உருக்கு, சிமெண்ட், பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசி ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கி வந்த வரிச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள், உலகச் சந்தையில் போட்டியிடுவதற்கு உதவியாக, பல்வேறு வரிச் சலுகைகளை மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி போன்றவற்றில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த வரிகளை ஏற்றுமதியாளர்கள் முதலில் கட்டி விடுவார்கள். பிறகு ஏற்றுமதி செய்த பொருட்களுக்கு செலுத்திய வரியை, மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்வார்கள். இந்த திட்டம் டூட்டி எல்டைல்ட்மென்ட் பாஸ் புக் ஸ்கீம் என அழைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி ஏற்றுமதி செய்த பொருட்களுக்கு செலுத்திய வரி பாஸ்புக்கில் பதிவு செய்யப்படும். இதை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அரசு திருப்பி கொடுக்கிறது.
உள்நாட்டில் உருக்கு, இரும்பு, சிமெண்ட், அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உருக்கு, சிமெண்ட், அரிசி ஏற்றுமதிக்கான வரி சலுகையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்நிய நாடுகளுடனான வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த மத்திய வர்த்தக துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை செய்தியாளர்களிடம் பேசுகையில், இதன் விலைகள் ஏற்கனவே அதிக அளவு உள்ளன. மேலும் விலை உயர்வதை அரசு விரும்பவில்லை. உள்நாட்டில் பற்றாக்குறை இருக்கும் போது, ஏற்றுமதிக்கு ஏன் வரிச் சலுகை வழங்க வேண்டும் என்று கூறினார்.