''விலைகள் அதிகரித்து பணவீக்கம் உயர்வதற்கு மத்திய அரசின் கொள்கைகள் காரணமல்ல'' என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பணவீக்கம் பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் கபில் சிபில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விலை உயர்வு, அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்து கவலை கொண்டுள்ளோம். இதை நாங்கள் மாய மந்திரத்தால் நிவர்த்தி செய்ய முடியாது. இதற்கு தேவைப்பட்டால், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உலக அளவில் பருவ நிலை மாற்றத்தால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது. அத்துடன் உணவு தானியங்களின் கையிருப்பு குறைவாக உள்ளது. பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளில் தேவை அதிகரித்து வருகின்றது. பயோ-ப்யூல் எனப்படும் எரி பொருளுக்காக உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற காரணங்களினால் விலைகள் உயர்ந்து, பணவீக்கம் அதிகரிக்கின்றது.
விலை உயர்வுக்கும், பணவீக்கம் அதிகரிப்பதற்கும் உலக அளவில் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் பணவீக்கத்தை இறக்குமதி செய்கின்றோம். இந்தியாவைவிட பல்வேறு நாடுகளில் பணவீக்கம் அதிக அளவு இருக்கின்றது. சீனாவில் 8.7%, ரஷியாவில் 11.9%, துருக்கியில் 8 விழுக்காடாக உள்ளது என்று கபில் சிபல் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் உணவு தானியங்களில் விலை 105 விழுக்காடும், சமையல் எண்ணெய் விலை 71 விழுக்காடும் அதிகரித்துள்ளன. தேங்காய் எண்ணெய் 67%, பாமாயில் 52%, சோயா எண்ணெய் 62%, அரிசி 72%, இறைச்சி 72%, வாழைப் பழம் 76%, சர்க்கரை 35% அளவு விலை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
மத்திய அரசு ஏற்கனவே விலை உயர்வை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எந்த பலனையும் உண்டாக்கவில்லையே என்று கபில் சிபலிடம் கேட்டதற்கு, உடனே பலன் கிடைப்பதற்கு, இது பரிசோதனை கூடத்தின் சோதனை அல்ல. என்று பதிலளித்த அமைச்சர், ஏழைகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, மத்திய அரசு பொது விநியோக துறைமூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது நன்கு இயங்கி வருகிறது. பொதுவிநியோகத்திற்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பில் உள்ளன என்று கூறினார்.