வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று கடந்த ஒருவருடமாக இல்லாத அளவுக்கு குறைந்தது.
தொழில் துறை உற்பத்தி குறைந்ததாக நேற்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தகவல், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் படிப்படியாக பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுவது போன்ற காரணங்களால் டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. நேற்றே டாலரின் மதிப்பு ரூ.42 ஐ தாண்டியது.
மே 2 ந் தேதியில் இருந்து நேற்று வரை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.6 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த வருட துவக்கத்தில் இருந்து 6.5 விழுக்காடு சரிநதுள்ளது.
சென்ற வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
அந்நியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடியும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ.42.05 ஆக முடிந்தது. இது சென்ற வாரம் வெள்ளிக் கிழமையை விட 43 பைசா அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறை உற்பத்தி பாதிப்பு, ஏற்றுமதி மீதான வரி அதிகரிப்பு, பணவீக்கம விகிதம் அதிகரிப்பது, பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களினால் டாலரை வாங்குவதில் அதிக அளவு பெட்ரோலிய நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலர் ரூ.41.96/ 41.98 என்ற அளவில் இருந்தது.
பிறகு வர்த்தகம் தொடங்கிய போது இந்திய ரூபாயின் அதிக அளவு சரிந்து, 1 டாலர் ரூ.42.22 என்ற அளவில் விற்பனையானது.
பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து அதிகரித்தன. இதனால் அந்நிய செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்தது. 1 டாலர் ரூ.42.09/42.10 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 4 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 42.05
அந்நியச் செலாவணி சந்தையில் தொழில் நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும் தினசரி டாலர் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். அதே நேரத்தில் டாலரின் வரத்து குறைந்த அளவு இருக்கின்றது. இதனால் மேலும் டாலரின் மதிப்பு உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் டாலரின் மதிப்பு ரூ.42.50 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்நியச் செலாவணி நிபுணர்கள் கூறுகின்றனர்.