மத்திய அரசு சமையல் எண்ணெயின் இறக்குமதி வரியை நீக்கியதால், இதன் விலை குறைந்தது.
சமையல் எண்ணெய் உட்பட உணவுப் பொருட்களின் வரி உயர்வால் பல்வேறு தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்துடன் ரிசர்வ் வங்கி, மத்திய நிதி அமைச்சகம் கணித்து இருந்ததை வி பணவீக்க விகிதம் எகிறியது.
இதன் பாதிப்பு இந்த வருடம் நடைபெற உள்ள டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சட்ட சபை தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல்களில் கடுமையாக இருக்கும். அத்துடன் சமீபத்தில் நடந்த குஜராத் உட்பட சில மாநில தேர்தல்களிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கு காரணம், உலக அளவில் இதன் விலை உயர்ந்து இருப்பதுதான். அதே போல் பொருளாதார நெருக்கடியும் பணவீக்கம் அதிகரிப்பதற்கு காரணம், மற்ற நாடுகளில் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியே என்று கூறிவந்த காங்கிரஸ் தலைமையும், மத்திய அமைச்சர்களும் கூறிவந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு நேற்று சுத்திகரிக்கப்டாத சமையல் எண்ணெய் வரியை முழுமையாக நீக்கியது. அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயின் இறக்குமதி வரியை 7.5 விழுக்காடாக குறைந்தது.
இதன் எதிரொலியாக பல்வேறு நகரங்களிலும் உள்ள மொத்த சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்தது. மும்பையில் மட்டும் சமையல் எண்ணெய் விலை சராசரியாக டன்னுக்கு ரூ.5,000 வரை குறைந்தது. இந்தூரில் சோயா எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.6 வரை குறைந்தது.
சோயா எண்ணெய்க்கு இறக்குமதி வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால், இதன் விலை உள்நாட்டில் டன்னுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 8,000 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. பலரக சமையல் எண்ணெய் விலைகளும் கிலோவுக்கு ரூ.3 முதல் 5 வரை குறைய வாய்ப்பு உள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வரி நீக்கம், குறைவு நேற்று பண்டக முன்பேர சந்தையிலும் எதிரொலித்தது. சோயா எண்ணெய் வித்து, சோயா எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தன. இதன் விலைகள் முன்பேர சந்தையில் அனுமதிக்கப்பட்ட 4 விழுக்காட்டை விட குறைந்தது. இதனால் பத்து நிமிடம் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் வர்த்தகம் தொடங்கிய போது, அதிக அளவு வர்த்தகர்கள் வாங்குவதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை. இதன் விலைகள் முன்பேர சந்தையிலும் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கின்றனர்.