வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 பைசா குறைந்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.16/40.17 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 2 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலரின் மதிப்பு ரூ. 40.14/40.15.
நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், இந்திய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்தே குறியீட்டு எண்கள் சரிந்து வருகின்றன. இதனால் அந்நிய செலாவணி, மூலதனச் சந்தையில் இருந்து வெளியேறுகின்றது.
இதுவே டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். அத்துடன் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறும் மூலதனம், பண்டக சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
உலக அளவில் அதிக அளவு பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா. இதன் இருப்பு குறைந்ததாக வந்த தகவலை அடுத்து, உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 100 டாலரில் இருந்து 105 டாலராக அதிகரித்தது.
அத்துடன் பெட்ரோலிய நிறுவனங்களும் டாலரை வாங்க துவங்கியுள்ளன. இந்த காரணங்களினால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.