உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மானிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்று மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று பட்ஜெட் விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய சிதம்பரம், அரிசி, கோதுமை ஆகியவை தேவையை விட, அதிக அளவு உற்பத்தியாகி உள்ளது. இதனால் இவைகளின் தட்டுப்பாடு ஏற்படாது. 2007-08 ஆம் ஆண்டில் 95.68 மில்லியன் டன் நெல் உற்பத்தியாகியுள்ளது. அதே போல் கோதுமை உற்பத்தி 76.78 டன்னாக உள்ளது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் பேசும் போது, இரண்டு உணவு தானியங்களும் இதுவரை இல்லாத அளவு உற்பத்தியாகியுள்ளன. உணவுப் பொருட்களின் உற்பத்தியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை.
நேற்றைய நிலவரப்படி (ஏப்ரல் 28 ) கோதுமை 134 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 76.32 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வருடம் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கோதுமை விளைச்சல் அபரிமிதமாக இருக்கின்றது. இதனால் கொள்முதல் இலக்கான 150 லட்சம் டன்னை தாண்டிவிடும்.
ஆந்திரா, ஒரிசா, சத்தீஷ்கர் மாநில விவசாயிகளின் முயற்சியால் நெல் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதுவரை 229 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் நெல் கொள்முதல் 270 லடசம் டன்னை எட்டிவிடும்.
நியாயவிலை கடைகளில் சமையல் எண்ணெய் மானிய விலையில் வழங்கப்படும். 1 லிட்டர் சமையல் எண்ணெய்க்கு அரசு ரூ.15 மானியம் வழங்கும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.