உணவுப் பொருட்கள், உருக்கு, சிமென்ட் போன்றவைகளை பதுக்கி, லாபம் பார்ப்பவர்களை அரசு அனுமதிக்காது என்று மத்திய அமைச்சர் கமல்நாத் எச்சரித்தார்.
சிங்கப்பூரில் இன்று இந்திய வர்த்தக மற்றும் கலாச்சார விழாவை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் துவக்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க அரசு இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. அத்துடன் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது தொழில் மேம்பாட்டு சட்டம் 18 ஜி பிரிவின் படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்படாது என அரசு கருகிறது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால், இந்தியாவில் ஏற்படும் பாதிப்பு பற்றியும், அதிகரித்து வரும் விலைகள் பற்றியும் அரசு கவலை கொண்டுள்ளது. இந்தியாவுக்கு உள்ள பெரிய பிரச்சனை உணவு பொருட்களை தேவையான அளவு விநியோகம் செய்வதே, குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு உணவுப் பொருட்களை கிடைக்க செய்வதே என்று கூறிய கமல்நாத், ஆசிய நாடுகளில் உணவுப் பொருட்கள் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதையும் எடுத்துக் காட்டினார்.
அவர் மேலும் பேசுகையில், இந்திய நாடாளுமன்றத்தில் வரும் 11 ந் தேதி வேலை வாய்ப்பு அளித்தல் உட்பட வர்த்தகம் தொடர்பான பல சலுகைகள் அறிவிக்க போகின்றேன்.
இந்தியா அடுத்த இரண்டு மாதங்களில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்புடன் (ஆசியான்) பல வருடங்களாக பேச்சு வார்த்தை நடந்து வரும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் என்று கமல்நாத் கூறினார்.