வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் அதிக மாற்றமில்லை.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.39.97/39.98 என்ற அளவில் இருந்தது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.39.96/39.97.
பங்குச் சந்தை காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் நிலைமையை பொறுத்து டாலர் மதிப்பு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு குறைவதற்கு அனுமதிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதை அனுமதிக்குமா என வர்த்தகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மற்ற நாடுகளில் அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் 1 டாலர் ரூ.39.93 முதல் ரூ.40 என்ற அளவிலேயே இருக்கின்றது. இதில் மாற்றம் ஏற்பட்டால், உபரியாக உள்ள டாலரை, ரிசர்வ் வங்கி தலையிட்டு வாங்குகிறது.
இந்தியாவின் அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும்பாலும் பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டை பொறுத்தே இருக்கின்றது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் இந்த மாதத்தில் மட்டும் 185 மில்லியன் டாலரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளன. இந்த வருடத்தில் மட்டும் இது வரை சுமார் 3 பில்லியன் டாலர் திரும்ப பெற்றுள்ளன.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சென்ற வருடம் 17.4 பில்லியன் டாலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்தன. இதனால் ரூபாயின் மதிப்பு 12 விழுக்காடு அதிகரித்தது.