நூல் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை குறுகிய கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய ஜவுளித் தொழில் குறிப்பிடத் தக்க அந்நிய செலாவணியை ஈட்டுவதோடு, மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக திகழ்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜவுளித் தொழில் பெரிய அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஆண்டுக்கு ரூ.11,000 கோடி அளவிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டி வருகிறது.
இந்நிலையில், ஜவுளித் தொழில் பல பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை உருவாகியுள்ளது. அண்மைக் காலமாக நூல் விலைகள் 10 முதல் 15 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 16ஆம் தேதி மாநில அளவிலான வேலை நிறுத்த போராட்டத்திற்கு பெரிய ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
75,000 பேர் வேலைவாய்ப்பு!
கேரளாவில் உள்ள கண்ணூர், அரியானாவில் உள்ள பானிபட் ஆகியவற்றைப் போல தமிழகத்தில் உள்ள கரூர், பெட் ஷீட்டுகள், மேஜை விரிப்புகள், டாய்லெட் மற்றும் சமையலறை பொருட்கள் போன்றவற்றை தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் 75,000 பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சர்வதேச அளவில் போட்டியிட வசதியாக சிட்டா நூல் மீதான விற்பனை வரி ரத்து, ஒவ்வொரு ஆலைக்கும் மாதம் இருமுறை 500 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் என சில நடவடிக்கைகளை மாநில அரசு ஏற்கனவே எடுத்துள்ளது.
நூல் விலை உயர்வு பிரச்சனையை பொறுத்தவரை நியாயமான விலையில் நூல் கிடைக்கச் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜவுளி கட்டுப்பாடு உத்தரவை அமல் செய்வது, பருத்தி ஏற்றுமதி மீது கட்டுப்பாடு விதிப்பது, உள்நாட்டு ஜவுளிகளுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்புகள் வழங்குவது என இந்த நடவடிக்கைகளை குறுகிய கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
இப்பிரச்சனையில் நீங்கள் (பிரதமர்) தலையிட்டு ஜவுளி அமைச்சகம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களுக்கு உத்தரவு பிறப்பித்து, தமிழகத்தில் ஜவுளி ஆலைகள் மூடப்படுவதையும், இதனால் வேலைவாய்ப்பின்மை ஏற்படுவதையும் உடனடியாக தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.