ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் சலுகை ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்தை விட (பிரைம் லெண்டிங் ரேட்) குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகை சென்ற மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது இச் சலுகையை மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
இதன் படி ஏற்றுமதியாளர்கள் சரக்குகளை அனுப்பும் முன்பு வழங்கப்படும் கடனுக்கு 180 நாட்களுக்கு அதிகபட்சமாக 4.5 விழுக்காடும், சரக்கு அனுப்பிய பிறகு வழங்கப்படும் கடனுக்கு 90 நாட்களுக்கு அதிகபட்சமாக 6.5 விழுக்காடு வரை வட்டி சலுகை வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அதிகபட்ச சலுகையை விட குறைவான வட்டிக்கு வங்கிகள் கடன் வழங்க கூடாது. அதே நேரத்தில் வங்கிகள் அதிகபட்ச வட்டி விகிதத்தை நிர்ணயிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.