தங்கம் வெள்ளி முன்பேர வர்த்தகத்தை தடை செய்யக் கோரி திருச்சியில் இன்று பொற்கொல்லர்களும், திருச்சி நகை வியாபாரிகளும் உண்ணாவிரதம் இருந்தனர்.
முன்பேர சந்தையில் தங்கம், வெள்ளி வர்த்தகம் அனுமதிக்கப்படுவதால் இதன் விலைகள் செயற்கையாக உயர்த்தப்படுகின்றன. தங்கம, வெள்ளியை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு பதிலாக, ஊக வணிகத்தில் ஈடுபடுபவர்கள் விலையை உயர்த்துகின்றனர் என்று நகை வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தங்கம், வெள்ளி ஆகிய அரிய உலோகங்களின் வர்த்தகத்தை மத்திய அரசு முன்பேர சந்தையில் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விஸ்வகர்மா பொற்கொல்லர் சங்கத்தினரும், திருச்சி நகை வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு விஸ்வகர்மா பொற்கொல்லர் சங்க செயலாளர் கிருஷ்ணன், திருச்சி நகை வியாபாரிகள் சங்க செயலாளர்கள் என்.சந்திரசேகரன், மோதி ஆர். தண்டாயுதம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்பேர சந்தையால் தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் தங்க நகை வாங்குவதை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
இதனால் உடனடியாக மத்திய அரசு இரண்டு அரிய உலோகங்களின் மீதான முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சியிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளனர்.