவ்வித மதிப்பு கூட்டு வரியும் செலுத்தாமல், குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் மத்திய அரசுக்கு மாதத்திற்கு ரூ.60 முதல் 80 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த டயார்கள் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால், இதை வாங்குபவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் புதிய வாகனங்களில் தேய்மானத்திற்கு பிறகு மாற்றப்படும் 86.47 லட்சம் டயர்களில் 14 விழுக்காடு தான் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்து டயர்களில் 85 விழுக்காடு சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது என்று டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குநர் ராஜூவ் புத்ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.