பணவீக்க விகிதம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 7.41 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
உணவு தானியங்கள், காய்கறி, பழம், உருக்கு உட்பட பல்வேறு பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
இதனால் பணவீக்கம் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவிற்கு மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.41 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் (மார்ச் 21 ஆம் தேதி) பணவீக்கம் 7 விழுக்காடாக இருந்தது.
பணவீக்கத்தை கணக்கிடும் மொத்த விலை பட்டியலின் அளவுகோளின் படி இந்த வாரத்தில் காய்கறி விலை 4.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் 1.8, உணவு தானியங்கள் 1.2 விழுக்காடு உயர்ந்துள்ளது.
மொத்த விலை பட்டியலில் கணக்கிடப்படும் விலையை விட, பொது மக்கள் கடையில் வாங்கும் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது என்று கூறினார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், உருக்கு உட்பட பல்வேறு உலோகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உருக்கு விலை 5.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. மற்ற உலோகங்களின் விலை 5 விழுக்காட்டிற்கம் மேல் அதிகரித்துள்ளது.
மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் எல்லா பொருட்களின் மொத்த விலை குறியீட்டு எண் 226.0 ஆக அதிகரித்து உள்ளது. இது சென்ற வாரம் 224.8 ஆக இருந்தது.
உணவுப் பொருட்களின் விலை குறியீட்டு எண் 0.4 விழுக்காடு அதிகரித்து குறியீட்டு எண் 227.2 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் பருப்பு வகைகள், பழங்கள், காய்கறி, மீன், தனியா, நறுமன பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது.
எள், கொப்பரை தேங்காய் விலை 4 விழுக்காடு உயர்ந்துள்ளது.