Publish Date: Fri, 11 Apr 2008 (19:03 IST)
Updated Date: Fri, 11 Apr 2008 (19:03 IST)
சிமெண்ட் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு சிமெண்ட் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
உள்நாட்டின் தேவையை விட, சிமெண்ட் உற்பத்தி குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதாக இன்று புதுடெல்லியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும் போது, சிமெண்ட் மற்றும் உருக்கு ஏற்றுமதி மேம்பாட்டிற்காக வழங்கி வந்த ஊக்கத் தொகையும் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அயல் நாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிடும்.
சிமெண்ட் விலை தொடர்ந்து அத்கரித்து வருகிறது. இந்த மாதம் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் விலையை 3 முதல் 4 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன. இதனால் 50 கிலோ உள்ள போர்லான்ட் சிமெண்ட் விலை ரூ.5 முதல் 7 வரை உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல், எரி எண்ணெய் விலை உயர்வு, மதிப்பு கூட்டு வரி போன்றவையை காரணம் என்று சிமெண்ட் ஆலைகள் கூறுகின்றன.
இன்று மத்திய அரசு அயல் வர்த்தக கொள்கையை அறிவித்த உடனேயே, அரிசி, உருக்கு, சிமெண்ட் ஏற்றுமதிக்கு வழங்கி வந்த ஊக்க தொகையை நிறுத்துவதாக அறிவித்தது. ஏற்கனவே அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இன்று சிமெண்ட் ஏற்றுமதிக்கும் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.